Sunday, June 20, 2010

எம்.ஜி.ஆர் 7


முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 - இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத்த் தலைவராக உயர்ந்தார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்குப் பெருகியது. ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.

இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு வேதனை அளப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். இரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன.கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்கள் புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நடவடிக்கைகள் புரட்சித் தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.

இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருணாநிதி அறிவித்தார்.

மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது. இதுவே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்க வித்தாக அமைந்தது.தொடரும்....

Sunday, June 13, 2010

எம்.ஜி.ஆர் 6
1972 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 - ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் த்த்தமது சொத்துக்கணக்குகளைஞ்ச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பப்பனியாய் இருக்கும்.

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் கலைங்கருக்குக் கட்டுபட்டவர்கள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 - ஆம் ஆண்டு அக்டோபர் 10 - ம் நாளாகும்.

தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.
தொடரும்....

Tuesday, June 8, 2010

எம்.ஜி.ஆர் 51967-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்குள் மறைந்து விடுகிறார். இந்த நிலையில் தேர்தலே இல்லாமல் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி எழுகிறது. செயற்குழுவும், பொதுக்குழுவும், கட்சியின் அனைத்து அமைப்புகளும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை முதல்வராக்க முடிவெடுத்தது.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சால், எழுத்தால் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கும் கலைஞர், தனக்குத் தான் முதல்வர் நாற்காலி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது வேறாகிவிட்டது.

கீழ்க்கோர்ட்டில் அளித்த தீர்ப்பு, மேல் கோர்ட்டில் மாற்றி அமைக்கப்படும் என்கிற சூட்சும்ம் தெரிந்த அரசியல் சாணக்கியர் கலைஞர், உடனே மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்திக்கிறார். அவரிடம் தனக்கு இருக்கிற தகுதிகளையும், அதன் விளைவாக எழுந்த எண்ணத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

அதற்கு இராஜாஜி அவர்கள், ‘உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார்’ என்று அனுப்பி வைக்கிறார்.இராஜாஜியின் இராஜதந்திரப்படிக் கலைஞர் வள்ளலைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும்-தமிழ், தமிழ. என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். அது மட்டுமில்லாமல் நான் நிலச்சுவான்தார்களின் பிடியில் சுழன்று கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்திருக்கிறேன். எனவே, அந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முதல்வர் நாற்காலியில் ஒரே ஒரு நாள் நான் அமர்ந்தால், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கே பெருமையல்லவா?” என்று கலைஞர் வள்ளலிடம் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மக்கள் திலகம், எவர் கேட்டு இல்லையென்று சொல்லியிருக்கிறேன். இன்று நீ கேட்டா மறுக்கப் போகிறேன். ஆனால் நீ கேட்டது பொன்னோ பொருளோ அல்ல; அள்ளிக் கொடுத்து விட! நீ கேட்டது கர்ணனின் கவச குண்டலம் அல்லவா!” - இப்படி வள்ளல் ஒருநிமிடம் யோசித்தார்.

அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞருக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்.

அதற்குப்பிறகு, அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்குப்போன் செய்து, “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மக்கள் திலகம் சாப்பிட அழைத்தாலோ அல்லது தான் சாப்பிட வருகிறேன் என்றுசொன்னாலோ - அதில் ஒரு சரித்திர நிகழ்வு புதைந்து கிடக்கும். இதைப்புரிந்து வைத்திருப்பவர் இலட்சிய நடிகர்.

வள்ளல் தன் வீட்டிற்குச் சாப்பிட வருவதைத் தன் தாயிடம் தெரிவித்து, வள்ளலுக்குப்பிடித்ததைச் செய்யச் சொல்கிறார் இலட்சிய நடிகர். சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வருகிறார் வள்ளல். இலை போட்டுவிட்டு - இன் முகத்துடன் இலட்சிய நடிகரின்தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்கிறார். இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் - வள்ளலிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு
நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுவாங்க….!” என்றார்.

அப்பொழுதுதான் இலட்சிய நடிகரிடம், “கலைஞர் முதல்வர் நாற்காலியல் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று வள்ளல் விளக்குகிறார். அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

‘இந்த விளக்கமெல்லாம் எனக்குத் தேவையில்லை! எனக்காக இதைச் செய்கிறாயா? இல்லையா?’ என்று கடிந்தும் கேட்காமல், இலட்சிய நடிகர் எதைச் சொன்னால் இளவகுவார் என்கிற இங்கிதம் தெரிந்த வள்ளல், “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிற தமிழ்க் கலாசார வஜ்ராயுத்த்தைப் பிரயோகிக்கிறார். அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!

“சரி நீங்க சாப்பிடுங்க..” கவிதையாய் ஒப்புதல் அளித்தார் இலட்சிய நடிகர்.
அதற்குப் பிறகு முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்கிறார். வள்ளல் நாவலரை எப்படி நேர்செய்தார் என்பதெல்லாம் வேறு விஷயம்!

Monday, June 7, 2010

எம்.ஜி.ஆர் 4


1967 ஆம் ஆண்டில், தமிழக்த்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.

அப்போது கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலக்த்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது. முந்தய பதிவில் உள்ளது அந்த புகைப்படம்.

தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.

அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.

ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.

தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.

பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், வாழ்நாளில் யாருமே தன்னிடம் இதுவரை கேட்காத ஒன்றை ஒருவர் கேட்கிறார். கேட்டவர் வேறு யாருமல்ல. இன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்தான். அப்படி என்னதான் கேட்டார் கலைஞர்?
தொடரும்.....