Monday, July 19, 2010

எம்.ஜி.ஆர் 9


வழக்கமாகப் பொழுது விடிவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு அவர் முகதரிசனம் காணவும் உதவி பெறவும், அரசியல் ஆலோசனை பெறவும், கூட்டம் கூடியிருக்கும். அன்று எஸ்.எம். துரைராஜ், கே.ஏ.கிருஷ்ணசாமி,அனகாபுத்தூர் இராமலிங்கம், ஆளந்தூர் மோகனரங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் வரவில்லை. இது எம்.ஜி.ஆருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

என்ன ஆனார்கள் என் நண்பர்கள்? என்னிடம் உதவி பெற்றவர்கள், என் உதவியால் பதவி பெற்றவர்கள் எங்கே? நேரில் வர இயலாவிட்டாலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே! பதவியில் இருக்கும் கருணாநிதியை எதிர்க்க அஞ்சுகிறார்களோ? அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்களோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.

ஆனால், அரசியலைப் பிழைப்பாக்க் கொண்ட சிலர் தான் அற்ற குளத்து அறுநீர்ப பறவைகளாய் இருந்தார்களே தவிர, சாதாரணத் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை.

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடுகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள். நான்காம் நாளன்று பற்பல ஊர்களிலிருந்து, தோழர்கள் லாரி, வேன், பஸ், இரயில் எனப் பல வாகனங்களில் ஏறி சென்னையை நோக்கிப் படையெடுத்தது போலச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.

ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டுவிட்டனர். அவர்களுள் பெரும் பாலானோர் புரட்சித் தலைவரின் வீடு எங்கே இருக்கிறது என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலக்த்தை அறிவார்கள்; சத்யா ஸ்டுடியோவை அறிவார்கள்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் எம்.ஜி.ஆர் இல்லை என அறிந்ததும் அலை அலையாகத் திரண்டு தோழர்கள், அடுத்து சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்று, சாலைகளில் குழுமினார்கள்.

காலை ஏழு மணிமுதல் திரளத் தொடங்கிய கூட்டம் எட்டு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகியது; அடையாறு சந்திப்பு, இராஜா அண்ணாமலைபுரம், கேசவப் பெருமாளபுரம்,கிரீன்வேஸ் சாலை, ராபர்ட்சன் பேட்டை, நாராயணசாமித்தோட்டம், மந்தைவெளி போன்ற பகுதிகளிலெல்லாம் பரவி மகாசமுத்திரம்போல விரிந்துகிடந்தது- போக்குவரத்து நிலை குலைந்துவிட்டது!.

எங்கே மக்கள் தலைவர்? பொன்மனச் செம்மல் எங்கே? புரட்சித் தலைவரின் முகத்தைக் காணாமல், அவருடைய புன்சிரிப்பைப் பார்க்காமல், அவருடைய குரலைக் கேட்காமல்,நாங்கள் போக மாட்டோம், போகமாட்டோம்! என்று அவர்கள் முழங்கினார்கள்.

சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மனாபன் கூட்டத்தைப் பார்த்துச் செயலற்றவரானார். புரட்சித் தலைவர் இங்கே இல்லை! என்று அவர் கூறினார். ஆனால், பொங்குமாங் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. தலைவரை வரச்சொல்லு! தலைவரை வரச் சொல்லு! என்று பெரும் முழக்கமிட்டது. உடனே உள்ளே சென்ற பத்மநாபன் ராமாவரம் தோட்டத்திற்குத் தொலைபேசியில் செய்தியைக் கூறினார்.

இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை யென்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்! என்ற தொலைபேசியில் கூறினார் பத்மநாபன். செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டுக் காரில் விரைந்து வந்தார்.

புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க! என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.

புரட்சித் தலைவர் அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.

தொடரும்....

Wednesday, July 7, 2010

எம்.ஜி.ஆர் 8


புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.

சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

முதன்மதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;

அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.

சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது;
கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.

நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.


தொடரும்....