Showing posts with label எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம். Show all posts
Showing posts with label எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம். Show all posts

Saturday, May 7, 2011

எம்.ஜி.ஆர் 31



1977 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று ‘இந்து’ ஏடு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தது.

”முதல்வர் பதவி என்பது அதிகாரம் வாய்ந்தது அல்ல. அதிகாரமும் பணபலமும் உள்ள பலரைத் தினமும் ச்ந்திக்க வேண்டிய ஓர் இடமே தவிர அதிகாரம் குவிந்துள்ள இடமல்ல என்று எம்.ஜி.ஆர் கூறியிருப்பதைப் பார்த்தால், அவர் முதல்வர் பதவி என்பது எவ்வளவு கடுமையானது என்பதை உணர்ந்திருக்கிறார் என்பதையே தெளிவு படுத்துகிறது. தம்மை முதல்வர் பதவியில் அமர்த்திய அந்த மக்கள் சக்தியே தமக்கு எல்லாவிதமான எதிர்ப்புகளிலிருந்தும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார். மக்களிடமிருந்து எந்தக் கருத்து வந்தாலும் அதை அவர் சீர்தூக்கி ஆராய்ந்து ஏற்பார் என்பது உறுதி. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் எம்.ஜீ.ஆர். உற்சாகத்துடன் ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியும் என்னும் நம்பிக்கையில் இருக்கிறார்”என்று கூறியிருந்தது.

முதல்வர் பதவியேற்ற புரட்சித் தலைவர், அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற தம் சகாக்களை அழைத்து, ”எதைச் செய்தாலும் அதில் ஏழைகளுக்கு என்ன நன்மை கிட்டும் என்பதைக் கருத்தில் கொண்டு செய்யுங்கள்” என்று கூறினார்.

மாநில அரசுகள் எதற்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதை புரட்சித் தலைவர் புரிந்து கொண்டார். மாநில அரசின் வருவாய் முழுவதும் கல்வி, சுகாதாரம், அரசு நிருவாகம் ஆகியவற்றுக்கே போய்விடுகிறது என்பதையும் புரிந்து கொண்டார்.

மாநிலத்தில் தொழில்கள் வளர வேண்டுமென்றால் மத்திய அரசின் உதவியும் அனுமதியும் முதலீடும் அவசியம்; தனியார் துறையின் ஆரவமும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் மிக விரைவிலேயே புரிந்து கொண்டார் என்றாலும் இருக்கின்ற நிதி வசதியை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுமாறு என்னென்ன திட்டங்களை உருவாக்க முடியும் என்று யோசித்தார்.

”ஏழைமக்களை வாட்டும் இரு பிரச்சினைகள் பசிக் கொடுமையும், வேலையில்லாத திண்டாட்டமுந்தான் இவை இரண்டையும் நான் நன்றாய் அறிவேன். என் இளமைக்காலத்தில் இவ்விரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன்.!”

இது முதல்வர் புரட்சித் தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாகும்.

இவ்வாறு ஏழைகளின் முக்கிய தேவையைத் துல்லியமாகய் உணர்ந்திருந்த புரட்சித் தலைவர் எடுத்துக்கொண்ட முதல் திட்டம் கிராம மேம்பாட்டுத் திட்டமாகும்.

1978 ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, இந்திரா காங்கிரஸ் ஆகிய மூன்று அணிகள் மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மகத்தான வெற்றி கிட்டியது. மொத்தமுள்ள 65 வட்டங்களில் (Wards) அ.தி.மு.க.வுக்கு 37 இடங்களும், இந்திரா காங்கிரசுக்கு 9 இடங்களும், கிடைத்தன. ஜனதாக்கட்சி தோல்வியடைந்தது. மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது! இதுவும் புரட்சித் தலைவரின் சாதனைகளுள் ஒன்றாகும்.

1978 ஆம் ஆண்டு செப்டம்பரில் மக்கள தி.மு.க. கலைக்கப்பட்டது. அக்கட்சி
யில் இருந்த நாவலர், ப.உ.ச, கே.இராஜாராம், செ.மாதவன் முதலியவர்கள் அ.இ.அ.தி.மு.க வில் சேர்ந்தனர்.

நாவலரைத் அ.இ.அ.தி.மு.க. தலைவர் பதவியிலும், ப.உ.ச.வை பொதுச் செயலாளர் பதவியிலும், மாதவனை கழகப் பொருளாளர் பதவியிலும், அமர்த்திக் கவுரவித்தார். புரட்சித் தலைவர். மாதவனைத் தவிர மற்ற மூவரையும் பின்னர் தம் அமைச்சரவையிலும் சேர்த்துக் கொண்டார்.



முற்றும்...

Wednesday, April 20, 2011

எம்.ஜி.ஆர் 30



1977 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தமிழக சட்ட மன்றத்திற்குத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசியல் கட்சிகள் புதிய அணிகளை அமைத்தன.

ஜனதா கட்சி தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொண்டு தனியாகப்போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.கவை உதறிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டது.

அ.இ.தி.மு.க. கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டமன்றத்தில் அதிகமான இடங்களைத் தங்களுக்குக் கோரின. புரட்சித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால், இந்திரா காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தங்களுக்குள் தனிக் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டு போட்டியிட்டன.

அ.இ.தி.மு.க. சில சிறிய கட்சிகளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது.

தி.மு.க. இரண்டாவது முறையாகப் பிளவுப்பட்டுக் களத்தில் நின்றது.

இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அனுதாபம் இருப்பினும் அது ஆட்சியைப் பற்றும் என்னும் நம்பிக்கை அந்தக் கட்சிக்காரர்களுக்கே இல்லை. ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் போதுமான அளவில் செல்வாக்கும் இருக்கவில்லை. எனவே, எஞ்சியிருந்த புரட்சித் தலைவரின் அ.இ.தி.மு.க.வின் மீது தான் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தேர்தல்கள் நடந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போல, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி தான் பெரும் வெற்றியைப் பெற்றது. புரட்சித் தலைவரின் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 127 தொகுதிகள் கிட்டின. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 17 இடங்கள் கிட்டின.

தி.மு.க. 48 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது. இந்திரா காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், ஜனதாக்கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

புரட்சித் தலைவர் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளநர் பிரபுதாஸ் பட்வாரி புரட்சித் தலைவரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைத்தார்.

1977 – ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று தான் புரட்சித் தலைவர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது அரசியல் சட்ட ரீதியாகவும் சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு விழா!

ஆனால், அது முடிந்ததும் புரட்சித் தலைவர் அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார். அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.

பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும் 20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம்கூடி ஆர்ப்பரித்தது. அப்போது மந்தகாசப் புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார். அந்தச் சரித்திர நாயகன். அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் உரையாற்றினார்.

”அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.

இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும். உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.

மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.

இதனை எங்கள் மனத்தில் இருத்தி, இலஞ்சமற்ற, ஊழலற்ற நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.

இந்த உயர்ந்த இலட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுதேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று தலைவர் உறுதியிட்டுக் கூறினார் புரட்சித் தலைவர்.

அப்பொழுதும் அதற்குப்பபின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!

அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.

இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார். புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.



தொடரும்...

Sunday, April 17, 2011

எம்.ஜி.ஆர் 29


தேர்தல் முடிவுப்படி வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் பெரும் தோல்விகண்டது. மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதாக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஆனால், தென் மாநிலங்களில் நான்கிலும் இந்திரா காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் புரட்சித் தலைவரின் செல்வாக்கும், அயராத உழைப்பும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 18, இந்திரா காங்கிரஸுக்கு 14 கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 என்னும் அளவில் மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தது. ஸ்தாபன காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் தி.மு.க. ஒரே ஒரு தொகுதியிலும் தாம் வெற்றிபெற்றன. பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியிலும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளரே வெற்றி பெற்றார் இது புரட்சித் தலைவரின் இன்னொரு மகத்தான சாதனையாகும். தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது, நியாயம் என்ற புரட்சித்தலைவரின் வாதத்தைதான் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்! தி.மு.க. ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தி.மு.க.வோடு கூட்டணி அமைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓர் இடங்கூட கிடைக்கவில்லை. தங்களோடு கூட்டணி அமைத்துக் கொண்ட ஜனதாக்கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதால், தங்கள் மீதான சர்க்காரியா விசாரணைக்கமிஷன் கலைக்கப்பட்டு விடும் என்று தி.மு.க. தலைமை நம்பியது. புதிய பிரதமர் மொரார்ஜிதேசாய்க்கு மத்திய அமைச்சர் பா. இராமச்சந்திரன் மூலம் வேண்டுகோளும் விடுத்தது. ஆனால், பிரதமர் மொரார்ஜி தேசாய் சர்க்காரியா கமிஷன் விசாரணையை கைவிடச் செய்ய சம்மதிக்கவில்லை! விசாரணை தொடரும் என்று அறிவித்து விட்டார்.


பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தி.மு.க.வின் முன்னிணித் தலைவர்கள் பலரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையோடு சிந்தித்தனர். அவர்களின் சார்பில் தி.மு.க. பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞெசெழியன் முதன் முதலில் போர்க்கொடியை உயர்த்தினார். 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய நாவலர். கருணாநிதியின் மேல் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையை விடுத்தார். அவரைத் தொடர்ந்து முன்னால் அமைச்சர்களான கே.ராஜாராம், எஸ். மாதவன், ஆதித்தனார், ப.உ.சண்முகம் ஆகியோரும் தி.மு.க.விலிருந்து விலகினர். இவர்களுள் சிலர் ஒன்று சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். புரட்சித் தலைவர் சொன்ன பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒட்டியே இவர்களது குற்றச்சாட்டுகளும் இருந்தன. என்றாலும், இந்தக் கட்சியினரைப் புரட்சித் தலைவர் சற்றும் பொருட்படுத்தவில்லை.


