ஒலிபெருக்கிக்காரரின் குடை:
காந்தியடிகள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் நனைந்து கொண்டே காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் குடையை விரித்து காந்தியின் தலைக்கு மேலே பிடித்தார். இதைக் கண்ட காந்தி, "மக்கள் எல்லாம் நனையும் போது எனக்கு மட்டும் எதற்குக் குடை?" என்று கேட்டார்.
குடை பிடிப்பவரோ காந்தியின் சொல்லைக் கேட்கவில்லை. தொடர்ந்து குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார்.
உடனே காந்தி கூட்டத்தினரைப் பார்த்து சிரித்துக் கொண்டே , "இவர் குடை பிடிப்பதைப் பார்த்தால் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் ஒலிபெருக்கி நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்." என்றார்.
இதைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் பலமாகச் சிரித்தனர்.
எனக்குப் பயன்படக் கூடியது:
காந்திஜி லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஒருவரும் அதே கப்பலில் பயணம் செய்தார்.
பயணத்தின் போது காந்திஜியை அவர் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டு வந்தார் அவர். காந்தியடிகளோ இதைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. வெறுத்துப் போன ஆசாமி, காந்தியை நக்கலடித்து சில கவிதைகளை எழுதினார். அதை காந்தியிடம் கொடுத்து,"படித்துப் பாருங்கள்" என்றார்.
கவிதைகளைப் படித்து ஆசாமியின் நக்கலைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அது குறித்து கவலைப்படவில்லை.
மறுநாள் காலை அந்த ஆசாமி காந்தியடிகளைப் பார்க்க வந்தார். காந்திஜியிடம் ,"என் கவிதைகள் எப்படி? பயனுள்ளதாக இருந்திருக்குமே?" என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார்.
காந்தியடிகள் சிரித்துக் கொண்டே "ஓ..! தாங்கள் கொடுத்த கவிதைகளை ஒன்று விடாமல் படித்தேன். அதில் எஅன்க்குப் பயன்படக்கூடிய அம்சத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்." என்று கூறி அந்தக் காகிதத்தில் குத்தியிருந்த குண்டூசியை எடுத்துக் காட்டினார். நீங்கள் கொடுத்ததில் இதுதான் எனக்குப் பயன்படக் கூடியது."என்றார்.
அந்த ஆங்கிலேயரின் முகத்தில் ஈயாடவில்லை.
நீர்வீழ்ச்சியை விட பெரியது:
காந்தியடிகள் ஒருமுறை கர்நாடக மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் காந்திஜியிடம், "ஜோக் நீர் வீழ்ச்சியைப் பார்க்க வருகிறீர்களா?" என்று கேட்டனர்.
அந்த அன்பர்களிம் அழைப்பைத் தட்டிக் கழிக்க விரும்பாத காந்தியடிகள்,"நீங்கள் மழையைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? நன்கு கவனித்திருக்கிறீர்களா? வானத்திலிருந்து வருகிறது. வானிலுள்ள கருமேகங்களிலிருந்து வருகிறது. நீர்வீழ்ச்சி மலையிலிருந்து அல்லவா விழுகிறது. மலையை விட உயர்ந்த இடத்திலிருந்து வருகிறது மழை. அதற்கு இணை அதுவேதான். அதற்கு அடுத்தல்லவா நீர் வீழ்ச்சி எல்லாம்..."என்று அவர்களைச் சிரிக்க வைத்தார். சிந்திக்கவும் வைத்தார்.
No comments:
Post a Comment