Sunday, December 27, 2009

எவன் மனிதன்

வஞ்சனை, கபடம் என சமயத்திற்கேற்பப் பிழைப்பவன் - நரி

ஊக்கமின்றி ஏதேனும் ஒன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து இருப்பவன் - தேவாங்கு

மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் - பாம்பு

தர்மம், புகழ் போன்றவற்றைப் பற்றிக் கவலையின்றி அற்ப சுகங்களில் மூழிகிக் கிடப்பவன் - பன்றி

சொந்தமாகப் பிழைக்காமல், அந்த அக்கறையின்றி பிறருக்குக் பிரியமானவனாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுப்பதைக் கொண்டு வையிறு நிறைப்பவன் - நாய்

கண்ட கண்ட விஷயங்களுக்குக்கெல்லாம் கோபம் அடைபவன் - வேட்டை நாய்

அறிவின் துணை கொண்டு பெரும் பொருளைச் சேர்க்கும் வழியின்றி முன்னோரின் சாஸ்திரங்களை, பெருமைகளை மட்டுமே வாயினால் அடிக்கடி, திரும்பத் திரும்பக் கூறுபவன் - கிளிப்பிள்ளை

பிறர் நம்மை எவ்வளவு அவமதித்தாலும், அந்த அக்கிரமங்களைத் தடுக்க முயற்சி செய்யாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் - கழுதை

வீண் மினுக்கு மினுக்கி தம்பம் பாராட்டுகிறவன் - வான் கோழி

கல்வி அறிவற்றவன் - வெறும் தூண்

தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிடாமல் பிறரின் சொத்தை அபகரித்து உண்டு வயிறு வளர்ப்பவன் - கழுகு

ஒரு புதிய உண்மை வரும் பொழுது அதனை ஆவலோடு அங்கீகரித்து அறிந்து கொள்ளாமல், அதனைக் கண்டு வெறுப்படைபவன் - ஆந்தை

ஒவ்வொரு நிமிசமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, பரமார்த்தத்தை அறிய முயல்கிறவன் - மனிதன்

Sunday, December 13, 2009

காந்திஜியின் நகைச்சுவை

ஒலிபெருக்கிக்காரரின் குடை:
காந்தியடிகள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் நனைந்து கொண்டே காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் குடையை விரித்து காந்தியின் தலைக்கு மேலே பிடித்தார். இதைக் கண்ட காந்தி, "மக்கள் எல்லாம் நனையும் போது எனக்கு மட்டும் எதற்குக் குடை?" என்று கேட்டார்.
குடை பிடிப்பவரோ காந்தியின் சொல்லைக் கேட்கவில்லை. தொடர்ந்து குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார்.
உடனே காந்தி கூட்டத்தினரைப் பார்த்து சிரித்துக் கொண்டே , "இவர் குடை பிடிப்பதைப் பார்த்தால் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் ஒலிபெருக்கி நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்." என்றார்.
இதைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் பலமாகச் சிரித்தனர்.

எனக்குப் பயன்படக் கூடியது:
காந்திஜி லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஒருவரும் அதே கப்பலில் பயணம் செய்தார்.
பயணத்தின் போது காந்திஜியை அவர் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டு வந்தார் அவர். காந்தியடிகளோ இதைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. வெறுத்துப் போன ஆசாமி, காந்தியை நக்கலடித்து சில கவிதைகளை எழுதினார். அதை காந்தியிடம் கொடுத்து,"படித்துப் பாருங்கள்" என்றார்.
கவிதைகளைப் படித்து ஆசாமியின் நக்கலைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அது குறித்து கவலைப்படவில்லை.
மறுநாள் காலை அந்த ஆசாமி காந்தியடிகளைப் பார்க்க வந்தார். காந்திஜியிடம் ,"என் கவிதைகள் எப்படி? பயனுள்ளதாக இருந்திருக்குமே?" என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார்.
காந்தியடிகள் சிரித்துக் கொண்டே "ஓ..! தாங்கள் கொடுத்த கவிதைகளை ஒன்று விடாமல் படித்தேன். அதில் எஅன்க்குப் பயன்படக்கூடிய அம்சத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்." என்று கூறி அந்தக் காகிதத்தில் குத்தியிருந்த குண்டூசியை எடுத்துக் காட்டினார். நீங்கள் கொடுத்ததில் இதுதான் எனக்குப் பயன்படக் கூடியது."என்றார்.
அந்த ஆங்கிலேயரின் முகத்தில் ஈயாடவில்லை.