தொடரும்...

Tuesday, March 1, 2011

எம்.ஜி.ஆர் 28



1976 தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதற்கிடையில் தமிழகத்தில் இன்னோர் அரசியல் மாற்றமும் நிகழ்ந்தது. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

காமராஜர் மரணத்தைத் தொடர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒரு விரக்தியும் மறு சிந்தனையும் தோன்றின. இந்திரா காங்கிரஸும் ஸ்தாபன காங்கிரஸும் இணைந்து ஒரே காங்கிரசாகிவிட வேண்டும் என்பதுதான் அந்த மறு சிந்தனை ஆகும். அதன்படி இணைப்பும் ஏற்பட்டது. கருப்பையா மூப்பனார் தலைமையில் பெரும்பாலன ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் இந்திராகாங்கிரஸில் இணைந்தனர். ஒன்றுபட்ட தமிழ்நாடு காங்கிரசுக்கு கருப்பையா மூப்பனார் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பா.இராமச் சந்திரன் தலைமையில் சிறுபான்மைக்குழுவினர் அதற்குப் பின்னரும் ஸ்தாபன காங்கிரஸாக இயங்கிக் கொண்டிருந்தனர்.1977ல் இந்தியா முழுவதிலும் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்தார், பிரதமர் இந்திரா.

அதுவரை ஒன்றையொன்று எதிர்த்துக்கொண்டிருந்த இந்திரா காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க.வும் சட்டமன்ற, நாடாளுமன்றத தேர்தலில் ஒரே அணியாக நிற்பதுதான் நல்லது என்னும் எண்ணம் இரு தரப்பிலும் பரவலாக ஏற்பட்டது. அன்னை இந்திராவின் மேல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மிதிப்புக் கொண்டிருந்த புரட்சித் தலைவர், இந்திரா காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொள்ள உடன்பட்டார். ஆனால், நாடாளுமன்றத் தொகுதிகளில் நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.இ.தி.மு.க. வுக்கு அதிக இடங்களை ஒதுக்கிட இந்திரா காங்கிரஸ் சம்மதித்தால்தான் கூட்டணி அமைக்க ஒப்புக் கொள்ளமுடியும் என்றும் அவர் தெளிவு படுத்தினார்.

எம்.ஜி.ஆர். கூறியதை இந்திரா காங்கிரஸ் மேலிடம் ஒப்புக்கொண்டது. அதன்படி அ.இ.அ.தி.மு.கவுக்கு 20, இந்திரா காங்கிரஸுக்கு 15, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க வுக்கு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் உருவானது. புதிய கூட்டணியும் உதயமானது. தி.மு.க. ஸ்தாபன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இன்னொரு கூட்டணியை அமைத்துக்கொண்டன. பிரதமர் இந்திராவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் பேசி வாக்குக் கேட்டார்கள்.

நெருக்கடி நிலைப்பிரகடனம் இரத்து செய்யப்பட்டது. காவலில் இருந்த தலைவர்களெல்லாரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தொடரும்...

Sunday, February 6, 2011

எம்.ஜி.ஆர் 27



இந்நிலையில் தி.மு.க. அரசு அ.தி.மு.க. விஷயத்தில் அடக்குமுறையைக் கடைப்பிடப்பதாகவும் எனவே கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டவேண்டும் என்றும் ஒரு கருத்து எழுந்தது. சட்டமன்ற உறுப்பினரும் அ.இ.அ.தி.மு.க. பொருளாளருமான எஸ்.எம்.துரைராஜ் அவ்வாறே கறுப்புக்கொடி காட்டினார். அவரும் அவருடன் சென்ற தொண்டர்களும் தாக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி அவர்கள்மீதே கொலை முயற்சி வழக்கும் தொடரப்பட்டது.

பின்னர் நீதிமன்றம், எஸ்.எம். துரைராஐயும் மற்றவர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்த்தோடு பொய் வழக்குத் தொடுத்த போலீஸாரையும் கடுமையாகக் கண்டித்தது. மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சித்தனை தி.மு.க. தொழிற்சங்கத்தினர் பட்டப்பகலில் அவர் பல்லவன் பஸ்ஸில் செல்கையில் படுகொலை செய்ய முயன்றார்கள். அவர் உடலில் 34 கத்திக் குத்துக்கள் விழுந்தன!



இந்தச் சூழ்நிலையில், 1975 ஆம் ஆண்டின் இறுதியில் அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில், தி.மு.க. தலைவர் மீதும் அமைச்சரவைமீதும் மீண்டும் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி. விஸ்வநாதனும் நாஞ்சில் மனோகரனும் மத்திய அரசிடம் இந்த மூன்றாவது புகார் மனுவைக் கொடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர் எனக் கூறப்பட்டது.

மத்திய அரசு, தி.மு.க. அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தது. 1976 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31 – ஆம் தேதியன்று இரவு, மத்திய அரசு, தமிழக தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்தது; தமிழ்நாடு சட்டமன்றமும் கலைக்கப்பட்டது.

அ.இ.அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கொடுத்த ஊழல் புகார் மனுக்களும், தி.மு.க. அரசு மேற்கொண்டதாக்ச் சொல்லப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்களுந்தாம் தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்வதற்குக் காரணமாய் அமைந்தன. தி.மு.க.வைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை மனப்பூர்வமாய் வரவேற்று ஆதரித்தன. புரட்சித்தலைவர் தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்த்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டார்; துணிச்சலான நடவடிக்கை என்றும் பாராட்டினார்.

தி.மு.க. அரசு மீதான ஊழல் குற்றச் சாட்டுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை உடனே அமைக்க வேண்டும் என்றும் புரட்சித்தலைவர் கோரினார். அவரது கோரிக்கை விரைவிலேயே ஏற்றக்கொள்ளப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியாவின் தலைமையிலான விசாரணைக் கமிஷனையும் அமைத்தது, மத்திய அரசு. 54 ஊழல் புகார்களும் 27 புகார்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சர்க்காரியா கமிஷன் அமைத்தது, புரட்சித் தலைவருக்குக் கிட்டிய மகத்தான வெற்றியாகும். மாநில முதல்வர்மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பகிரங்கமாய் இயக்கம் நடத்தும் அசாத்தியத் துணிச்சல் அவர் ஒருவருக்குத்தான் இருந்தது. அதனால் ஆளுங்கட்சியினரும் அரசாங்கமும் ஏவிவிட்ட அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டு போராடும் மனோதிடமும், வலிமையும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமே இருந்தது!

இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தி சரித்திரம் படைத்த புரட்சித் தலைவர் அரசியல் அரங்கில் இன்னொரு சாதனையையும் சத்தமில்லாமல் செய்து முடித்தார்.



தொடரும்...

Thursday, January 27, 2011

எம்.ஜி.ஆர் 26



1975 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர், கழகத்தின் பெயரில் ஒரு மாற்றத்தைச் செய்ய விரும்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்குத் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும்கூட கிளைக் கழகங்களும் மன்றங்களும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. எனவே, கட்சிப் பெயருக்கு முன்னால் "அனைத்திந்திய"என்னும் வார்த்தைகளையும் சேர்க்க வேண்டுமென்று புரட்சித் தலைவர் விரும்பினார்.

அதற்காக அ.தி.மு.க. பொது குழுவைக் கூட்டிய போது, புரட்சித் தலைவரே எதிர்பாராத அளவுக்கு கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர் அந்த யோசனையைக்கடுமையாக எதிர்த்தனர்.

பழைய கொள்கைகளில் ஊறியிருந்த அவர்கள் அனைத்து இந்திய என்னும் வார்த்தைகளை தீண்டத்தகாதவையாகவே கருதி வெறுப்பைக் கக்கினார்கள். ஒரு மிகக் குறுகிய வட்டத்திலிருந்து எப்பொழுதோ தம்மை விடுவித்துக்கொண்டு தேசியத் தலைவராக உயர்ந்து கொண்டிருந்த புரட்சித் தலைவருக்கு அந்தச் சிலரின் எதிர்ப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் தாம்கூறும் யோசனையைக் கட்சி ஏற்றுக்கொள்ளாவிட்டால், தம்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு புதிய பொதுச்செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி புரட்சித் தலைவர் ஒரு வெடிகுண்டை எடுத்து வீசீனார்.

அவ்வளவுதான்! பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், ”கூடவே கூடாது! புரட்சித்தலைவர் இல்லாத கட்சியில் எங்களுக்கு மட்டும் என்ன வேலை?’ என்று கூறினர். பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு புரட்சித் தலைவரின் கருத்தை ஏற்றனர்.

அதற்குப்பின்னர் அந்தத் தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறியது. கழகத்தின் பெயர் அன்று முதல் ”அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” ஆயிற்று.

1974 -75 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான மாறுதல் நிகழ்ந்தது. பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் செல்லாது என்று அலஹாபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது, சில அற்பக் காரணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திரா காங்கிரஸ் கட்சி கருதியது; எனவே, அது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துவிட்டுப் பிரதமர் இந்திரா தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது.

