இவ்வாறாக மக்கள் தலைவர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டிருத்த வேலையில் அந்த துயர சம்பவம் நடந்தேறியது.
1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம்பீறிட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.
துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர். தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான ராதா, காமராஜரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.க. அரசு அண்ணா தலைமையில் அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட எம்.ஜி.ஆறும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும்.