நீர்வீழ்ச்சியை விட பெரியது:
காந்தியடிகள் ஒருமுறை கர்நாடக மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் காந்திஜியிடம், "ஜோக் நீர் வீழ்ச்சியைப் பார்க்க வருகிறீர்களா?" என்று கேட்டனர்.
அந்த அன்பர்களிம் அழைப்பைத் தட்டிக் கழிக்க விரும்பாத காந்தியடிகள்,"நீங்கள் மழையைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? நன்கு கவனித்திருக்கிறீர்களா? வானத்திலிருந்து வருகிறது. வானிலுள்ள கருமேகங்களிலிருந்து வருகிறது. நீர்வீழ்ச்சி மலையிலிருந்து அல்லவா விழுகிறது. மலையை விட உயர்ந்த இடத்திலிருந்து வருகிறது மழை. அதற்கு இணை அதுவேதான். அதற்கு அடுத்தல்லவா நீர் வீழ்ச்சி எல்லாம்..."என்று அவர்களைச் சிரிக்க வைத்தார். சிந்திக்கவும் வைத்தார்.

கடவுளைத் தேடி

ஒரு ஊரில் சிலர் கடவுளைத் தேடிப் புறப்பட்டார்கள். அந்த ஊர் மக்களும் அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.வெளியூர் சென்றிருந்த அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர், ஊர் திரும்பினார். சிலர் கடவுளைத் தேடிச் சென்றிருப்பதை அறிந்தார்.கழுதையில் அமர்ந்த அவர் அவர்கள் சென்ற திசையை நோக்கி வேகமாகச் சென்றார்.சில மணி நேரத்தில் அவர்களைப் பிடித்தார்.கழுதையிலிருந்து இறங்கிய அவர், "கடவுளைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்" என்று வாழ்த்தினார்.மீண்டும் கழுதையில் ஏறி அமர்ந்தார். அவர்கள் செல்லும் வழியிலேயே கழுதையை ஓட்டத் துவங்கினார்.அவர் ஊர் திரும்பாமல் தங்களுக்கு முன்னால் செல்வதைக் கண்ட அவர்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.அவர்களில் ஒருவர், "பெரரியவரே! ஊர் திரும்பாமல் எங்களுக்கு முன்னால் செல்கிறீரே?" என்று கேட்டார்."என் கழுதையைத் தேடி வந்தேன். வழியில் உங்களைப் பார்த்து வாழ்த்தினேன். மீண்டும் கழுதையைத் தேடிப் புறப்பட்டு விட்டேன். கழுதையைக் கண்டுபிடித்த பின்பே ஊர் திரும்புவேன். கழுதை கிடைக்காமல் ஊர் திரும்ப மாட்டேன்" என்றார்.இதைக் கேட்ட அவர்கள் "கழுதை மீது அமர்ந்தபடியே கழுதையைத் தேடுகிறாரே. இவரைப் போல் முட்டாள் யார் இருக்க முடியும்." என்று எண்ணிச் சிரித்தார்கள்."ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அவர்."கழுதையின் மீது அமர்ந்து இருக்கிறீர்கள். உம் கண் அருகிலேயே கழுதை இருக்கிறது. கழுதையைத் தேடிப் போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது"" என்றான் அவர்களில் ஒருவன்."நீங்கள் கடவுளத் தேடிச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் கடவுளைத் தேடி அலைகிறீர்கள். நான் உங்களைப் பார்த்துச் சிரித்தேனா" என்று பதில் கேள்வி கேட்டார்.அவர்களுக்கு உண்மை புரிந்தது. அவருடன் சேர்ந்து ஊர் திரும்பினார்கள்.