ஆனால், ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் திரண்ட எதிர்க்கட்சியினரோ இந்திரா உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிப் பெரும் கிளர்ச்சி செய்தனர்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் போலீஸாரும் இராணுவத்தினரும் அரசு உத்தரவுகளுக்குக் கீழ்படியக்கூடாது என்று அறைகூவல் விடுத்தார். மக்கள் தெருவுக்கு வந்து போராட வேண்டும் என்றும் கூறினார். நாடே கொந்தளிப்பு நிலையில் இருந்தது. வெடிகுண்டுகள்கூட ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. அதை அடக்குவதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பதற்கும் பிரதமர் இந்திரா உள்நாட்டு நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்தினார். ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்பட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பரோடா வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். தமிழகத்தில் தி.மு.க., ஸ்தாபன காங்கிரஸ் கட்சிகளைத் தவிர இதர கட்சி கட்சிகளெல்லாம் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஆதரித்தன.



தொடரும்...

Monday, January 17, 2011

எம்.ஜி.ஆர் 25


இனையதள நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்...பணிசுமையின் காரணமாக கடந்த இரண்டு வாரமாக என்னால் பதிவுகளை இட முடியவில்லை. பேருக்கு வாழாமல் ஊருக்கு வாழ்ந்தவரின் பிறந்த நாளன்று எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது தெய்வச்செயல் தான்.

1973 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதியன்று தேர்தல் நடந்தது. மே 22 ஆம் தேதியன்று தேர்தல் முடிவு வெளியாயிற்று.பொறுமையின் சின்னமாய் அண்ணாவின் இதயக்கனியாய்த் திகழ்ந்த புரட்சித் தலைவரின் பொறுமைக்கே வெற்றிக் கிட்டியது.

ஆம்; அ.தி.மு.க. வேட்பாளர் கே. மாயத்தேவரே வெற்றி பெற்றார். பெற்ற வெற்றி சாதாரணமானதா? மொத்தம் பதிவான வாக்குகள் 5 இலட்சம். அவற்றுள் மாயத்தேவர் பெற்ற வாக்குகள் 2,60,930 ஆகும்! அதாவது பாதிக்கு மேற்பட்ட வாக்குகள்!

இரண்டாவது இடம் ஸ்தாபன காங்கிரசுக்கு (1,19,000 வாக்குகள்) கிட்டியது. மூன்றாவது இடம்தான் மாநில ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு (93,000வாக்குகள்) கிட்டியது. மத்தியில் ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுக்கோ பொறுப்புத் தொகையை (டிபாசிட்) இழந்த அவல நிலையும், நான்காவது இடமும் (11,000) வாக்குகள் கிடடின.

தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ. பாலசுப்பிரமணியமும் தம் பொறுப்புத் தொகையை இழந்தார்.புரட்சித்தலைவரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 1,42,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.அந்த வெற்றி அ.தி.மு.க.வின் முதல் வெற்றி மட்டுமல்ல; தமிழக்த்தின் தலைவிதியையே மாற்றவிருக்கும் வெற்றிகள் பலவற்றுக்கு முன்னோடி என்பதை அதற்குப் பின்னரும் சில அரசியல் தலைவர்கள் உணரவில்லை.!

திண்டுக்கல் வெற்றிச் செய்தி வெளியானபோது தொண்டர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்! பட்டாசு வெடித்தார்கள். ஆனால் அப்பொழுது தியாகராய நகரில் உள்ள தம்முடைய அலுவலகத்தில் இருந்த எம்.ஜி.ஆர். ”மிக்க மகிழ்ச்சி” என்று மட்டும் கூறிவிட்டு அதற்கு மேல் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாகி விட்டார்.

தம் தலைவருக்கு வெற்றி மாலை சூட அ.தி.மு.க. முன்னணி வீரர்கள் பலர் வந்தனர். அவர்களிடம், அங்கேயிருந்த ஒரு சிறிய அண்ணா சிலைக்கு மாலைகளை அணிவித்துப் போகும்படி எம்.ஜி.ஆர் கூறினார். வெற்றியைக் கண்டு கூத்தாடாமலும், தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் இருக்கம் மனப்பக்குவத்தைப் புரட்சித்தலைவர் எப்பொழுதோ பெற்றுவிட்டார்!

மாற்றுக் கட்சியினர் கூறியதுபோல புரட்சித் தலைவர் இந்திரா காங்கிரசுக்குக் கட்டுப்பட்டவரல்ல என்பதையும் அந்த வெற்றி பறைசாற்றியது! அவ்வாறெல்லாம் மாயத்தேவருக்காக உழைத்த உழைப்பை மாயத்தேவர் மறந்து விட்டு மீண்டும் தி.மு.கவில் 1980 ஆம் ஆண்டு இணைந்ததுதான் வேதனை.

தொடரும்...

Wednesday, December 29, 2010

எம்.ஜி.ஆர் 24


இந்திரா காங்கிரஸ் சார்பில் பிரதமர் இந்திராகாந்தியைத் தவிர எஞ்சியுள்ள மத்திய அமைச்சர்களுள் பெரும்பாலோர் திண்டுக்கல் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தனர். சி.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், ஐ.கே.குஜ்ரால், ஷா நவாஸ்கான், கே. பிரம்மானந்த ரெட்டி, கே.வி. ரகுநாத ரெட்டி, கே.ஆர்.கணேஷ், பகவத் ஜா ஆஸாத், அப்துல் கபூர், உமாசங்கர் தீட்சித் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். அனைத்து இந்திய காங்கிரஸ் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பொதுச்செயலாளர் மரகதம் சந்திரசேகர் முதலியோரும் திண்டுக்கல் பிரசாரத்திற்குச் சென்றனர். திண்டுக்கல் தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் இந்திரா காங்கிரஸ் மிகத் தீவிரமாகய் இருந்தது என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும்.

ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காகப் பெருந்தலைவர் காமராஜர் மிகவும் தீவிரமாய்ப் பிரச்சாரம் செய்தார். அவரோடு ஸ்தாபன காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர்களான நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா முதலியோரும் திண்டுக்கல் தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தனர்.

மேற்சொன்ன அரசியல் ஜாம்பவான்களின் கிடுக்கித் தாக்குதலை எதிர்த்து மாயத்தேவரை வெற்றி பெறச் செய்யும் இமாலயப் பணியை ஆறுமாதக் குழந்தையான அண்ணா தி.மு.க. மேற்கொண்டது. அந்தக் கட்சியிலோ புரட்சித்தலைவர்தாம் மக்களை ஈர்க்கும் சக்தி கொண்ட ஒரே தலைவராய் இருந்தார். பொருளாதார பலமோ மிக மிகக் குறைவு. என்றாலும், புரட்சித்தலைவர் அந்த இமாலயப் பணியைத் தம் தோளில் சுமந்துகொண்டு இரவும் பகலும் பாடுபட்டார். அவர், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குப் பிரச்சார வேனில், வேட்பாளர் மாயத்தேவரையும் ஏற்றிக்கொண்டு புறப்படுவார்; மறுநாள் காலை 6 மணி வரை விடிய விடிய தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

புரட்சித்தலைவரைக் காண்பதற்காக ஆண்களும் பெண்களும் ஒவ்வோர் ஊரிலும் சாலை ஓரத்திலேயே காத்துக் கொண்டு நிற்பார்கள். அவர் இரவில் வர நேரிட்டாலும் அவரைக் காண்பதற்காகப் பகல் முழுக்கச் சாலை ஓரங்களிலேயே மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்! அக்கம் பக்கத்துக் கிராமத்து மக்கள் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து, நள்ளிரவு வரை காத்திருந்து, புரட்சித்தலைவரின் பேச்சைக் கேட்டார்கள்.

புரட்சித் தலைவரின் சலியாத உழைப்புக்கும் அயராத சுற்றுப்பயணத்த திட்டத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் வேட்பாளர் மாயத்தேவரே திணறினார். பல நள்ளிரவுக் கூட்டங்களில் புரட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே! அவர் அருகில் நிற்கும் வேட்பாளர் மாயத்தேவர் பசி மயக்கத்தாலும், சோர்வாலும் புரட்சித் தலைவரின் தோளிலேயே சாய்ந்து விடுவார்! அவரைத் தாயன்போடு தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்வார் புரட்சித் தலைவர்!

திண்டுக்கல் தொகுதிக்குப் பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து தேர்தல் பணியாற்றினர். அண்ணா தி.மு.க. கூட்டங்களில் கல்லெறிந்தனர்; அடி தடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்; அ.தி.மு.க. தொண்டர்களைக் கண்ட இடங்களில் வெட்டினர். கை கால்களை உடைத்தனர்; பிரச்சார வேன்களைக் கவிழ்த்தனர். வாக்காளர்களை அச்சுறுத்தினர்; இந்த வெறியாட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதியில் முதன்முதலில் களபலியானவர் வத்தலகுண்டு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரான ஆறுமுகம் ஆவார். இரத்த வெள்ளத்தில் பிணமாகி மிதந்த அவரைக் கண்ட பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ”பதிலுக்குப் பதில்!… பழிக்குப் பழி!” என்று கிளம்பிவிட்டனர். அந்தச் செய்தியை அறிந்ததும், எம்.ஜி.ஆர் விரைந்து சென்று, கம்பும் கழிகளும் அரிவாளும் தாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கில் திரண்டு விட்ட அ.தி.மு.க. தொண்டர்களை வழிமறித்ததார்.

அறிஞர் அண்ணாவின் தாரகமந்திரமான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை நெஞ்சில் சுமந்து அண்ணாவின் மேல் ஆணையிட்டு, அனைவரையும் அமைதிப் படுத்திக் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு அன்று எம்.ஜி.ஆர். செய்திருக்காவிட்டால் திண்டுக்கல் நகரம் போர்க்களமாகியிருக்கும்.

