Monday, July 16, 2012

தமிழனுக்கு கல்வி என்ன எட்டா கனியா???

இது என்னுடைய நூறாவது பதிவு...என்ன எழுதுவது...எதைப் பற்றி எழுதுவது என்ற சிந்தனை என் மனதில் இருந்தவண்ணமே இருந்தது. இவ்வாறாக யோசித்த போது கர்மவீரர் காமராஜரே என் கண்முன்னே வந்து நின்றார். அதற்கு காரணம் உண்டு, ஏனென்றால் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பிறந்தவர்களுக்கு இலகுவாக பள்ளிக்கூடம் செல்வதற்கு காரணமாக இருந்தவரே கல்விக்கண் கொடுத்த காமராஜர்தான்.

ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது)

தி.மு.க வை சேர்ந்த இளைஞர் சீனிவாசனிடம் தோல்வியுற்றார் காமராஜர்.அப்பொழுது தி.மு.க வினர் "படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்" என சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.அதற்கு பதிலடியாக ஒரு சுவரொட்டி அதே பகுதிகளில் ஜொலித்து சிந்திக்கவும் வைத்தது...அது "படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார் அதற்கு வாழ்த்துக்கள்" என்று....அந்த சுவரொட்டியை ஒட்டியது அய்யா தந்தை பெரியார்.அந்தளவு காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார்.சொந்தமாய் கல்வி நிலையம் தொடங்கி கோடிகளை சுரண்டவோ, நிலம் புலங்களை வாங்கி சொத்து சேர்க்கவோ அல்ல... மக்களுக்கு உண்மையாக சேவை செய்வதற்காக...ஆனால் இப்பொழுதோ கல்வியின் நிலையை கல்விக்கடவுள் சரஸ்வதியால் கூட காப்பாற்ற முடியாத சூழ்நிலை இங்கே உருவாக்கி விட்டது.

“வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது'' என்பது கல்வியின் சிறப்பு. ஆனால் இன்று கல்வி, வணிகம் என்ற வெந்தணலில் வெந்து கொண்டிருக்கின்றது. கோடி கோடியாய்க் குவிந்து கிடக்கும் பணத்தாள்களை, அதாவது கறுப்பை வெள்ளையாக்க, பண முதலைகள் பயன்படுத்திக் கொண்ட உத்திதான், “கல்வி நிலையம்''. மழலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி, மெட்ரிக் என்னும் நுழைமுகப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என்று காடும் மேடும் கட்டடம் எழுப்பிக் கல்வி வணிகம் தொடங்கி விடுகின்றனர். ஆயிரம் இறைத்தால் ஆசிரியக் கூட்டம் மளமளவென்று வரிசையில் நிற்கின்றது. கறுப்பை எல்லாம் வெள்ளையாய் மாற்றுவதற்கும், கணக்கு வழக்கின்றிக் காசைக் குவிப்பதற்கும் நல்வழியாக இது அமைந்து வருகின்றது. கல்வி வள்ளல் என்னும் புகழ்மொழியோடு வெள்ளுடை பூண்டு வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளின்மீது ஆதிக்கம் செலுத்தியும் சுரண்டிக் கொள்ளையடித்தும் வல்லரசாகத் திகழ்ந்துவரும் அமெரிக்காவில்கூடத் தனியாரிடம் இருபத்திரண்டு விழுக்காடு கல்வி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியாவில் தொண்ணூற்று ஆறு விழுக்காடு கல்வி நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளன.

கல்வியை வணிக மயமாக்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெறுகிறது. இன்று தமிழ்நாட்டில் ஆங்கில வழிப் பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில் வழங்கப் படும் தொகை, ஒருவரது மேல்நிலை மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் தொகைக்கு இணையாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் போதிய இடவசதியும், ஆசிரியர்களின் பற்றாக் குறையும், கல்லூரிகளில் அனைத்துப் பாடப் பிரிவும் ஆங்கிலத்தில் உள்ளதும், அடிப்படையிலேயே குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்தியாவில் சிறந்த கல்லூரிகள் தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தின் கல்வித் தரத்தை அடிப்படையாகக் கொண்டு வட மாநிலத்தவர்கள் பலர் உயர்கல்வி பெற இங்கு வந்து கல்வி கற்பது வழக்கமாகிவிட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்கள் பல அரசின் நிதி உதவியுடன் இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் என்பதும் கடந்த பல ஆண்டுகளாக நல்ல நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு உயர் கல்வியை ஒரு சமூகத் தொண்டாகக் கொண்டு இயங்கி வருவதும் கல்வியாளர்கள் முதல் பொதுமக்களும் அறிந்ததே.

இவ்வாறு சிறப்புடன் இயங்கும் அரசின் உதவி பெறும் தொழில் நுட்பக் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக் கழகங்களாக உருவாக்க மாநில அரசின் உயர்கல்வித்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த உயர்கல்வி நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க, இப்போது செயல்படும் பல தனியார் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவும் கல்வியை ஒரு சமூகத் தொண்டாகக் கருதாமல் வணிகமாகக் கருதும் நிலையே உள்ளது. இப்போது தமிழ்நாட்டின் இரண்டு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகள் பல்லாண்டுகளாக உயர்கல்விக்குத் தொண்டு செய்துவரும் நிலையில், தனியார் பல்கலைக் கழகங்களாக உருமாறும் போதும், நடுவண் மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவிகளுடன் கட்டமைப்பு வசதிகளைப் பெற்று, அங்குப் பணிபுரியும் ஆசிரியர்கள், படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகிறது.

இங்கு படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் நிலையும், ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வியை நடுவில் இழக்கும் நிலையும் ஏற்படலாம். இப்போது இங்குப் பணி புரியும் பேராசிரியர்களின் நிலை, அவர்களின் வாழ்வுரிமைகள் பற்றி பல்வேறு வினாக்கள் எழுகின்றன. தமிழகத்தின் பல பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் பல அரசு உதவிபெறும் கல்லூரிகள் “தனியார் கல்வி நிறுவனங்களாக'' உருமாறும் போது, ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாகும் நிலை ஏற்பட்டுவிடும். இடஒதுக்கீடும் கிடைக்காமல் போகும். உயர்கல்விச் சாலைகளில் அடியெடுத்து வைக்காத நிலையில் பல இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் உள்ள நிலையில் நடுவண் மற்றும் மாநில அரசுகளின் உயர்கல்விக் கொள்கையில் தகுந்த மாற்றம் செய்யவேண்டும்.

சாராயக் கடைகளையும், மணல் வணிகத்தையும் அரசே ஏற்று நடத்தும்போது, கல்வியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது. குழந்தைகள் தங்களது சுய ஆர்வத்தைத் தாங்களே அறிந்து கொள்ளும் விதத்தில் கல்வி முறை இருக்கவேண்டும். அறிவியல் அறிஞர்களை உருவாக்கும் வகையில் செய் முறையுடன் கல்வி அமல்படுத்துவதே காலத்தின் கட்டாயம். இக்கல்விச் சீர்திருத்தங்களுக்காகக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்களின் கருத்துகளின்மீது அக்கறை செலுத்துவது, அரசின் கடமையாகும்.