Wednesday, July 29, 2009

சைக்கிள்

எனக்கு மிகவும் ஆச்சர்யம் நான் பார்த்த வலைப்பதிவுகளில் யாருமே சைக்கிள் பயணத்தையோ அல்லது சைக்கிளில் இருக்கும் டைனமோ பற்றியோ பதிவு செய்யாதது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. இருந்தாலும் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு. கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது அந்த தருணம். சிறு வயது முதலே சைக்கிள் என்றால் எனக்கு அலாதி பிரியம். சைக்கிளில் வந்து என் உறவினர்கள் யார் வந்து கூப்பிட்டாலும் நான் பயணத்திற்கு தயாரான காலம் அது. சைக்கிளில் உள்ள மணியின் ஓசைக்கு பைப் ஹோர்ன் கூட இணைஇல்லை என்றே நான் நினைக்கிறேன்.அப்பொழுது எல்லாம் சைக்கிளின் குறுக்கு கம்பிக்கு நடுவே ஒரு சின்ன இருக்கை ஒன்று இருக்கும் அது சிறு வயது குழந்தைகளுக்காக.உட்கார பழகிஇருக்கும் குழந்தைகளுக்காக கூடையினால் செய்யப்பட்ட சீட்டை சைக்கிளின் முன் பகுதியில் மாட்டிவைப்பர்கள் அந்த குழந்தைகளும் எந்த பயமும் இன்றி உட்கார்ந்துகொள்ளும். அந்த காலங்களில் சைக்கிள்களுக்கு லைசென்ஸ் உண்டு. அந்த லைசென்ஸ் ஒரு மெல்லிய தகடினால் செய்யப்பட்டு அதில் வருடம் பொறிக்கப்பட்டிருக்கும். அப்பொழுதெல்லாம் வசதியின்மை காரணமாக வாடகைக்கு சைக்கிள் எடுத்துதான் பழக வேண்டும். அதுவும் காத்திருந்து... அவரவர் உயரத்திற்கு தகுந்தபடி சைக்கிள் அளவும் இருக்கும். கால் வண்டி,அரை வண்டி, முக்கால் வண்டி மற்றும் முழு வண்டி என்றெல்லாம் வாடகை சைக்கிள் கடையில் அன்று. அரை மணி நேரத்திற்கு ஐம்பது பைசா ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் என்று கணக்கு வேற. ஒரு ஐந்து நிமிடம் அதிகமானால் கூட கடைக்காரன் திட்டி விடுவான். பழகும் போது பஞ்சர் ஆகிவிட்டால் பஞ்சருக்கும் சேர்த்து காசு வாங்கிவிடுவான். சைக்கிள் ஓட்ட தெரியாத சிறு வயதில் டைனமோ வைத்த சைக்கிள் என்றால் அவ்வளவுதான். அன்று முழுவதும் சைக்கிளின் பெடலை கையால் சுற்றிக் கொண்டே இருப்பேன்.சைக்கிள் பூட்டு பக்கத்தில் ஒரு டைனமோ பொருத்தப்பட்டிருக்கும் அதன் மேல் பகுதியில் ஒரு சக்கரம் இருக்கும் அந்த சக்கரம் சைக்கிளின் டயரோடு உரசுவதால் டைனமோவில் இருக்கும் சக்கரமும் சேர்ந்து சுழல அதில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சைக்கிளின் முன் பகுதியில் உள்ள விளக்கு எரியும்.எவ்வளவு வேகமாக பெடலை சுற்றுகிறோமோ அவ்வளவு பிரகாசமாக விளக்கு எரியும். இவ்வாறு செய்ததால் பலமுறை என் அப்பாவிடம் நான் திட்டு வாங்கியிருக்கிறேன். பாவம் அவர் கஷ்டம் அவருக்கு. ஏனென்றால் டைனமோவை அதிக முறை உபயோகித்தால் டயர் சீக்கிரமே தேய்ந்து விடும். இதற்காக ஒவ்வொரு முறையும் டயர் மாற்றும் போது ரிக்க்ஷா டயர் போடுப்பா என்று என் அப்பா கடைக்காரனிடம் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. டைனமோவிலிருந்து தான் மின்சாரம் உற்பத்தியாகும் என்று நான் சற்று பெரியவனான பிறகு தான் உணர்ந்தேன்.