தொடரும்...

Tuesday, December 28, 2010

எம்.ஜி.ஆர் 23


அக் கூட்டணியை – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை – ‘குட்டி காங்கிரஸ்’ என்றும் , இந்திரா காங்கிரஸின் எடுபிடி என்று தி.மு.க. சாடியது.பெருந்தலைவர் காமராஜரும், தந்தைப் பெரியாரும் புரட்சித்தலைவரின் அரசியல் திறமையைச் சரிவர எடையிடாமல் அவரை வெறும் நடிகர் என்னும் கண்ணோட்டத்திலேயே கணித்தனர்.ஆனால், மூதறிஞர் இராஜாஜியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சினரும் புரட்சித் தலைவரின் சக்தியை மிகவும் சரியாகக் கணித்து அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை நல்கினர்.

தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்ட்பிளாக், முஸ்லிம் லீக் தமிழரசுக் கழகம் ஆகிய கட்சிகள் ஓரணியில் இருந்தன.பொதுவாக இந்திரா காங்கிரஸ் புரட்சித தலைவரை ஆதரித்தாலும், அதில் ஒரு பகுதியினர் புரட்சித்தலைவரின் அரசியல் சக்தியைப் புரிந்து கொள்ளாமல் இருந்தனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் திண்டுக்கல் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திரா காங்கிரஸ் போட்டியிட விரும்பியது. மேலும் அக் கட்சியின் மேலிடம் அ.தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் தம் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்று விரும்பியது.

ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்பொழுது அரசியலில் ஏழு மாதக் குழந்தையாகவே இருந்தாலும், தமிழக அரசியலில் தன் முத்திரையைப் பதிக்க விரும்பும் ஓர் இயக்கமாக இருந்தது.ஆனால், இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைமை திண்டுக்கல் தொகுதியைத் தங்களுக்கே விட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்தியது.

திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதை ஆதரிப்பதும் உறுதியாகி விட்டது.ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதும் உறுதியாகிவிட்டது. அதைச் சுதந்திரக்கட்சி ஆதரித்தது.இந்த நிலையில் புரட்சித்தலைவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

"அண்ணா தி.மு.க. என்பது திராவிட இயக்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக இந்திரா காங்கிரஸ் தூண்டிவிட்டுத் தொடங்கி வைத்த ஓர் அமைப்புத்தான். தி.மு.க. வைப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி முடித்ததும் எம்.ஜி.ஆர். தம் கட்சியை இந்திரா காங்கிரஸ் கட்சியோடு இணைத்துவிட்டு சினிமாவில் நடிக்கப் போய்விடுவார்” என்று முதல்வர் கருணாநிதி அடிக்கடி அப்போது கூறிக்கொண்டிருந்தார். அதனால், மக்களுள் ஒரு சாரார் புரட்சித்தலைவரின் இயக்கம் நீடித்து நடக்குமா என்று சந்தேகப்பட்டனர்.

மேற்குறித்த சந்தேகங்களையெல்லாம் போக்கும் வகையில் புரட்சித் தலைவர் ”திண்டுக்கல் தேர்தலில் தம் கட்சி போட்டியிடும்; இந்திரா காங்கிரசுக்கு அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாய் அறிவித்தார். கே. மாயத்தேவர் என்பவரை தம் கட்சி வேட்பாளராகவும் தேர்வு செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.வை ஆதரிப்பதாக அறிவித்தது.இந்திரா காங்கிரஸ், கரு. சீமைச்சாமி என்பவரை வேட்பாளராக நிறுத்தியது.தி.மு.க. சார்பில் பொன். முத்துராமலிங்கம் போட்டியிட்டார். ஸ்தாபன காங்கிரஸ் என்.எஸ்.வி. சித்தனைப் போட்டிடச் செய்தது. இந்த நான்கு வேட்பாளர்களுமே முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்திரா காங்கிரசோ மத்தியில் ஆளுங்கட்சி, அவ்விரு கட்சிகளும் தங்கள் பலம் முழுவதையும் பிரயோகித்துக் கடுமையாகப் பிரச்சாரம் செய்தன். தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் திண்டுக்கல்லிலேயே முகாமிட்டு கருணாநிதியும் தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்தார்.

தொடரும்...

Monday, December 27, 2010

எம்.ஜி.ஆர் 22



தமிழக அமைச்சரவை மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றம் சாட்டி புரட்சித் தலைவரும், எம். கல்யாணசுந்தரமும் நவம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதியிடம் கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியலை, ஜனாதிபதி அவர்கள் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் இந்திரா காந்தி அதைப் படித்துவிட்டு, அதற்கு முதல்வர் கருணாநிதியின் பதிலைக் கோரி, அதன் நகலை முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அதைப்பற்றி முதல்வர் கருணாநிதியிடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, ”பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார். ஆனால், மத்திய அரசுக்கு அந்தப் பதிலையே கூற முடியுமா? அதனால், ஊழல் பட்டியலில் உள்ள ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் மிக விளக்கமான பதில் அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினார், கருணாநிதி. 286 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை 1972- ஆம் ஆண்டு டிசம்பர் 14- ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்திலும் சமர்ப்பித்தார்.

டிசம்பர் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருணாநிதி அமைச்சரவையின் மீது சாட்டப்பட்ட ஊழல் புகார்களைப் பிட்டுப் பிட்டு வைத்தனர். முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு அனுப்பிய பதில் அறிக்கையின் சாராம்சத்தை சபையில் சமர்ப்பித்ததோடு, தம் அமைச்சரவை மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் ஒன்றையும் தாமே முன்மொழிந்து நிறைவேற்றச் செய்தார்.

தமிழக அமைச்சரவை மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரிக்க விசாரணை கமிஷனை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், சட்டமன்றத்தில் முதல்வர் வாதிட்டார். ஆனால் அனைத்து எதிர்கட்சிகளும் விசாரணைக் கமிஷன் அமைத்தே தீரவேண்டுமென்று வலியுறுத்தின. ஆனால், அதை அலட்சியம் செய்வது போலத் தி.மு.க. அரசு ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷனை நியமிக்க ஒரு மசோதா கொண்டு வந்தது.

ஊழல் செய்தவர்களைப் பாதுகாக்கவும், ஊழல் புகார் கூறவோரை அச்சுறுத்தும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவை கொண்டு வந்த தி.மு.க. அரசைப் புரட்சித் தலைவரும், இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் மூதறிஞர் ராஜாஜியும், முன்னாள் முதல்வர் பக்தவத்சலமும் கடுமையாக்க கண்டித்தனர். பத்திரிகைகள் அனைத்தும் இந்த மசோதாவை சூழ்ச்சி வலை’ என்று வருணித்தன. ஆனால், தி.மு.க. அரசு எதைப் பற்றயும் கவலைப்படாமல் முறையற்ற முறையில் மசோதாவை நிறைவேற்றியது.

இந்நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில், 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாங்கம் என்னும் தி.மு.க. எம்.பி. மரணமடைந்தார். அதனால் அங்கே இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.

அப்பொழுது தமிழக அரசியல் களத்தில் அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகச் சேர்ந்திருந்தன. அதற்கு முக்கிய காரணம், 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாகியிருந்ததுதான். 1971 – இல் தி.மு.க.வோடு அணி சேர்ந்திருந்த கம்யூனிஸ்டு இந்திரா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதை விட்டு விலகின; புரட்சித் தலைவரின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை உற்சாகமாக ஆதரித்தன.




தொடரும்...

Saturday, December 11, 2010

எம்.ஜி.ஆர் 21


சட்டமன்றத்தை ஒத்தி வைத்தால் அதனை மீண்டும் கூட்டுகின்ற அதிகாரம் சபாநாயகரிடமே இருக்கும். அம்மரபிற்கு மாறாக, முதல்வர் கருணாநிதியின் ஆலோசனைப்படி 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தை ஆளுநர் கூட்டினார்.

சபாநாயகர் மதியழகன் சபையை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். முதல்வர் கருணாநிதியோ கவர்னரிடம் எடுத்துக்கூறி மெத்த சிரமப்பட்டு அதை டிசம்பர் 2 – ஆம் தேதிக்கு மாற்றினார். டிசம்பர் 2 ஆம் தேதிக்கும் 5 ஆம் தேதிக்கும் இடையில் இருந்தது இரண்டே தினங்கள்தாம். அந்த இரண்டு நாள்கள் போருத்திருப்பதால் எந்தப் பிரளயமும் நடந்து விடப்போவதில்லை! இருந்தாலும் முதல்வர் கருணாநிதி ஏன் இப்படி நடந்து கொண்டார்? சபாநாயகரை மட்டம் தட்டவா? அது இன்று வரை யாருக்கும் புரியாத விஷயம்!

