Friday, May 28, 2010

எம்.ஜி.ஆர் 3


வணக்கம்....
இவ்வாறாக மக்கள் தலைவர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டிருத்த வேலையில் அந்த துயர சம்பவம் நடந்தேறியது.

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம்பீறிட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.

துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர். தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான ராதா, காமராஜரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.க. அரசு அண்ணா தலைமையில் அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட எம்.ஜி.ஆறும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும்.

Wednesday, May 26, 2010

எம்.ஜி.ஆர் 2


வணக்கம்...
என்னுடைய முந்தைய பதிவில் எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு முன்னுரை எழுதியிருந்தேன். இந்த பதிவில் அவர் கதாநாயகன் ஆவதற்குப் பட்ட கஷ்டங்களை எழுதப் போகிறேன்.


”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போரட்டமாகவே இருக்கிறுது!”

இப்படிச் சொன்னவர், காலம் சென்ற புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!

இதை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்வ சாதாரணமாக, பேச்சோடு பேச்சாகச் சொன்னார். ஆனால், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள்தாம் எத்தனை எத்தனை!

‘எம்.ஜி.ஆர்!’ என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், - ஏன், உலகம் முழுவதிலும் - உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?

அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் எத்தனை!

அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!

அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!

ஏழு வயதிற்குள் எத்தனை நாள் வறுமைத் தீயில் வாடி இருக்கிறார்!

ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடக்க் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நாடறிந்த நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெறுவதற்குள் அவர் பட்ட அல்லல்கள் எத்தனை! ஆசிரியர்களிடம் பெற்ற பிரம்படிகள் எத்தனை!

நாடக உலகிலிருந்து திரைப்பட உலகில் புகுவதற்காக அவர் நடந்து நடந்து தேய்ந்த செருப்புகள் எத்தனை!

‘சதி லீலாவதி’ என்னும் படத்தில் ஒரு சாதாரண வேடத்தில் அறிமுகமாகி, ‘ராஜகுமாரி’ என்னும் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிப்பதற்குள் இடையில் அவர் அடைந்த இன்னல்கள் எத்தனை! சந்தித்த ஏற்ற இறக்கங்கள் எத்தனை!

ராஜகுமாரி படத்தை அடுத்து பல படங்களில் சரித்திர காலக் கதாநாயகன் வேடம் தாங்கியே நடித்து வந்த அவரது திரைஉலக வா.க்கை, சமூகப்படங்கள் தயாராகி மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தோடு முடித்துவிட்டதாக ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர்!

சமூகப்பட நாயகனாகவும் தம்மால் சிறப்பாக நடிக்க முடியும்; எந்த வேடத்திலும் தம்மால் ஒளிவீசிப் பிரகாசிக்க முடியும் என்று அவர் நிரூபித்ததை நாடறியும். இன்று அது வரலாறு.

ஆனால் அப்படி நிரூபிப்பதற்குள் அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை!

ஆரம்ப காலத்தில் கதர் வேட்டி, கதர்ச் சட்டை அணிந்து சிறிய ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் தரித்துக் காங்கிரஸகார்ராக இருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து, அவரது அறிவார்ந்த பேச்சாலும், ஆணித்தரமான எழுத்தாலும் கவரப்பட்டு, அவர் காட்டிய மெய்யன்பால் திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாய் உழைத்தார். உயர்ந்தார். அண்ணாவின் ‘இதயக்கனி’ யாகவும் மாறினார்.

ஆனால் அந்த இதயக்கனியை கன்றிவிடும்படி கல்லால் அடித்தவர்களும், சொல்லால் அடித்தவர்களும் எத்தனை பேர்! அவர்களை எதிர்த்துக் கழக்த்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றன.

ஊறரிந்த நடிகர் ஆகி, ஒப்பற்ற ‘புரட்சி நடிகர்’ ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட காலத்திலுங்கூட அவர் சென்ற வழி மலர் தூவப்பட்ட பாதையாகவா இருந்தது? கல்லும், முள்ளும் நிரம்பி அவை அவர் காலைக் குத்திக் கிழித்துக் குருதியைக் கொட்டச் செய்தனவே!

Monday, May 24, 2010

எம்.ஜி.ஆர் 1எம்.ஜி.ஆர் பற்றி பதிவு எழுத வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் ஒரு பதிவில் அவரைப் பற்றி எழுதி விட முடியாது என்ற முடிவுக்கு வரவே ஒரு தொடர் பதிவு அவரைப் பற்றி எழுதலாம் என்று முடிவெடுத்து இனிதே எனது பதிவை ஆரம்பிக்கின்றேன். இந்த பதிவில் வரும் செய்திகள் அனைத்தும் நான் அறிந்த, இணையத்தளத்தில் நான் சேகரித்த மற்றும் பிறர் சொல்லி கேள்விப்பட்டவை..... எம்.ஜி.ஆர் ஆட்சி புரிந்த காலத்தில் நானும் பிறந்தேன் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.