நான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது என் அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தார்.அப்பொழுது எனக்கு கார் வாங்கிகொடுத்தது போல் ஒரு சந்தோஷம். அன்று இரவு என் நண்பர்கள் அனைவரிடமும் சென்று என் சைக்கிளை காண்பித்து விட்டு வந்தேன். அதில் தான் எத்தனை ஆனந்தம்.அப்பொழுது என் நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே சைக்கிள் வைத்திருந்தனர்.பள்ளிக்குச் செல்லும் போது ஒவ்வொரு சைக்கிளில் இரண்டு பேர் செல்வோம். சில சமயம் மூன்று பேர் செல்லும் பழக்கமும் உண்டு. விடுமுறை நாட்கள் என்றால் நண்பர்கள் அனைவரும் தத்தமது சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுவோம். வீட்டை விட்டு நெடுந்தூர பயணம் என்றெல்லாம் அனுபவம் உண்டு எனக்கு. போகும் வழியில் சாலையின் இரு புறமும் இருக்கும் புளிய மரத்தின் நிழலில் இளைப்பாறி புளியங்காயை ருசி பார்த்த நாட்கள் ஏராளம்.கோடையில் வீட்டிற்க்கு தண்ணிர் எடுத்து வருவது என்பது சாதாரண காரியம் கிடையாது. இரு ரப்பர் குடங்களை அதன் வாய் பகுதியில் நல்ல நைலான் கயிற்றினால் கட்டி சைக்கிளின் பின் பகுதியில் இருக்கும் கேரியரில் தொங்க வைத்து விடுவார்கள். என்னோடு மூத்த வயதுக்காரர்கள் எல்லாம் மூன்று குடங்களை கேரியரில் வைத்து தண்ணீர் எடுப்பார்கள். மூன்றாவது குடம் என்பது ஆச்சர்யமான விஷயம் தான். ஏனென்றால் அந்த மூன்றாவது குடத்தை கேரியரின் நடுவில் வைத்து சைக்கிள் டியூப்பினால் கட்டி சைக்கிளின் இருக்கையோடு மாட்டிவிடுவார்கள். பல சமயம் நான் தண்ணீர் எடுத்து வரும் பொழுது குடத்தோடு கீழே விழுந்தது உண்டு. சில சமயம் குடமும் உடைந்தது உண்டு. அன்று முழுவதும் திட்டுகளும், பாசங்களும் மாறி மாறி கிடைத்திருக்கிறது. திட்டுகள் குடம் உடைந்ததற்க்காக.... பாசங்கள் நான் கீழே விழுந்ததற்க்காக.....
என் நண்பன் ஒருவன் சைக்கிளில் செல்லும் பொழுதே தன்னுடைய இரண்டு கைகளையும் விட்டு பயணம் செல்லுவான். அவனிடம் நான் எப்படியடா இப்படி இரண்டு கைகளையும் விட்டு செல்கிறாய் என்றால் அதை சொல்லித்தர அவன் பண்ணிய பந்தாவுக்கு அளவே கிடையாது. பிற்பாடு நானே கற்றுக் கொண்டு ஒரு நாள் சாலையில் இரண்டு கைகளையும் விட்டு பயணம் செய்யும் பொழுது என் அப்பாவின் நண்பர் ஒருவர் அந்தக் காட்சியை காண அன்று எனக்கு என் அப்பாவிடம் நல்ல அடி கிடைத்தது. இப்பொழுது சாலையில் நான் பார்க்கும் சிறார்கள் சுலபமாக இவ்வாறு ஓட்டிச் செல்கின்றனர்.(பெண் சிறார்கள் கூட) இப்பொழுது சைக்கிள் ஓட்டுவது என்பதே எனக்கு அபூர்வமாகிவிட்டது.நான் என் ஊருக்குச் சென்றால் தருணம் வாய்க்கும் பொழுது எல்லாம் சைக்கிள் ஓட்டி விடுவேன். இப்பொழுது வரும் சைக்கிள்கள் எல்லாம் நவீனமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சில சமயம் நாமும் இப்பொழுதே பிறந்திருக்கலாமே என்று தோன்றியது உண்டு.ஆனால் நான் பெற்ற இன்பம் இன்றைய தலைமுறையினர்க்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று மட்டும் ஆணித்தனமாக என்னால் சொல்ல முடியும்.

