Thursday, October 7, 2010

எம்.ஜி.ஆர் 11


எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.

ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.

அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.

பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.

அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு மு.க்கமிட்ட மக்கள கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.

மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.

அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காக்க் கண்விழித்துக் காத்திருந்தது.

நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.
தொடரும்...

Monday, October 4, 2010

எம்.ஜி.ஆர் 10


அடையாறு சந்திப்பை அடைந்தபோதே அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை நின்ற மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, ‘இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன். வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர். அதற்குதப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள். கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள் விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.

எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?

எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.

‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மகள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.

அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.

தொடரும்...