சபாநாயகர் மதியழகன் அந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிடவில்லை,
சட்டசபையைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் சபாநாயகருக்கே பூரண உரிமையுண்டு. தம் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கவர்னர் கூட்டத் தொடரையே இரத்து செய்த்து (Prorogue) செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்மனு’ தாக்கல் செய்தார், சபாநாயகர் மதியழகன். ஆனால், உயர்நீதிமன்றம் அந்தப் பிரச்சனையில் ஒரு முடிவு சொல்வதற்கு முன்பாகவே, 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்ற ஆளுநரின் உத்தரவுப்படி கூடியது. சபாநாயகர் மதியழகன் அந்தக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

சபை கூடியதும் தி.மு.க. அரசு மீது நம்பிக்கயில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த சபாநாயகர், தீர்மானத்தின் மீது பேசும்படி புரட்சித்தலைவரை அழைத்தார். புரட்சித் தலைவரும் எழுந்து நின்று பேசத் தொடங்கியதும் அவரைப் பேச விடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் பலர் கூட்டலிட்டுத் தடுத்தனர். அப்போது அவை முன்னாள் நாவலர் எழுந்து நின்று, சபாநாயகர் மீது கொடுகப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானமந்தான் முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு சபாநாயகர் மதியழகன், அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்கெனவே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது என்று கூறிப் புரட்சித் தலைவரைத் தொடர்ந்து பேச அனுமதித்தார்.

அப்பொழுது கல்வி அமைச்சரும் அவை முன்னவருமான நாவலர் எழுந்து. துணைச் சபாநாயகர் பெ. சீனிவாசன் தலைமை வகித்து தொடர்ந்து சபையை நடத்த வேண்டும்” என்று ஒரு திடீர்த் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுங்கட்சிக் கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆதரிப்பதாகக் குரல் எழுப்பினார்கள். உடனே துணை சபாநாயகர் பெ.சீனிவாசன் சபாநாயகர் இருக்கையை நோக்கிப்பாய்ந்து சென்றார். சபாநாயகர் மதியழகனோ தம் இருக்கையை விட்டுச் சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தார்.உடனே தி.மு.க. உறுப்பினர் ஒருவர் ஒரு நாற்காலியைத் தூக்கி வந்து, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வைத்தார். துணைச் சபாநாயகர் பெ. சீனிவாசன் அதில் அமர்ந்து கொண்டு அவர் ஒரு பக்க சபையை நடத்தத் தொடங்கினார்.

இவ்வாறு, ஆளுங்கட்சி சபாநாயகராகத் துணை சபாநாயகரான பெ.சீனிவாசன் இருந்துகொண்டும், எதிர்க்கட்சி சபாநாயகராக மதியழகன் இருந்து கொண்டும் போட்டி சட்டசபை நடத்தினர். அதனால் கூச்சலும் குழப்பமும் எழுந்தன.முடிவில், பிற்பகல் 2 மணிக்குச் சபாநாயகர் மதியழகன் சபையை டிசம்பர் 4 – ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு சபையை விட்டு வெளியேறினார். அவரோடு அண்ணா தி.மு.க. காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள்.

ஆனால், போட்டி சட்டமன்ற சபாநாயகராகச் செயல்பட்ட பெ.சீனிவாசன் தம் சட்டசபையை மேலும் அரைமணிநேரம் தொடர்ந்து நடத்தினார்.சபையை விட்டு வெளியேறிய சபாநாயகர் மதியழகன், அவர் தம்பி கே.ஏ.கே மற்றும் புரட்சித்தலைவர் ஆகிய மூவரும் ஒரு காரில் புறப்பட்டனர். அப்போது வெளியே கூடியிருந்த உறுப்பினர்கள் அவர்களை எதிர்த்துக் கோஷமிட்டதோடு செருப்புகளையும் எடுத்து வீசினர்.

இந்த சட்டமன்றம் முடமாகிவிட்டது. தி.மு.க. ஆட்சி நீடிக்கும் வரை இந்தச் சட்டசபைக்குள் நான் நுழையமாட்டேன் என்று அன்றுதான் அறிவித்தார், புரட்சித் தலைவர். அதற்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நீடித்த மூன்றாண்டு காலமும் புரட்சித்தலைவர் தமிழ சட்டமன்றக் கூட்டங்களுக்குச் செல்லாமல் புறக்கணித்தார்.


தொடரும்...

Friday, December 10, 2010

எம்.ஜி.ஆர் 20

அப்பொழுது சிதந்திராக் கட்சியின் தலைவராய் இருந்த மூதறிஞர், முன்னாள் கவர்னர் ஜெனரல் இராஜாஜி, புரட்சித் தலைவரின் சக்தியையும், அவரது புனிதப்போரின் அவசியத்தையும் மிகத் துல்லியமாய் எடை இட்டு வரவேற்றுப் பாராட்டினார்.

துரியோதனனும் அவன் சகோதரர்களும் இழைத்த தீமையைவிடக் கருணாநிதியும் அவர் குழுவினரும் தமிழ்நாட்டிற்கு அதிகமான தீமையைச் செய்திருக்கின்றனர். நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றை அவர் ஆட்சியில் காணோம். அதற்கு மாறாக ஊழலும் லஞ்சமும் அநாவசியமான செலவினங்களுந்தாம் எங்கும் எதிலும் காணப்படுகின்றன. அரசாங்க அலுவலகங்கள் கொள்ளையடிக்கும் கூடாரங்களாய் மாறிவிட்டன. காமராஜர் போன்ற தலைவர்கள் இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லியும், தி.மு.க.வின் திட்டமிட்ட பிரச்சாரங்கள் அவர் பேச்சுகளை மக்கள் மதிக்காதவாறு செய்துவிட்டன.

இந்த நேரத்தில்தான், பாண்டவருக்கு கிருஷ்ணபரமாத்மா உதவிக்கரம் நீட்டியதுபோல் எம்.ஜி.ஆர். இந்த அசுரர்களை ஒழிக்க முன் வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். எதைச் சொன்னாலும் மக்கள் அதைச் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். எனவே இந்தத் தர்ம யுத்தத்தில் அவர் வெற்றி பெற இருப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! நேற்றுவரை நெருங்கிப் பழகிய பதவியிலிருக்கும் நண்பர்களை எதிர்க்க மிகுந்த மனதிடம் வேண்டும். தீமை செய்யும் நண்பர்களை எதிர்த்துப் போராடும் எம்.ஜி.ஆரையும், அவரது ஆதரவாளர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்! என்று கல்கி, மற்றும் ஸ்வராஜ்யா பத்திரிகைகளில் எழுதியிருந்தார் இராஜாஜி.

திராவிட இயக்கத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவர் கே. ஏ. மதியழகன். அவர் அப்பொழுது (1972) தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருந்தார். “தி.மு.க.வில் கருணாநிதியின் கை ஓங்குவதையும் தி.மு.க ஆட்சியில் தவறுகள் பெருகிக் கொண்டிருப்பதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சபாநாயகர் பதவி வகிக்கும் மதியழகனும் புரட்சித் தலைவரின் இயக்கத்தை ஆதரிக்கத் தொடங்கினால், தம் நிலைமை மிகவும் பலவீனமாகிவிடும் என்று முதல்வர் கருணாநிதி அஞ்சினார். ஆகவே
அவர், தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் எம். பி. யை சபாநாயகர் மதியழகனிடம் அனுப்பி அவரைச் சரிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், எஸ். டி. எஸ். அவர்களையே சரிக்கட்டி புரட்சித்தலைவரோடு சேரும்படி செய்துவிட்டார், மதியழகன். இதை தனதுநூல் ஒன்றில் கருணாநிதி வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், 1974-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியன்று புரட்சித்தலைவரும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களும் இணைந்து ‘ஊழல் ஒழிப்புப் பேரணி’ நடத்தினர்.

அந்த ஊர்வலத்தை சபாநாயகர் மதியழகன் அண்ணாசாலையில் ஓரிடத்திலிருந்து பார்வையிட்டார். அதை அறிந்து பதை பதைப்புற்றார், முதல்வர் கருணாநிதி, நவம்பர் 13 ஆம் தேதியன்று கூட இருக்கும் தமிழக சட்டமன்றத்தில், சபாநாயகர் மதியழகன் எப்படி நடந்து கொள்வாரோ என்று கவலைப் பட்டார். நவம்பர் 13 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடியது.
ஆளுங்கட்சியான தி. மு. கழகம் சபாநாயகர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை 30-10-72 அன்று அளித்திருந்தது. ஆனால், அதைச் சட்டசபைச் செயலாளர் 7-11-72 அன்றுதான் தமக்குத் தெரிவித்தார் என்றும், அது முறைகேடான ஒரு செயல் என்றும், சபாநாயகர் கூறினார். பின்பு எதிர்க்கட்சியினர் அமைச்சரவைமீது நம்பிக்கை இல்லை என்று கூறி, சட்டசபையைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்கு நிற்கத் தயாரா என்று ஆளுங்கட்சி முதல்வருக்குச் சவால் விட்டனர். அச்சவாலை ஏற்கலாம் என்று சபாநாயகரே முதல்வருக்கு யோசனை கூறினார்; அடுத்து அவர் அதைப்பற்றி யோசிக்க அவகாசம் அளித்து, 22 நாட்களுக்குச் சபையை ஒத்திவைத்தார்.

ஆனால், அன்று (13-11-72) மாலையில் தி.மு.க தன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, சபாநாயகரின் மேல் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்னும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஒரு கடிதம் மூலம் ஆளுநருக்குத் தெரிவித்தது. இவ்வாறு சபாநாயகர்மீது நம்பிக்கை இல்லையென்று சபைக்கு வெளியில் கூட்டம் நடத்தி ஆளுநருக்கு மனுக் கொடுத்தது, இந்திய வரலாற்றிலே முதல் முறையாகும்.

தொடரும்...

Thursday, December 9, 2010

எம்.ஜி.ஆர் 19



1972 – ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 5 – ஆம் தேதியன்று அண்ணா சாலையிலிருந்து பத்து இலட்சம் பேர் கொண்ட பிரும்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது. அதற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி, கிண்டி கவர்னர் மாளிகைக்குச் சென்று அப்போதைய ஆளுநர் கே.கே.ஷாவைச் சந்தித்தார். எம்.ஜி.ஆருடன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் எம். கல்யாண சுந்தரமும் இருந்தார்.

