Wednesday, May 30, 2012

இந்தியாவில் சரக்கு தோன்றிய வரலாறு
வாஸ்கோடகாமா, 1498 மே மாதம் கள்ளிக்கோட்டை மன்னர் சமோரினை சந்தித்தபோது, போர்ச்சுக்கீசிய மதுச்சந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட்டார். காரணம், அப்போது இந்தியாவில் குடிப்பழக்கம் மிக, மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, மொகலாய மன்னர்கள் உண்மையான முசல்மான்களாக இருந்து, மதுவை 'ஹராம்’ செய்து இருந்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னர் ஜஹாங்கீர் ஆட்சியில்தான் போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு நாட்டு மதுபானச் சந்தைக்கு இந்தியாவின் கதவுகள் அகலத் திறந்தன. மன்னர் ஜஹாங்கீர் விதவிதமான மது பானங்களைச் சுவைப்பதிலும் மது சுவைப்பவர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். ஆட்சியை வழிநடத்தும் ஒரு மன்னரால் அப்போது தொடங்கி சந்தைப்படுத்தப்பட்ட மது கலாசாரம், இன்று தமிழகத்தில் அரசே மதுபானங்களை கூவிக்கூவி விற்கும் நிலைக்குக் கொண்டுவந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது. 'குடி உயர கோன் உயரும்’ என்ற அவ்வை வாக்கை தப்பாய் புரிந்துகொண்டால் இப்படித்தான்!


இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். மதுவால் ஏற்படும் சமூகப் பிரச்னையால் இந்தியா மிகப்பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. அணு, மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக. வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்பதுதான் அரசாங்கத்தின் குறைந்தபட்ச இலக்கு. வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்றுஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கோடிகளில் டார்கெட் நிர்ணயித்துக் காத்து இருக்கிறார்கள்.


கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மதுக் கடைகள், மதுக் கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை சராசரியாக ஆறு முதல் எட்டு சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 1952-ம் ஆண்டில், மது அருந்தத் தொடங்கும் இந்தியரின் சராசரி வயது 19. இன்று அது 13. பன்னாட்டு மது நிறுவனங்களின் மிகப்பெரிய 'ஹப்’பாக மாறிவிட்டது இந்தியா. மாறாக, மேற்கத்திய நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருகிறது - பிரபல இன்டர்நேஷனல் மருத்துவ பத்திரிகையான லேண்ட்செட் சமீபத்தில் வெளியிட்ட தகவல் இது!


தமிழகத்திலோ, நிலைமை மிக மிக மிக மோசம். ஏழு கோடி மக்களில் சுமார் ஒரு கோடிப் பேர் குடிக்​கிறார்கள். சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கும் மது அடிமைகள். இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம்.


ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக் கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய் - ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்ஸின் ஷாம்பெயின் திராட்சையிலும், கோவாவின் பென்னி முந்திரியில் இருந்தும் தயாராகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்திலும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட்களில் இருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே!


இன்றும் நம் சகோதரர்கள் ஓட்டையும், வீட்டையும் ஒரு சரக்கு பாட்டிலுக்காக விற்கின்ற அவலங்களை அன்றாடம் தினசரியில் படித்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது மாணவர்களின் சந்திப்பே பிரபலமான பார்களில் தான். உன் நண்பனை பற்றி சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்ற பழமொழிக்கே வேலை இல்லாமல் போய்விட்டது இந்த டாஸ்மாக் வந்ததில் இருந்து...அப்துல் கலாமின் 20 - 20 கனவு டாஸ்மாக் பாரில் தான் நனவாகிக் கொண்டிருக்கிறது இன்றைய இளைங்கர்களால்.

அதுசரி, 'தினைக் கள் உண்ட தெளிதோல் மறவர்’ வழி....

Tuesday, May 29, 2012

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein - இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம். அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991-ம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது. இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கிறார்.ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுது இருக்கிறார்கள் தெரியுமா??

