தேர்தல் முடிவுப்படி வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் பெரும் தோல்விகண்டது. மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதாக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஆனால், தென் மாநிலங்களில் நான்கிலும் இந்திரா காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் புரட்சித் தலைவரின் செல்வாக்கும், அயராத உழைப்பும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 18, இந்திரா காங்கிரஸுக்கு 14 கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 என்னும் அளவில் மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தது. ஸ்தாபன காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் தி.மு.க. ஒரே ஒரு தொகுதியிலும் தாம் வெற்றிபெற்றன. பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியிலும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளரே வெற்றி பெற்றார் இது புரட்சித் தலைவரின் இன்னொரு மகத்தான சாதனையாகும். தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது, நியாயம் என்ற புரட்சித்தலைவரின் வாதத்தைதான் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்! தி.மு.க. ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தி.மு.க.வோடு கூட்டணி அமைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓர் இடங்கூட கிடைக்கவில்லை. தங்களோடு கூட்டணி அமைத்துக் கொண்ட ஜனதாக்கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதால், தங்கள் மீதான சர்க்காரியா விசாரணைக்கமிஷன் கலைக்கப்பட்டு விடும் என்று தி.மு.க. தலைமை நம்பியது. புதிய பிரதமர் மொரார்ஜிதேசாய்க்கு மத்திய அமைச்சர் பா. இராமச்சந்திரன் மூலம் வேண்டுகோளும் விடுத்தது. ஆனால், பிரதமர் மொரார்ஜி தேசாய் சர்க்காரியா கமிஷன் விசாரணையை கைவிடச் செய்ய சம்மதிக்கவில்லை! விசாரணை தொடரும் என்று அறிவித்து விட்டார்.
பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தி.மு.க.வின் முன்னிணித் தலைவர்கள் பலரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையோடு சிந்தித்தனர். அவர்களின் சார்பில் தி.மு.க. பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞெசெழியன் முதன் முதலில் போர்க்கொடியை உயர்த்தினார். 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய நாவலர். கருணாநிதியின் மேல் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையை விடுத்தார். அவரைத் தொடர்ந்து முன்னால் அமைச்சர்களான கே.ராஜாராம், எஸ். மாதவன், ஆதித்தனார், ப.உ.சண்முகம் ஆகியோரும் தி.மு.க.விலிருந்து விலகினர். இவர்களுள் சிலர் ஒன்று சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். புரட்சித் தலைவர் சொன்ன பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒட்டியே இவர்களது குற்றச்சாட்டுகளும் இருந்தன. என்றாலும், இந்தக் கட்சியினரைப் புரட்சித் தலைவர் சற்றும் பொருட்படுத்தவில்லை.
தொடரும்...
No comments:
Post a Comment