ஆளுநர் கே.கே.ஷோ, புரட்சித் தலைவர் கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியலை பெற்றக்கொண்டார். அவர் அந்தப் புகார்களை முதல்வர் கருணாநிதிக்கே அனுப்பி, அவர் பதிலைப்பெற்று அதற்குப் பின்னரே அதை மத்திய அரசுக்கு அனுப்ப முடியும் என்றும், அதுதான் சட்டப்படியான முறை என்றும் கூறினார்.
ஆளுநரின் அச்சட்ட விளக்கத்தைப் புரட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால், அந்த ஊழல் புகார்ப்பட்டியலை ஆளுநரிடம் கொடுக்காமல் திரும்பினார், புரட்சித் தலைவர். நவம்பர் 6 – ஆம் தேதியன்று அவர் கம்யூனிஸ்டுத் தலைவர் கலியாண சுந்தரம், கே. பாலதண்டாயுதம், கே.ஏ.கே , எஸ்.டி. சோமசுந்தரம் ஆகியோரை அழைத்துக்கொண்டு புதுடெல்லிக்குப் பறந்தார்; அன்றே இந்திய ஜனாதிபதி வி.வி. கிரியைச் சந்தித்து; அந்த ஊழல் புகார்ப்பட்டியலை ஜனாதிபதியிடம் கொடுத்தார். ஒர் அமைச்சரவையின் மீது ஒரே நேரத்தில் இரு ஊழல் புகார்ப்பட்டியல்கள் கொடுக்கப்பட்டது, இந்திய அரசியல் வரலாற்றிலேயே அதுதான் முதல் தடவை ஆகும் எனக் கூறப்பட்டது.

அன்றைய தினம் தலைநகரத்துப் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார், புரட்சித்தலைவர். சர்வதேசத் தலைவர்களையே கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் பத்திரிகையாளர்கள் புரட்சித்தலைவரை மட்டும் விட்டுவிடுவார்களா? எம்.ஜி.ஆரிடமும் பத்திரகையாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் புரட்சித் தலைவர் தயக்கமின்றி நிதானமாயும் ஆணித்தரமாயும் பதிலளித்தார்.

அப்பொழுது ஒரு நிருபர், ”தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டீர்களா?” என்று கேட்டார்.
அதற்குப் புரட்சித் தலைவர், ”நாங்கள் அப்படிக் கோரவில்லை. ஆனால், நாங்கள் கொடுத்த ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தால், தி.மு.க. அமைச்சரவை உடனடியாகத் தானாகவே பதவி விலகுவதுதான் நியாயம். நாகரிகமுள்ள எந்த அரசாங்கமும் அப்படித்தான் செய்யும்!” என்று மிகவும் சாதுரியமாகப் பதிலளித்தார்.

எம்.ஜி.ஆரின் அறிவுக்கூர்மையும், அரசியல் சாதுரியத்தையும் டெல்லிப் பத்திரிகையாளர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். எம்.ஜி.ஆர் அளித்த பட்டியிலிலுள்ள ஊழல்கள் ஒவ்வொன்றுக்கும் கைமாறிய தொகைகள், சம்பந்தப்பட்ட நபர்கள் முதலிய அனைத்தும் ஆதாரப் பூரவமாய்க் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஊழல் பட்டியலைப் படித்துப் பார்த்த ஜனாதிபதி வி.வி.கிரி அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தார். அந்தப் புகார்ப் பட்டியலை முழுமையாக ஆராய்ந்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியும் அளித்தார். இவ்வாறு புரட்சித் தலைவரின் டெல்லிப் பயணம் வெற்றிகரமாய் முடிந்தது.
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும், இந்திரா காங்கிரசும் புரட்சித் தலைவரின் இந்த ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை உற்சாகமாக ஆதரித்தன; துணை நின்றன.

துரதிர்ஷ்டவசமாகப் பெருந்தலைவர் காமராஜர் அப்பொழுது “தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்” என்று கூறினார்.
இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்டுக் கட்சியும் ஆதரிக்கும் எதையும் ஆதரிக்க இயலாத மனநிலையில் அப்பொழுது அவர் இருந்தார். அவர், பிரதமர் இந்திரா காந்தியை எதிர்க்கும் சிண்டிகேட் காங்கிரஸ் என்று வழங்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸின் தலைவராத் தனிமைப்பட்டு நின்றார். அதனால்தான் புரட்சித் தலைவரின் புனிதப் போரையும், அவர் தொடங்கியுள்ள புதிய இயக்கத்தையும் அவரால் அப்பொழுது சரியாகக் கணிக்க இயலவில்லை.

தொடரும்...

Tuesday, December 7, 2010

எம்.ஜி.ஆர் 18



புரட்சித் தலைவர் நடித்துக் கொண்டிருந்த படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் எல்லாருமே இலட்சாதிபதிகள் அல்லர் அவருள் சிலரைத தவிர மற்றவர்களெல்லாம் சாமானியர்கள்தாம்.அவர்களின் ஒரே முதலீடு புரட்சித் தலைவர்தான்.அவர் பெயரைச் சொல்லிக் கடன் வாங்கித்தான் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கட்டப் படப்பிடிப்புக்கும் எம்.ஜி.ஆரின் கால் ஷீட்டுக்களைக் காட்டி விநியோகஸ்தர்களிடமும், பைனான்சியர்களிடமும் பணம் வாங்கித்தான் அவர்கள் தங்கள் தயாரிப்பைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்த விநியோகஸ்தர்களையும் பைனான்ஸியர்களையும் அழைத்து சிலர் தொடர்ந்து மிரட்டிகொண்டருந்ததனால் அவர்களுள் சிலர் வாக்களித்த தொகைகளைக் குறிப்பிட்ட காலத்தில் கொடுக்காமல் காலம் கடத்தினார்கள். அதன் விளைவாகப் புரட்சித் தலைவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியிடப்பட முடியாமல் தாமதப்பட்டன.

அப்படி காலதாமதமாய் வெளிவந்த சில படங்கள் சிறப்பாக ஓடி வெற்றிப்பெற்றாலும் தயாரிப்பாளர்களுக்கு நட்டமே ஏற்படுத்தின; விநியோகஸ்தர்களும், திரையரங்க அதிபர்களும் தாம் இலாபம் பெற்றனர். அதற்குக் காரணம், படத்தயாரிப்பாளர்கள் பலரும் பைனான்ஸியர்களிடம் தொடரும் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்ததுதான். குறிப்பிட்ட காலத்திற்குள் படம் வெளிவந்தால் வட்டி குறையும்; தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு இலாபம் கிட்டும். தாமதமாகப் படம் வெளிவந்தால் அதிகரிக்கும் வட்டித் தொகை அவர்களுடைய இலாபத்தைக் குறைத்துவிடும்! இதுதான் திரையுலக பொருளாதாரம்.

இதை நன்கு அறிந்திருந்த எம்.ஜி.ஆரின் எதிரிகள் பைனான்ஸியர்ளை மிரட்டி, புரட்சித் தலைவரின் படங்களுக்கு வாக்களித்தப்படி உரிய காலத்தில் கடன் தொகையைக் கொடுக்காமல் தாமதிக்கச் செய்தனர். அதன் மூலம், புரட்சித் தலைவரை நடிக்கச் செய்து திரைப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பலரை நட்டமடையச் செய்தார்கள்.

பின்னர், எம்.ஜி.ஆரை நடிக்கச் செய்து படம் தயாரிப்பவர்களுக்கு இனிமேல் இதுதான் கதி” என்று பிரச்சாரமும் செய்தனர். இவ்வாறு தொழில்துறையிலும் புரட்சித் தலைவரை செயலற்று விடச் செய்யவும் ஒழித்துக் கட்டவும் அவர் எதிரிகள் பெரும் முயற்சி செய்தனர். அதையும் மீறி புரட்சித் தலைவர் திரைப்படத் தொழிலில், அசையாது நிமிர்ந்து நின்றார். 1972 முதல் 1978 வரை ஆறாண்டுக் காலத்தில் அவர் 16 வெற்றிப் படங்களைக் கொடுத்தார்! இந்த முனையிலும் அவர் எதிரிகள் தோல்வியையே தழுவினார்கள்.

1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதியன்று புரட்சித் தலைவரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்; 14 – ஆம் தேதியன்று நிரந்தரமாகவே (டிஸ்மிஸ்) நிக்கினார்கள்; எம்.ஜி.ஆர் 16 – ஆம் தேதியன்று அது பற்றி அறிவித்தார். 18 – ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 3 ஆம் தேதிக்குள்- எண்ணிப் பதினைந்தே நாட்களுக்குள் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலும் 6000 கிளைகள் தொடங்கப்பட்டன. 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 15 நாள்களில் 10 இலட்சம் உறுப்பினர்க்கைச் சேர்ந்த சாதனையை உலகில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதற்கு முன்னர் சாதித்ததே இல்லை.

1949 இல் தொடங்கப்பட்ட தி.மு.க.வுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் – அதாவது, 1972இல் தான் -18,000 கிளைகளும், 15 இலட்சம் உறுப்பினர்களும் இருப்பதாகத் தி.மு.க. தலைவர் கருணாநிதியே அந்தச் சமயத்தில் ஒப்புக்கொண்டார். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் பத்து இலட்சம் உறுப்பினர்களையும், ஆறாயிரம் கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய சாதனை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட சாதனை இது என்றுதான் கூறவேண்டும். இந்த சாதனை, புரட்சித் தலைவருக்கு தி.மு.கழகத்திலும், பொதுமக்கள் மத்திலும் எத்துணை செல்வாக்கு இருந்தது என்பதை எடுத்துக்காட்டியது.
தொடரும்...