Sunday, December 6, 2009

விவேகானந்தரின் விவேக மொழிகள்

மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.
மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும்.
யார் ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது.
ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.
அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.
எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.
மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.
எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் போக்குவதற்கான பேராற்றல்! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக நம்புங்கள்.
மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.
பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.
துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.
கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.

Thursday, December 3, 2009

எங்கள் மதமே உயர்ந்தது...!

தங்கள் நிலத்தில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக அருகிலுள்ள ஊர்ச் சந்தைக்கு தங்களது வண்டிகளில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே இருந்த ஒரு ஆலமரத்தினடியில் இளைப்பாறிச் செல்லலாமென்று அந்தப்பக்கம் வந்த விவசாயிகள் பலரும் அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த கூட்டத்தில் சைவம், வைணவம், புத்தம் என்று மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் பேச்சுகளுக்கிடையே அவர்களுக்குள் அவரவர் மதமே உயர்ந்தது என்று விவாதம் வந்தது.சைவ மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் "சிவபெருமான்தான் அனைத்துக்கும் மேலானவர். சைவ மதம்தான் உலகில் உண்மையான சமயம்" என்றார்.வைணவ மதத்தைச் சேர்ந்த இன்னொருவர் "இல்லையில்லை திருமால்தான் பெரியவர். வைணவமே உண்மையான சமயம்" என்றார்."புத்தரை மறந்து விட்டு நீங்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. புத்த மதம்தான் அனைத்திலும் சிறந்தது" என்றார் புத்த மதத்தைச் சேர்ந்த மற்றொருவர்.அவ்வளவுதான் அங்கு கூடியிருந்த மூன்று மதத்தினரும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து தங்கள் மதத்தின் பலத்தைக் காட்டும் வேகத்தில் பேசி, கடைசியில் அடித்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர், "ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள். எது உண்மையான சமயம் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதானே?" என்றார்."ஆமாம்" என்றார்கள் அனைவரும்."நீங்கள் கொண்டு வந்திருக்கும் பருத்தியை விற்பதற்காகத்தானே சந்தைக்குச் செல்கிறீர்கள். அங்கு யாருடைய பருத்தி அதிக விலைக்குப் போகும்? சைவருடையதா? வைணவருடையதா? புத்த சமயத்தவருடையதா? உங்களில் யாராவது சொல்லுங்கள் என்று கேட்டார் பெரியவர்."சந்தையில் யாருடைய பருத்தி தரமுடையதாக இருக்கிறதோ அதுதான் அதிக விலைக்குப் போகும். சந்தையில் யாருடைய நிலத்தில் விளைந்தது என்று பார்த்து யாரும் வாங்குவதில்லை" என்று பதிலளித்தார் ஒருவர்."நல்லது" என்ற பெரியவர், "அதே போலத்தான் கடவுளும். நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.எப்படிப் பருத்தி வாங்குபவன் எந்த நிலத்தில் விளைந்தது என்று பார்ப்பதில்லையோ அது போல கடவுளும் சமயம் பார்ப்பதில்லை. யார் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனரோ அவரே கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர். அவரைப் பொறுத்தவரை எல்லா சமயமும் ஒன்றுதான். இனி மேலாவது மதத்தின் பெயரால் சண்டை போடாதீர்கள்." என்றார்.இதைக் கேட்ட மும்மதத்தினரும் அமைதியடைந்து அந்தப் பெரியவரை வணங்கி விட்டு ஒற்றுமையாகச் சந்தைக்குக் கிளம்பினர்.