1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் 135. இவற்றுள் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை 115.


எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.


எம்.ஜி.ஆர். ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கலைஞர் கருணாநிதியுடன் கொண்ட நட்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.


தொடரும்.......


நான் திமுகவில் சேர முடிவெடுத்தால் யாரும் அதைத் தடுக்க முடியாது


நான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது. அதேசமயம், நான் திமுகவில் சேர வேண்டும் என்று என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

சமீபத்தில்தான் நடிகை குஷ்பு திடீரென திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது என வடிவேலு கூறியிருப்பது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மாடக்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா, கடந்த 16ம் தேதி தொடங்கியது.கடைசி நாளான நேற்று மயில், ரதம், பால் காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழாவில் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரியகருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் தற்போது இல்லை. என்னை திமுகவில் இணையும்படி யாரும் வற்புறுத்தவும் இல்லை. மக்களுடன் மக்களாக இருந்து அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.திமுகவில் சேர வேண்டுமென முடிவெடுத்தால் அந்த முடிவில் இருந்து என்னை யாரும் தடுத்து விடமுடியாது என்றார் வடிவேலு.சிங்கமுத்து விவகாரத்தில் சிக்கி படாதபாடு பட்டு வருகிறார் வடிவேலு.

கமிஷனரை நேரில் பார்த்தும், பல்வேறு புகார்கள் கொடுத்தும் சிங்கமுத்து கைது செய்யப்படாமலேயே இருந்து வந்தார். ஆனால் வடிவேலுவின் மேலாளர் சத்தம் போடாமல் திடீரென ஒரு புகார் கொடுத்த அடுத்த சில மணி நேரங்களில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் அவர் திமுகவில் சேருவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகளின் தொல்லைகளினால் மக்கள் அவதிப்பட்டது போக இது மாதிரி காமெடி நடிகர்களின் பிடியிலும் மக்கள் அவதி படுவது தான் விதி என்றால் தமிழ்நாட்டின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.... இப்பொழுது தான் சிங்கமுத்துவின் கைது நடவடிக்கையின் பின்னணியே தெரிகிறது.... அதற்குப் பரிகாரமாகத் தான் வடிவேலுவின் இந்த பேச்சு.....

Tuesday, May 18, 2010

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மரணம்


பிரபல எழுத்தாளரு‌ம், நாவலா‌சி‌ரியருமான அனுராதா ரமணன் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.அனுராதா ரமணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அடிக்கடி பரிசோதனை செய்வது வழக்கம்.அதுபோல கடந்த 5ஆ‌ம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அந்த மரு‌த்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு பலமுறை செய்யப்பட்டது.இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. மரு‌த்துவ‌ர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.


எழுத்தாளர் அனுராதா ரமணன், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், `நித்தம் ஒரு நிலா', `முதல் காதல்' உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை எழுதி உள்ளார்.இவர் எழுதிய சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டன. அதுபோல பாசம், புன்னகை, அர்ச்சனை பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்பட படைப்புகள் டி.வி. நாடகங்களாக்கப்பட்டன.1978ஆம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் க‌ட்‌சி சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றார். இப்படி பல பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றவ‌ர் அனுராதா ரமண‌ன்.

Thursday, May 13, 2010

தங்க நாற்கர சாலை


இந்த தங்க நாற்கர சாலை திட்டத்தைப் பற்றி நாம் அனைவருமே நன்கு அறிவோம். இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவுவதில் இந்த திட்டத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இந்த திட்டத்தின் மூலம் பயனடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் முதல் பயண நேரம் வரை மிச்சமோ மிச்சம்.... அதுவும் லாரி ஓட்டுனர்களுக்காக கட்டி வைத்துள்ள தங்குமிடம் மற்றும் கழிப்பிட வசதிகள் அருமையோ...அருமை...
அது மட்டுமல்லாது தமிழகத்தின் கடை கோடியிலிருந்து கோட்டை வரை வரவேண்டுமானால் எத்தனை எத்தனை கஷ்டங்கள். கஷ்டங்கள் அல்லாது வரும் வழியில் தான் எத்தனை விபத்துகள், உயிரிழப்புகள்..... அதுவும் இந்த திருச்சியிலிருந்து செங்கல்பட்டு வரும் வரை நமக்கெல்லாம் உயிர் போய் உயிர் வந்துவிடும். முன்பெல்லாம் செங்கல்பட்டிலிருந்து தான் இந்த நாற்கர சாலையே ஆரம்பம் ஆகும்.