Monday, December 6, 2010

எம்.ஜி.ஆர் 17



அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியிடப்படவேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.

அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள் அந்த விநியோகஸ்தர்கள் அவர்கள் அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்க மறுத்துவிட்டனர்.

படவிநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், இலட்சம் இலட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக்க முடியாது எனத் திரையரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!

பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.

”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!

திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல இலட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள். பின் வாங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்களுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார். தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார். அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!




தொடரும்...

Friday, December 3, 2010

எம்.ஜி.ஆர் 16


நாஞ்சில் மனோகரன் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராவார். அவர் 1972 ஆம் ஆண்டில், பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்வதற்காகச்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் சென்றார். அவரைப் போலவே, பாராளுமன்றக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள், நாஞ்சிலாரைக் கண்டதும் தி.மு.க.வினர், பதட்டமடைந்தனர்.

”டேய் துரோகி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே நாஞ்சிலார் மீது பாய்ந்து அவரைத் தாக்கினார்கள்; இதய நோயாளியான அவருடைய நெஞ்சில் சரமாரியாக குத்தினார்கள். அங்கிருந்து பதறி ஓடிய நாஞ்சிலார், விமான நிலைய நிருவாகியின் அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டார். அங்கிருந்து தொலைபேசியின் மூலம் புரட்சித் தலைவருடன் தொடர்புகொண்டு தம்மைக் காப்பாற்றும்படி வேண்டுகோள்விடுத்தார்.

புரட்சித்தலைவர் மனோகரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ”கவலைப்படாதீர்கள், இன்னும் பத்தே நிமிடத்தில் நம் ஆட்கள் பறந்து வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள்!” என்றும் கூறினார். புரட்சித் தலைவர் தொலைப்பேசியைக் கீழே வைத்துவிட்டு சத்யா ஸ்டுடியோ பத்மநாபனிடம் நாஞ்சில் மனோகரனின் நிலைமையைச் சொல்லி, ”உடனே தேவையான ஆள்களோடு போய் நாஞ்சிலாரைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார். அடுத்த நிமிடம் பத்மநாபன் பத்துப் பேரோடு ஒரு காரில் ஏறி மீனம்பாக்கத்தை நோக்கிப் பறந்து சென்றார். புரட்சித் தலைவருக்கோ அவர் நண்பர்களுக்கோ ஓர் ஆபத்து என்றால், தம்மைப் பலி கொடுத்தாவது காப்பாற்றத் துடிக்கின்ற அற்புதமான தொண்டர், பத்மநாபன்.

பத்மநாபன் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் புயல்போல் புகுந்து, தி.மு.க. எம்.பி.க்களின் முற்றுகையைத் தகர்த்தெறிந்தார்; நாஞ்சிலாரை மீட்டுக்கொண்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் புரட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார். இப்படி இன்னும் எத்தனையோ கொலை வெறித்தாக்குதல்களுக்கு அ.தி.மு.க.வினர். ஆளாகியுள்ளனர். அதே நாஞ்சில் மனோகரன் 1980 ஆம் ஆண்டு மறுபடியும் தி.மு.வில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதை இந்த இடத்திலே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவர் இணைந்தவுடன் தி.மு.க வில் அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது.

புரட்சித் தலைவர் அ.தி.மு.க வை ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அவருக்கும், தி.மு.கழகத் தலைமைக்கும் இடையில் கடைசி நேர சமரச முயற்சி ஒன்று நடந்தது. முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் அது சம்பந்தமாகச் சத்யா ஸடுடியோவில் புரட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன், தம் தலைவரைப் பார்ப்பதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர். அவரைக்கடற்கரைச் சாலையில் வழிமறித்துச் சைக்கிள் செயினால் தாக்கினார்கள்.

முசிறிப்புத்தன் அவர்களிடமிருந்து உயிர் தப்பிப் புரட்சித் தலைவரிடம் வந்து செய்தியைச் சொன்னார். ஒரு கால் சற்றே ஊனமான அவரைக் கொலை வெறியோடு தாக்கி, உடல்முழுக்க இரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்களே என்று புரட்சித் தலைவர் மிகுந்த வேதனையடைந்தார்.

அந்த நிமிடம் வரை தி.மு.க. வோடு சமாதானத்திற்கு இசைந்து விடலாம் என்றுதான் புரட்சித் தலைவரும் கருதிக் கொண்டிருந்தார். ஆனால், இரத்தக் கடாகத்தில் மூழ்கி எழுந்தவர் போலத் தம் முன்னால் இரத்தம் வழிய வழிய வந்து நின்ற முசிறிப்புத்தனைப் பார்த்ததும் புரட்சித் தலைவரின் உள்ளம் துடித்தது.

சமாதானம் பேச வந்தவர்களைப் பார்த்து, ” ஒரு பக்கம் சமாதானம் பேசுகிறீர்கள்; இன்னொருபக்கம் என் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்ககுதல்களை ஏவி விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்! இது என்ன நாடகம்? இனி மேல் உங்களோடு சமரசத்திற்கே இடமில்லை!” என்று கூறினார்.

அதற்குப் பின்னர்தான் சமரச முயற்சி தோற்றது. இவ்வாறு அ.தி.மு.க. தோன்றுவதற்கு முன்னும் பின்னும் நடந்த, கட்டவிழ்த்து விடப்பட்ட கொலை வெறித்தாக்குதல்கள் கணக்கிலடான்காதவை ஆகும். இத்தகைய வெறித்தாக்ககுதலுக்குப் பலியாகி உயிர் துறந்த கழகத் தோழர்களின் தொகை மட்டும் 20 ஆகும். ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கும் தி.மு.கழகத் தலைமைக்கும் சம்பந்தமில்லை என்றும், ஆங்காங்கே உள்ள உணர்ச்சிவசப்பட்ட சிலர் தாமாகவே அவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தி.மு.க. விளக்கம் அளித்தது.

அ.தி.மு.க. மீது தி.மு.க. வினர் தாக்குதல் தொடுத்தது ஒருபுறமிருக்க மறுபுறம் அண்ணா தி.மு.க. தொண்டர்களின், மீதும் முன்னணி வீர்ர்களின் மீதும் தி.மு.க. அரசு தொடுத்த கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் மொத்தம் 48000 ஆகும். இது மிகைப்படுத்தப்பட்ட தகவலோ, கற்பனையோ அல்ல. அது மட்டுமா? புரட்சித் தலைவர் மீது அரசு தொடுத்த வழக்குகள் மட்டும் 19 ஆகும்.

இப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திட ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறைகள், தொடர்ந்த பொய்வழக்குகள் தொடுத்த தாக்குதல்கள் ஆகியவை ஏராளம் ஆகும்! இவ்வளவையும் மீறித் தான் கட்சியைக் கட்டி வளர்த்தார். புரட்சித் தலைவர்!

தொடரும்...

Thursday, December 2, 2010

எம்.ஜி.ஆர் 15



புரட்சித் தலைவர் திரைப்படங்களில் வீராவேசத்தோடு சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார்; இருபது முப்பது பேரோடு ஏக காலத்தில் மோதி அவர்களைப் பந்தாடியிருக்கிறார். இக் காட்சிகளை அவர் நடித்த திரைப்படங்க்ளில் பார்த்திருக்கலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சிக் கொண்ட மாற்றுக்கட்சியினர் அவரை ‘அட்டைக்கத்தி’ வீரர், என்றும், பெரும்பாலான காட்சிகளில் தமக்குப் பதிலாகப் பிறரை நடிக்கச் செய்து, தாம் நடித்ததாக ஏமாற்றம் ‘டூப்’ சண்டை ஆடுபவர் என்றும் ஏளனம் செய்து கொண்டிருந்தனர்.

புரட்சித் தலைவர் தி.மு.க.விலிருந்து தனிக்கட்சி தொடங்கிய பின்னர் தி.மு.க.வினரும் அதே ஏளனப் பேச்சை மேடைதோறும் கூறிக்கொண்டிருந்தனர். அப்படி ஏளனம் செய்தவர்களெல்லாம் எம்.ஜி.ஆரின் வீரத்தையும், தோள் வலிமையையும் நேருக்கு நேராய்க் காணும் வாய்ப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க காலத்தில் கிட்டியது.

