Thursday, January 27, 2011

எம்.ஜி.ஆர் 26



1975 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர், கழகத்தின் பெயரில் ஒரு மாற்றத்தைச் செய்ய விரும்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்குத் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும்கூட கிளைக் கழகங்களும் மன்றங்களும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. எனவே, கட்சிப் பெயருக்கு முன்னால் "அனைத்திந்திய"என்னும் வார்த்தைகளையும் சேர்க்க வேண்டுமென்று புரட்சித் தலைவர் விரும்பினார்.

அதற்காக அ.தி.மு.க. பொது குழுவைக் கூட்டிய போது, புரட்சித் தலைவரே எதிர்பாராத அளவுக்கு கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர் அந்த யோசனையைக்கடுமையாக எதிர்த்தனர்.

பழைய கொள்கைகளில் ஊறியிருந்த அவர்கள் அனைத்து இந்திய என்னும் வார்த்தைகளை தீண்டத்தகாதவையாகவே கருதி வெறுப்பைக் கக்கினார்கள். ஒரு மிகக் குறுகிய வட்டத்திலிருந்து எப்பொழுதோ தம்மை விடுவித்துக்கொண்டு தேசியத் தலைவராக உயர்ந்து கொண்டிருந்த புரட்சித் தலைவருக்கு அந்தச் சிலரின் எதிர்ப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் தாம்கூறும் யோசனையைக் கட்சி ஏற்றுக்கொள்ளாவிட்டால், தம்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு புதிய பொதுச்செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி புரட்சித் தலைவர் ஒரு வெடிகுண்டை எடுத்து வீசீனார்.

அவ்வளவுதான்! பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், ”கூடவே கூடாது! புரட்சித்தலைவர் இல்லாத கட்சியில் எங்களுக்கு மட்டும் என்ன வேலை?’ என்று கூறினர். பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு புரட்சித் தலைவரின் கருத்தை ஏற்றனர்.

அதற்குப்பின்னர் அந்தத் தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறியது. கழகத்தின் பெயர் அன்று முதல் ”அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” ஆயிற்று.

1974 -75 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான மாறுதல் நிகழ்ந்தது. பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் செல்லாது என்று அலஹாபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது, சில அற்பக் காரணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திரா காங்கிரஸ் கட்சி கருதியது; எனவே, அது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துவிட்டுப் பிரதமர் இந்திரா தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது.

ஆனால், ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் திரண்ட எதிர்க்கட்சியினரோ இந்திரா உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிப் பெரும் கிளர்ச்சி செய்தனர்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் போலீஸாரும் இராணுவத்தினரும் அரசு உத்தரவுகளுக்குக் கீழ்படியக்கூடாது என்று அறைகூவல் விடுத்தார். மக்கள் தெருவுக்கு வந்து போராட வேண்டும் என்றும் கூறினார். நாடே கொந்தளிப்பு நிலையில் இருந்தது. வெடிகுண்டுகள்கூட ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. அதை அடக்குவதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பதற்கும் பிரதமர் இந்திரா உள்நாட்டு நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்தினார். ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்பட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பரோடா வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். தமிழகத்தில் தி.மு.க., ஸ்தாபன காங்கிரஸ் கட்சிகளைத் தவிர இதர கட்சி கட்சிகளெல்லாம் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஆதரித்தன.



தொடரும்...

Monday, January 17, 2011

எம்.ஜி.ஆர் 25


இனையதள நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்...பணிசுமையின் காரணமாக கடந்த இரண்டு வாரமாக என்னால் பதிவுகளை இட முடியவில்லை. பேருக்கு வாழாமல் ஊருக்கு வாழ்ந்தவரின் பிறந்த நாளன்று எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது தெய்வச்செயல் தான்.

1973 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதியன்று தேர்தல் நடந்தது. மே 22 ஆம் தேதியன்று தேர்தல் முடிவு வெளியாயிற்று.பொறுமையின் சின்னமாய் அண்ணாவின் இதயக்கனியாய்த் திகழ்ந்த புரட்சித் தலைவரின் பொறுமைக்கே வெற்றிக் கிட்டியது.

ஆம்; அ.தி.மு.க. வேட்பாளர் கே. மாயத்தேவரே வெற்றி பெற்றார். பெற்ற வெற்றி சாதாரணமானதா? மொத்தம் பதிவான வாக்குகள் 5 இலட்சம். அவற்றுள் மாயத்தேவர் பெற்ற வாக்குகள் 2,60,930 ஆகும்! அதாவது பாதிக்கு மேற்பட்ட வாக்குகள்!

இரண்டாவது இடம் ஸ்தாபன காங்கிரசுக்கு (1,19,000 வாக்குகள்) கிட்டியது. மூன்றாவது இடம்தான் மாநில ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு (93,000வாக்குகள்) கிட்டியது. மத்தியில் ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுக்கோ பொறுப்புத் தொகையை (டிபாசிட்) இழந்த அவல நிலையும், நான்காவது இடமும் (11,000) வாக்குகள் கிடடின.

தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ. பாலசுப்பிரமணியமும் தம் பொறுப்புத் தொகையை இழந்தார்.புரட்சித்தலைவரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 1,42,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.அந்த வெற்றி அ.தி.மு.க.வின் முதல் வெற்றி மட்டுமல்ல; தமிழக்த்தின் தலைவிதியையே மாற்றவிருக்கும் வெற்றிகள் பலவற்றுக்கு முன்னோடி என்பதை அதற்குப் பின்னரும் சில அரசியல் தலைவர்கள் உணரவில்லை.!

திண்டுக்கல் வெற்றிச் செய்தி வெளியானபோது தொண்டர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்! பட்டாசு வெடித்தார்கள். ஆனால் அப்பொழுது தியாகராய நகரில் உள்ள தம்முடைய அலுவலகத்தில் இருந்த எம்.ஜி.ஆர். ”மிக்க மகிழ்ச்சி” என்று மட்டும் கூறிவிட்டு அதற்கு மேல் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாகி விட்டார்.

தம் தலைவருக்கு வெற்றி மாலை சூட அ.தி.மு.க. முன்னணி வீரர்கள் பலர் வந்தனர். அவர்களிடம், அங்கேயிருந்த ஒரு சிறிய அண்ணா சிலைக்கு மாலைகளை அணிவித்துப் போகும்படி எம்.ஜி.ஆர் கூறினார். வெற்றியைக் கண்டு கூத்தாடாமலும், தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் இருக்கம் மனப்பக்குவத்தைப் புரட்சித்தலைவர் எப்பொழுதோ பெற்றுவிட்டார்!

மாற்றுக் கட்சியினர் கூறியதுபோல புரட்சித் தலைவர் இந்திரா காங்கிரசுக்குக் கட்டுப்பட்டவரல்ல என்பதையும் அந்த வெற்றி பறைசாற்றியது! அவ்வாறெல்லாம் மாயத்தேவருக்காக உழைத்த உழைப்பை மாயத்தேவர் மறந்து விட்டு மீண்டும் தி.மு.கவில் 1980 ஆம் ஆண்டு இணைந்ததுதான் வேதனை.

தொடரும்...