Wednesday, May 9, 2012

இனி இல்லை பி.எஃப் தொல்லை! வருகிறது பி.எஃப். நிரந்தர எண்...!

செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றும் வசதியை கொண்டு வந்து, செல்போன் சந்தாதாரர்களின் அமோக வரவேற்பை பெற்றது மத்திய அரசு. அதே மாதிரி, விரைவில் பிராவிடெண்ட் ஃபண்ட் சந்தாதாரர்களுக்கும் நிரந்தர எண்ணை கொடுக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கிறது.


தற்போது ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு வேலை மாறும் போது பி.எஃப். கணக்கு எண் மாறிவிடுகிறது. மேலும் பழைய கணக்கிலிருந்து புதிய கணக்கு தொகையை மாற்றுவது சற்று சிரமமாக, பெரிய நடைமுறையாக ( சில நேரங்கில் பெரும் தொல்லையாகக் கூட ) இருக்கிறது. இதற்கு பயந்தே பலரும் பழைய நிறுவன கணக்கில் இருக்கும் பி.எஃப். பணத்தை எடுத்துவிடுகிறார்கள். ஓய்வூதியத்துக்காக சேர்க்கும் தொகை இவ்வாறு எடுப்பதால், இடையில் செலவாகிவிடுகிறது. இதனால், பலர் ஓய்வு பெறும் போது மிகக் குறைவான பி.எஃப் தொகையையே பெறுகிறார்கள்.


இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட இருக்கிறது. வேலையில் சேரும் ஒருவருக்கு பணி ஓய்வு வரைக்கும் நிரந்தர பி.எஃப். எண்ணை வழங்கும் முயற்சியில் பிராவிடெண்ட் ஃபண்ட் அமைப்பு இறங்கி இருக்கிறது.


மொத்தமுள்ள 4.8 கோடி பி.எஃப். உறுப்பினர்களுக்கு பிரத்யேக தனி எண் கொடுப்பது என்பது சற்று கடினம்தான். அந்த வகையில் தற்போதுள்ள பி.எஃப். எண், ஆதார் எண் (தேசிய அடையாள அட்டை எண்), பான் எண் (வருமான வரித் துறை எண்) இவற்றில் ஏதாவது ஒரு எண்ணை ஒருவருக்கு தற்காலிக பி.எஃப். எண் ஆக இருக்கும். உதாரணத்துக்கு பான் எண் மூலமும் பி.எஃப். விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும் என்பது போல் கொண்டு வரப்படும்.


படிப்படியாக ஏதாவது ஒரு எண் பி.எஃப். நிரந்தர எண்ணாக மாற்றப்படும். பி.எஃப். கணக்கில் மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது. ஆண்டுக்கு புதிதாக சுமார் 30,000 கோடி ரூபாய் சேர்கிறது.பி.எஃப். நிரந்தர கணக்கு வந்தால், பணி ஓய்வூக்காலத்தில் கோடிக் கணக்கான பேர் கைநிறைய பணத்துடனும், மனம் நிறைய நிம்மதியுடனும் வீட்டுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்...!

No comments:

Post a Comment