தமிழகம் முழுவதிலும் ஏராளமான தொண்டர்கள் புரட்சித்தலைவரின் இயக்கத்தில் தினசரி சேர்ந்து கொண்டிருந்தனர். சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட, அமைப்பாளர்களும் ஆளுங்கட்சியை விட்டு விலகினர். தாம் வகித்த பதவியின் மூலம் பெறக்கூடிய சலுகைகளையும் இலாபங்களையும் உதறினர்; கடுமையான அடக்கு முறைக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்த அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். அதைக் கண்ட தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்தது. அதனால் நாடு முழுக்க கடும் அடக்குமுறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அண்ணா தி.மு.க. தொண்டர்கள் தாக்கப்பட்டனர். ஏழை எளியவர்கள், கூலி வேலை செய்வோர், ரிக் ஷா, கைவண்டி இழுப்போர், மூட்டைத் தூக்குவோர், விவசாயக் கூலிகள், பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியோர்தாம் அ.தி.மு.க. தொண்டர்களுள் பெரும்பாலானவர்களாய் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் மீது ஒருபுறம், குண்டர்கள் தாக்குதல் தொடுக்கப்பட்டது; மற்றொரு புறம் பொய் வழக்கிட்டு அலைகழிக்கும் தாக்குதல் இடைவிடாமல் தொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டங்களுக்கு போலீஸ் அனுமதி வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டப்பட்டது. பொது அமைதிக்குப் பங்கமும் விளையும் என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது. அனுமதி பெற்று நடக்கும் அ.தி.மு.க. கூட்டங்களில் ஒரு கும்பல் கல் எறிந்து கலவரம் செய்தது; இன்னொரு கும்பல் நாய் நரியைப்போல ஊளையிட்டு இடையூறு விளைவித்தது. அ.தி.மு.க. மேடைப் பேச்சாளர்க்ள் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் தொடரப்பட்டன. புரட்சித் தலைவர் பேசிய பொதுக்கூட்டங்களைக்கூட ஒழுங்காக நடக்க விடாமல் தடுப்பதற்குச் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வளவுக்கும் மத்தியில்தான் புரட்சித்தலைவர் கட்சியைக் கட்டிக்காத்து வளர்க்க நேரிட்டது.


அந்த சமயத்தில் புரட்சித் தலைவர், கடலூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்றிருந்தார். அந்தக் கூட்டம் கடலூர் டவுன் ஹாலில் நடைபெறவிருந்தது. அக்கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் ஒருவர் குண்டர்கள் பலருடன் தடிக்கம்புகளுடனும் வந்து நின்றிருந்தார். புரட்சித் தலைவர் காரில் வந்து இறங்கினார். புள்ளிமானின் மீது பயும் புலியாக, அடியாள்களும் அவர்களைஅழைத்து வந்தவரும் புரட்சித் தலைவர்மீது பாய்ந்தனர். கடலூர் எம்.ஜி.ஆர் மன்றத் தலைவராகப் பணியாற்றியவர், இளைஞர் ஜனார்த்தனம் ஆவார். அவர் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் குறுக்கே புகுந்து புரட்சித் தலைவருக்குக் குறி வைத்து வீசப்பட்ட தடியடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டார். அதனால் புரட்சித்தலைவரின் மேல் ஓரடிகூட விழாமல் தடுக்கப்பட்டன. ஆனால், புரட்சித்தலைவரைத் தாக்க வந்த கொலைவெறியர்கள் வெறி அடங்காமல் மேலும் மேலும் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

அந்த வெறியர்களின் தாக்குதலைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தக் கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்குக் கோபம் எழுந்தது. உடனே அந்தக் கொலை வெறியர்களுக்கு மத்தியில் அவர் புலிபோல் பாய்ந்தார். அப்போது குண்டன் ஒருவன் எம்.ஜி.ஆர். தலையைக் குறி வைத்துக் கழியை ஓங்கினான். உடனே எம்.ஜி.ஆர். கழியை வெறுங்கையாலேயே தடுத்துப் பிடித்து, ஒரு சுழற்றுச் சுற்றிப் பிடுங்கினார். அடுத்த விநாடி அவர் கையிலிருந்த கழி, சக்ராயுதம்போல நாலாபக்கமும் சுழன்றது. தாக்க வந்த தடியர்களோ, மின்னல் வேகத்தில் தங்கள்மீது பாய்ந்த கழியின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல், ”ஐயோ! அம்மா” என்று அலறிக்கொண்டு பின்வாங்கி ஓடினார்கள். இரண்டே நிமிடம்தான் புரட்சித் தலைவர் கழியைச் சுழற்றினார். அவரைச் சூழ்ந்து நின்று தாக்க வந்த கும்பல் முழுவதும் அளறியடித்துக்கொண்டு சிதறி ஓடியது. திரைப்படங்களில் மட்டுமே புரட்சித்தலைவரின் புலிப்பாய்ச்சலையும் கைவண்ணத்தையும் கண்டு களித்திருந்த மக்கள் அன்று நேரிலும் கண்டு களித்தனர்! கடலூர் மக்களுக்குத்தான் அந்தப் பெரும் பேறு முதன் முதலாகக் கிட்டியது!

தாக்க வந்த குண்டர்கள் அனைவரும் கலைந்து ஓடியதும் காவல் துறையின் பெரிய அதிகாரிகளெல்லாம் விரைந்து வந்தனர்! புரட்சித் தலைவரை சூழ்ந்து நின்ற அவர் தொண்டர்களிடமே தங்கள் அதிகார முறுக்கைக் காட்டினர். அதைப்பார்த்து புரட்சித் தலைவரின் முகம் மேலும் சிவந்தது. ”உங்கள் கடமை உணர்வுக்கு மிக்க நன்றி! உங்கள் பாதுகாப்பை நம்பி நான் வெளியே வரவில்லை. தயவு செய்து எங்கள் கட்சிக் காரர்களைத் தொந்தரவு செய்யாமல் தூர விலகிச் செல்லுங்கள்!” என்று அவர் கூறினார். அதற்குப் பின் டவுன்ஹால் கூட்டம் தடையின்றிச் சிறப்பாக நடந்து முடிந்தது!

இது மட்டுமல்ல; 1972 -ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் தி.மு.க. அமைச்சரவை பதவி நீக்கம் செய்யப்பட்ட 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி வரை, சுமார் மூன்றேகாலாண்டுகளிலும் நடந்த எண்ணற்ற சம்பவங்களைப் புரட்சித் தலைவர் சந்திக்க நேர்ந்தது.




தொடரும்...

Wednesday, December 1, 2010

எம்.ஜி.ஆர் 14



அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.

புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த புரட்சித் தலைவர், அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் ‘தென்னகம்’ நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார். தங்கள் புரட்சிநாயகன் புதியகட்சியைத் தொடங்கிவிட்டார்; அக்கட்சிக்கு அறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டிவிட்டார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் அகமகிழ்ந்தனர்; ஆனந்தக் கூத்தாடினர். உடனடியாகத் தமிழகம் முழுவதிலும் அண்ணா தி.மு.க. கிளைகள் உருவாக்கப்பட்டன. கட்சிக் கொடிகள் அவசர அவசரமாய் உருவாக்கப்பட்டு ஏற்றப்பட்டன.

தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழர்கள் வாழும் பெங்களூர், பம்பாய் முதலிய நகரங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கிளைகள் உருவாக்கப்பட்டன. அதுவரை தி.மு.க. என்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்த கழகத்தை அதன்பின்னர் புரட்சித்தலைவர் ‘கருணாநிதி கட்சி’ என்றுதான் வழங்கினார்.

கருணாநிதி கட்சியிலிருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர். புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம் ஒன்றாய் இருந்தது. அடுத்த சில நாள்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.

அப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார், புரட்சித்தலைவர். பின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.



புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் எனப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. ‘மக்கள் திலகம்’ என்று அவரை முதன்முதலில் வழங்கியவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன் ஆவார். ‘புரட்சி நடிகர்’ என்று அவரை விளித்தவர், கலைஞர் கருணாநிதி ஆவார். ‘பொன்மனச் செம்மல் என்று வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் ஆவார்.! ஆனால் புரட்சி நடிகராய் விளங்கிய எம்.ஜி.ஆரை முதன் முதலில் புரட்சித்தலைவர்’ என்று வழங்கியவர் ‘தென்னகம்’ ஆசிரியரும், அ.தி.மு.க.வின் முதல் அமைப்புச்செயலாளரும், பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினருமான கே.ஏ.கிருஷ்ணசாமி ஆவார்.

அ.தி.மு.க.வின் சார்பில், 1972 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதியன்று, சென்னை கடற்கரை சீரணி அரங்கில் ஒரு பிருமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கே.ஏ.கே. ”இதுவரை நம் தலைவரை நாம் அனைவரும் புரட்சி நடிகர் என்றே வழங்கினோம். இனிமேல் அவர் புரட்சி நடிகர் அல்லர். புரட்சித் தலைவர்! ஊழலை ஒழித்துக்கட்டும் தர்மயுத்தத்தின் தானைத் தலைவர்! இனி மேல் நாம் அனைவரும் அவரைப் புரட்சித் தலைவர் என்றே வழங்க வேண்டும்!” என்று கூறினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம் ”புரட்சித் தலைவர் வாழ்க!, புரட்சித் தலைவர் வாழ்க!” என்று விண்ணதிர முழக்கமிட்டது. கடல் அலைகளின் ஓசை சில நிமிடங்கள் அமுங்கிவிட்டது போன்ற நிலை அங்கே தோன்றியது. புரட்சி நடிகராய் இருந்த மக்கள் திலகம், பொன்மனச்செம்மலாகிப் புரட்சித் தலைவராய் மாறிய வரலாறு இதுதான்!



தொடரும்...

Monday, November 29, 2010

எம்.ஜி.ஆர் 13

நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.

அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.

மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சித்தலைவர்.

உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள்.

காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.

காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர் ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.

காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.

இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேளவியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயந்தான்.

மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்.



தொடரும்....

Tuesday, November 23, 2010

எம்.ஜி.ஆர் 12



எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?

எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார். தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.

‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மக்கள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார். அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர். அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.

எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது. ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.

அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.

பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள். அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு மு.க்கமிட்ட மக்கள கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.

மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது. அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காக்க் கண்விழித்துக் காத்திருந்தது.




தொடரும்...