Raajiv Gandhi, Indian , Holds 2.5 Billion Swiss Francs (அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 13,200 கோடி (1991ம் ஆண்டு))ஆனால் இன்று வரை காங்கிரஸ் கட்சியினர் இதனைப் பற்றி மூச்சு விடவில்லை.இவரைத் தான் Mr.Clean-க நம் முன் நிறுத்தப்படுகிறார் ... இவரின் குடும்பத்தினர் தான் இன்றும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நம்மை ஆளுகின்றனர்... இவரின் பிறந்த நாளின் போது நம் வரிப் பணத்தில் இவரின் புகழை பரப்புகின்றனர்....

இவர்களா கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரப் போகிறார்கள்.

Monday, May 28, 2012

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சேயின் வாக்குமூலம்

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:-ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.


காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.


பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும். நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.


சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார். முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.


15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.


பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.


சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.


பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.


1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்.

Saturday, May 12, 2012

ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை

நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!


பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மன தைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னை யாகி விடும். யோசியுங்கள்!!!!!எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.


உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.


வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டு மானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சு வதற்கு- உணவு ஊட்டுவதற்கு அனுமதி கொடுங்கள்.


உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.

Wednesday, May 9, 2012

இனி இல்லை பி.எஃப் தொல்லை! வருகிறது பி.எஃப். நிரந்தர எண்...!

செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றும் வசதியை கொண்டு வந்து, செல்போன் சந்தாதாரர்களின் அமோக வரவேற்பை பெற்றது மத்திய அரசு. அதே மாதிரி, விரைவில் பிராவிடெண்ட் ஃபண்ட் சந்தாதாரர்களுக்கும் நிரந்தர எண்ணை கொடுக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கிறது.


தற்போது ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு வேலை மாறும் போது பி.எஃப். கணக்கு எண் மாறிவிடுகிறது. மேலும் பழைய கணக்கிலிருந்து புதிய கணக்கு தொகையை மாற்றுவது சற்று சிரமமாக, பெரிய நடைமுறையாக ( சில நேரங்கில் பெரும் தொல்லையாகக் கூட ) இருக்கிறது. இதற்கு பயந்தே பலரும் பழைய நிறுவன கணக்கில் இருக்கும் பி.எஃப். பணத்தை எடுத்துவிடுகிறார்கள். ஓய்வூதியத்துக்காக சேர்க்கும் தொகை இவ்வாறு எடுப்பதால், இடையில் செலவாகிவிடுகிறது. இதனால், பலர் ஓய்வு பெறும் போது மிகக் குறைவான பி.எஃப் தொகையையே பெறுகிறார்கள்.


இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட இருக்கிறது. வேலையில் சேரும் ஒருவருக்கு பணி ஓய்வு வரைக்கும் நிரந்தர பி.எஃப். எண்ணை வழங்கும் முயற்சியில் பிராவிடெண்ட் ஃபண்ட் அமைப்பு இறங்கி இருக்கிறது.


மொத்தமுள்ள 4.8 கோடி பி.எஃப். உறுப்பினர்களுக்கு பிரத்யேக தனி எண் கொடுப்பது என்பது சற்று கடினம்தான். அந்த வகையில் தற்போதுள்ள பி.எஃப். எண், ஆதார் எண் (தேசிய அடையாள அட்டை எண்), பான் எண் (வருமான வரித் துறை எண்) இவற்றில் ஏதாவது ஒரு எண்ணை ஒருவருக்கு தற்காலிக பி.எஃப். எண் ஆக இருக்கும். உதாரணத்துக்கு பான் எண் மூலமும் பி.எஃப். விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும் என்பது போல் கொண்டு வரப்படும்.


படிப்படியாக ஏதாவது ஒரு எண் பி.எஃப். நிரந்தர எண்ணாக மாற்றப்படும். பி.எஃப். கணக்கில் மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது. ஆண்டுக்கு புதிதாக சுமார் 30,000 கோடி ரூபாய் சேர்கிறது.பி.எஃப். நிரந்தர கணக்கு வந்தால், பணி ஓய்வூக்காலத்தில் கோடிக் கணக்கான பேர் கைநிறைய பணத்துடனும், மனம் நிறைய நிம்மதியுடனும் வீட்டுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்...!