ஆனால் இப்போது நாட்டில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்த போது திட்டமிட்டார். இதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. தங்கநாற்கர சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்கள் துவக்கப்பட்டன. அடுத்து வந்த அரசும் இத்திட்டத்தை செவ்வனே செய்து முடித்ததால், நாட்டில் உள்ள பல்வேறு சாலைகள் நான்கு வழி போக்குவரத்து கொண்டவையாக மாறியுள்ளன. நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்பான பயணத்திற்கும் இந்த நான்கு வழிச் சாலைகள் உதவுகின்றன.

இந்தியா முழுவதும் தங்க நாற்கர சாலை பணியை பொறுத்தவரை 5,846 கிலோ மீட்டரில் 181கிலோ மீட்டர் தவிர மற்ற பணிகள் அனை‌த்து‌ம் 97 விழு‌க்காடு வரை‌ முடி‌ந்து விட்டன. இந்தியா முழுவதும் 5,000 கிலோ மீட்டர் நீள சாலைகள் இரு வழிச் சாலைகளாக மாற்றப்பட இரு‌க்‌‌கிறது. இந்த திட்டத்தின் கீழ் த‌‌மிழக‌த்தில் 1,250 கி.மீ. நீள சாலை இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் மக்களுக்காக பயன் பட கூடிய நல்ல திட்டங்கள் தான். ஆனால் இந்த சுங்க சாவடிகள் தான் பர்சை கடிக்கிறது. சுங்கவரி மிக அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இருப்பினும், அதிகமான முதலீடு செய்துள்ள சாலைகளில் சுங்க வரி கட்டணம் குறைந்ததாக தெரியவில்லை. சென்னையில் இருந்து திருச்சி வரையில் செல்லும் ஒரு கார், செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் துவங்கி, திருச்சி வரையில் உள்ள பல சுங்கவரி பிளாசாக்களில் குறைந்தது 200 ரூபாய் வரை சுங்க வரியாக செலுத்த வேண்டியுள்ளது. "இந்த கட்டண விகிதம் அதிகம். குறைந்த தூரம் செல்வோருக்கு தற்போதைய கட்டணம் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், 400 முதல் 500 கி.மீ., தொலைவு வரை தொடர்ந்து செல்லும் வாகனங்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மனித உயிர்களை விட இவை எல்லாம் சொற்பமே........

Monday, May 10, 2010

கொட்டாவி!!!

வழக்கமாக அப்பாவின் இம்சை தாங்கமுடியாமல் கடனே என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாவனை செய்யும்போது, சாப்பாட்டிற்குப் பிறகு, மதியம் முதல் வகுப்பில் ஆசிரியரின் பாடம் சுகமான தாலாட்டாகக் காதில் விழும்போது கொட்டாவி வருவது இயற்கை.இந்த பாழாய் போன கொட்டாவியால் தான் எவ்வளவு அடி உதைகள் வகுப்பறையில்!!!!! இன்று அதைப் பற்றி நினைக்கும் போதும்,எழுதும் போதுமே கொட்டாவி வந்து விடுகிறது எனக்கு. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு கொட்டாவி விட்டால் நம்மை அறியாமல் அது தொற்றிக்கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? கொஞ்சம் கொட்டாவி விடாமல் படியுங்களேன்!

கொட்டாவி என்பது ஒரு அனிச்சைச் செயல். கொட்டாவி விடும்போது நாம் வாயை அகலத் திறந்து ஆறு விநாடிகளுக்கு எவ்வளவு காற்றை உள்ளே இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்துக் கொள்கிறோம். அதெப்படிக் கொட்டாவியை அனிச்சைச் செயல் என்று சொல்ல முடியும் என்று கேட்கலாம். கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறது என்று ஆராய்ச்சி சொல்கிறதே! நீங்கள் கொட்டாவி விடும்போது உங்கள் உடல் ஓய்வு நிலையிலோ, பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை. முதலில் உங்கள் வாய் அகலத் திறந்து தாடை கீழே செல்கிறது. அதனால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியுமோ அவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடிகிறது. கொட்டாவி விடும்போது உங்கள் இதயத்துடிப்பு 30சதவிகிதம் வரை அதிகமாகலாம்.

உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை. நமது உடலே இயற்கையாக, அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி விடச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சில ஆராய்ச்சியாளர்கள் கொட்டாவி என்பது நமது மூதாதையர்கள் வாயைத் திறந்து, பற்களை வெளிக்காட்டி மற்றவர்களை பயமுறுத்துவதற்காகக் கையாண்ட ஆயுதம் என்றும், சிலர் குட்டிபோட்டுப் பாலூட்டும் இனத்தைச் சார்ந்த பூனை, நாய், மீன்கள் போன்று அனைத்துமே கொட்டாவி விடுவதால் இது ஒரு அனிச்சைச் செயல் என்றும் சொல்கிறார்கள். இன்னுமொரு ஆராய்ச்சி கொட்டாவி நமது நுரையீரலிலுள்ள எண்ணை போன்ற பொருளை உறைந்துவிடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம்.

எப்படியோ, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தக் கொட்டாவிப் பழக்கம் இருந்து வந்தாலும் இன்னும் ஏன் இந்தக் கொட்டாவி வருகிறது என்ற ஆராய்ச்சி மட்டும் முடிவடையவில்லை.... இதை எழுதி முடிப்பதற்குள் நான் ஒரு பத்து கொட்டவியாவது விட்டிருப்பேன். எழுதிய எனக்கே பத்து என்றால்.... இதை வாசிக்கப் போகும் உங்களுக்கு எவ்வளவோ?????

Thursday, May 6, 2010

வாழ்க்கைக்கு பணம் மட்டுமே குறிக்கோளா???

இன்று செல்வந்தர்கள் முதல் பிச்சைக்காரர்கள் வரை பணம் ஒன்றே குறிக்கோளாகிவிட்டது. அன்றே ஒரு கவிஞன் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று பாடி வைத்துப் போய் விட்டான்.


ஏழைக்குப் பணம் மகிழ்ச்சிதான். அதில் சந்தேகமில்லை. தன்னிறைவுக்கு மேலே அதிகப் பணவரவு மகிழ்ச்சியா? என்பதுதான் இங்கே கேள்வி.
உடனே தன்னிறைவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கணம் வைத்துக் கொண்டு, எனக்குப் பத்து காரும், பத்து பங்களாவும் வந்தால்தான் தன்னிறைவு எனக் கொள்ளக்கூடாது. ஒருவர் உயிர் வாழக் குறைந்தபட்ச தேவைகள், அடிப்படை வசதிகள் இவற்றைத் தன்னிறைவு எனக்கொள்ளலாம்.


அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது. இப்படி தான் நம் வாழ்க்கை பயணமும் போகின்றது. நாம் நம் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளைக் கணக்கிடுவதாக வைத்துக் கொள்வோம். எதையெல்லாம் கணக்கிடுவோம்? கார், பங்களா, வீடு, நிலம், தோட்டம், நகைகள், வங்கியில் சேமிப்பு எவ்வளவு? இப்படித்தானே? பதிலாக நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள், நண்பர்கள், செய்துள்ள தர்ம காரியங்கள், பொதுநலப் பணிகள் என்னென்ன என்று கணக்கு எடுத்திருப்போமா?


நாம் எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பாய்ச்சல் குறையும், மகிழ்ச்சிக்கான மற்ற தேடல்களில் மனத்தைச் செலுத்த முடியும். தேடும் போதே அனுபவிப்பதும், அனுபவிக்கும் போதே தேடுவதும் வாழ்க்கையில் சாத்தியப் படுத்திக் கொள்ள முடியுமா? வாழ்க்கையை அனுபவித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.


நிகழ்காலத்தை நினைத்து வாழ சொல்கிறார்கள் உளவியலாளர்கள். ஆனால் நாம் அவ்வாறு வாழ்வது கிடையாது. பெரும்பாலும் இறந்த காலத்தைப் பற்றிய கவலையில் மூழ்கியிருப்போம். அல்லது வருங்காலத்தைப் பற்றிப் பயந்து கொண்டு இருப்போம். அல்லது இரண்டுமற்ற ஒரு சூழலில் சிக்கியிருப்போம்.

பணம் என்ற உப்புத் தண்ணியைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும். தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சி தரும் விசயங்களான உறவுகள், நண்பர்கள், கலை, பொதுப்பணி, சமூகச்சிந்தனை, புத்தகம், இலக்கியம், மொழி, கலாச்சாரம், இசை இவற்றோடு நம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழக வேண்டும். அதற்காக பொருள் தேடலை முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல கருத்து. முக்கிய நோக்கம் அதுவாக இருப்பதுதான் தவறு.


ஓட்டத்தை நிறுத்தாமல் சீராக ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். அந்த ஓட்டம்தான் உழைப்பு. உழைப்பின் பயன் பணம் மட்டும் இல்லை. உடல் ஆரோக்கியமும்தான். உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியமும் முக்கியம்தானே? மன ஆரோக்கியத்துக்குத்தான் மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்.


புதையல்களை தேடும் இந்த உலகத்தில் இதயங்கள் முற்றிலும் தொலைந்து போனதுதான் நிசப்தமான உண்மை.