Wednesday, April 20, 2011

எம்.ஜி.ஆர் 301977 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தமிழக சட்ட மன்றத்திற்குத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசியல் கட்சிகள் புதிய அணிகளை அமைத்தன.

ஜனதா கட்சி தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொண்டு தனியாகப்போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.கவை உதறிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டது.

அ.இ.தி.மு.க. கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டமன்றத்தில் அதிகமான இடங்களைத் தங்களுக்குக் கோரின. புரட்சித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால், இந்திரா காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தங்களுக்குள் தனிக் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டு போட்டியிட்டன.

அ.இ.தி.மு.க. சில சிறிய கட்சிகளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது.

தி.மு.க. இரண்டாவது முறையாகப் பிளவுப்பட்டுக் களத்தில் நின்றது.

இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அனுதாபம் இருப்பினும் அது ஆட்சியைப் பற்றும் என்னும் நம்பிக்கை அந்தக் கட்சிக்காரர்களுக்கே இல்லை. ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் போதுமான அளவில் செல்வாக்கும் இருக்கவில்லை. எனவே, எஞ்சியிருந்த புரட்சித் தலைவரின் அ.இ.தி.மு.க.வின் மீது தான் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தேர்தல்கள் நடந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போல, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி தான் பெரும் வெற்றியைப் பெற்றது. புரட்சித் தலைவரின் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 127 தொகுதிகள் கிட்டின. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 17 இடங்கள் கிட்டின.

தி.மு.க. 48 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது. இந்திரா காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், ஜனதாக்கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

புரட்சித் தலைவர் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளநர் பிரபுதாஸ் பட்வாரி புரட்சித் தலைவரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைத்தார்.

1977 – ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று தான் புரட்சித் தலைவர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது அரசியல் சட்ட ரீதியாகவும் சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு விழா!

ஆனால், அது முடிந்ததும் புரட்சித் தலைவர் அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார். அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.

பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும் 20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம்கூடி ஆர்ப்பரித்தது. அப்போது மந்தகாசப் புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார். அந்தச் சரித்திர நாயகன். அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் உரையாற்றினார்.

”அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.

இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும். உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.

மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.

இதனை எங்கள் மனத்தில் இருத்தி, இலஞ்சமற்ற, ஊழலற்ற நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.

இந்த உயர்ந்த இலட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுதேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று தலைவர் உறுதியிட்டுக் கூறினார் புரட்சித் தலைவர்.

அப்பொழுதும் அதற்குப்பபின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!

அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.

இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார். புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.தொடரும்...

Sunday, April 17, 2011

எம்.ஜி.ஆர் 29


தேர்தல் முடிவுப்படி வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் பெரும் தோல்விகண்டது. மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதாக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஆனால், தென் மாநிலங்களில் நான்கிலும் இந்திரா காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் புரட்சித் தலைவரின் செல்வாக்கும், அயராத உழைப்பும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 18, இந்திரா காங்கிரஸுக்கு 14 கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 என்னும் அளவில் மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தது. ஸ்தாபன காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் தி.மு.க. ஒரே ஒரு தொகுதியிலும் தாம் வெற்றிபெற்றன. பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியிலும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளரே வெற்றி பெற்றார் இது புரட்சித் தலைவரின் இன்னொரு மகத்தான சாதனையாகும். தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது, நியாயம் என்ற புரட்சித்தலைவரின் வாதத்தைதான் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்! தி.மு.க. ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தி.மு.க.வோடு கூட்டணி அமைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓர் இடங்கூட கிடைக்கவில்லை. தங்களோடு கூட்டணி அமைத்துக் கொண்ட ஜனதாக்கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதால், தங்கள் மீதான சர்க்காரியா விசாரணைக்கமிஷன் கலைக்கப்பட்டு விடும் என்று தி.மு.க. தலைமை நம்பியது. புதிய பிரதமர் மொரார்ஜிதேசாய்க்கு மத்திய அமைச்சர் பா. இராமச்சந்திரன் மூலம் வேண்டுகோளும் விடுத்தது. ஆனால், பிரதமர் மொரார்ஜி தேசாய் சர்க்காரியா கமிஷன் விசாரணையை கைவிடச் செய்ய சம்மதிக்கவில்லை! விசாரணை தொடரும் என்று அறிவித்து விட்டார்.


பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தி.மு.க.வின் முன்னிணித் தலைவர்கள் பலரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையோடு சிந்தித்தனர். அவர்களின் சார்பில் தி.மு.க. பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞெசெழியன் முதன் முதலில் போர்க்கொடியை உயர்த்தினார். 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய நாவலர். கருணாநிதியின் மேல் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையை விடுத்தார். அவரைத் தொடர்ந்து முன்னால் அமைச்சர்களான கே.ராஜாராம், எஸ். மாதவன், ஆதித்தனார், ப.உ.சண்முகம் ஆகியோரும் தி.மு.க.விலிருந்து விலகினர். இவர்களுள் சிலர் ஒன்று சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். புரட்சித் தலைவர் சொன்ன பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒட்டியே இவர்களது குற்றச்சாட்டுகளும் இருந்தன. என்றாலும், இந்தக் கட்சியினரைப் புரட்சித் தலைவர் சற்றும் பொருட்படுத்தவில்லை.


தொடரும்...