Wednesday, July 22, 2009

பிளவர் மில்

உங்களில் பெரும்பாலோனோருக்கு பிளவர் மில் மற்றும் ரைஸ்மில்லை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. என் நண்பரோடு சேர்ந்து பால்ய நினைவுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது தோன்றியது இந்த பிளவர் மில். இப்பொழுது இருக்கும் தூரிதஉணவு கலாச்சாரத்தில் இந்த பிலௌர் மில் எல்லாம் மறக்கடிக்கப் பட்டுவிட்டது. இந்த பிலௌர் மில் 1975 தொடங்கி ௨000 வரை பிரசித்தம். மிளகாய், மல்லி,கோதுமை, சீயக்காய் இவை எல்லாம் இந்த பிலௌர் மில்லில் தான் மக்கள் அரைக்க வருவார்கள். என் பள்ளி நாட்களில் எனக்கும் அந்த அனுபவம் மிகவும் உண்டு . பிலௌர் மில் போவது என்பது அலாதியான இன்பம் தான் அப்பொழுது. ஏனென்றால் நண்பர்கள் சூழ மிளகாய்,மல்லி, கோதுமைகளை வாளியில் போட்டுக் கொண்டு ஜாலி யாக போய் வருவோம். அதுவும் நான் இருந்தது காலணி வீடு. என் வயது சிறார்கள் அதிகம் அப்பொழுது. ஒருவன் பிளவர் மில் போனால் அனைவரது வீட்டிலும் அன்று மாவு அரைக்க சென்று விடுவோம் வீட்டில் சண்டை போட்டாவது.... மிளகாய் அரைக்க போகும் போது அது நன்றாக காய்ந்திருக்க வேண்டும் இல்லையென்றால் கடைக்காரன் திருப்பி அனுப்பிவிடுவான்.மிளகாய் அறைக்கபோகும் போது மட்டும் பயந்து கொண்டே செல்வோம். மல்லி அறைக்கபோகும் போது மட்டும் அம்மா ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லி அனுப்புவாள் மல்லியை அரைத்த பிறகு நன்றாக சூடு தணித்துவிட்டு வா என்று.... அதற்காக பிலௌர்மில்லில் இரும்பினால் செய்யப்பட்ட தட்டில் அந்த பொடியை காயபோட்டு விடுவேன். அதுவும் மிளகாய் பொடி காயப்போட்டதில் மல்லிபொடியை காயவைக்க கூடாது.பொடியை காய வைக்காமல் போனால் கருத்துவிடும் அதனால் கொழம்பும் கருப்பாக போய் விடும் என்று பயம்புருத்திய நாட்கள். எத்தனை உண்மை இதெல்லாம்!!!! அரைக்கும் ஊழியனிடம் சண்டையிடுவேன் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறையாவது அரை என்று. இவை எல்லாம் அம்மா எனக்கு இட்ட கட்டளைகளின் பேரில். அதுவும் அவன் சலிப்பிற்க்கு அளவே கிடையாது. அந்த காலத்தில் பொடி அரைப்பதற்கு அவ்வளவு மெனக்கெட வேண்டும். அரைத்துக் கொண்டிருக்கும்போதே கரண்ட் போய் விட்டால் அவ்வளோதான் பொடி அனைத்தும் கருப்பாகி விடும். அதனால் ஆண்டவனை வேண்டிக் கொண்ட நேரம் அது. பிலௌர் மில் பக்கம் போனாலே அந்த பொடிகளின் நெடி மூக்கை தொலைக்கும். தீபாவளி சமயம் என்றால் பிலௌர் மில் பக்கம் போகவே முடியாத நிலை... முறுக்கு மாவு, அதிரச மாவு அரைக்க என்று மக்கள் கூட்டம் அலை மோதும். காலை நேரத்தில் சென்றால் வீடு திரும்ப மதியம் ஆகி விடும் சூழ்நிலைக்கும் நான் தள்ளப் பட்ட காலம் அது. இப்பொழுது நாகரிகத்தின் மாற்றத்தால் அடைக்கப்பட்ட மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள் இன்னும் சில... இன்னும் என் அம்மா பிலௌர் மில்லில் அரைக்கப்பட்ட மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்களை உபயோகிக்றாள். அதனால் தான் என்னவோ அவளின் பாசத்தைப் போல் அவளுடைய சமையலும் மாறாமல் இருக்கிறது. இன்னும் அவள் ஒரு படி மேல போய் அமெரிக்காவில் இருக்கும் என் சகோதரிக்கும் அதை பொட்டலம் கட்டி அனுப்பி வைக்கிறாள். இன்றைய தலைமுறையினர்க்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கட்டுரை எழுதுவதற்கு காரணமாக இருந்த என் நண்பர் மனோஜிற்குத் தான் நான் முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.......

Tuesday, July 21, 2009

விவசாயம்

எத்தனையோ கோடி மென் பொறியாளர்களில் நானும் ஒருவன். இந்த ஆண்டு மென்பொருள் ஏற்றுமதியில் சிறு சரிவு ஏற்ப்பட்ட காரணத்தினால் சக ஊழியர்கள் அனைவரும் தத்தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலனோர் மீண்டும் விவசாயத்திற்கே சென்று விடலாம் என்று எள்ளி நகையாடினார்கள். விவசாயம் என்பது யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள அது ஒன்றும் மென்பொருள் கிடையாது என்று அப்பொழுதுதான்நான்நினைத்துப்பார்த்தேன்.... என் சிறு வயது அனுபவமே அதற்குச் சான்று . நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. என் பெற்றோர்களும் விவசாயத்தைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை அவர்களும் அரசு ஊழியர்கள் என்ற காரணத்தினால். என் தாத்தா பாட்டி இறந்த அடுத்த வருடம் நாமும் விவசாயம் பண்ணலாமே என்று என் தந்தை முடிவெடுத்திருந்தார்.உழுது விதைத்தும் முடித்திருந்தார்கள். அப்பொழுது உரம் இட வேண்டிய நேரம் நானும் எனது பெற்றோர்களும் உர மூடையை சுமந்து கொண்டு வயலுக்குச் சென்றோம். வரப்பில் நடக்கும் சுகமே அலாதியானது.அதன் மேடு பள்ளங்கள் தானாகவே உருவானவை அல்ல. உலக வரைபடம் வரையறுக்கும் முன்பே தன்னுடைய நிலத்திற்கு எல்லை போடப்பட்டவை தான் இந்த வரப்புகள். இரு வரப்புகளுக்கிடையே தண்ணிர் பாய்ந்து செல்லும் அழகே அழகு. எத்தனை கோடி கொட்டிக் கிடைத்தாலும் காண கிடைக்காத அற்புதம் அது. சினிமாவில் மட்டுமே கண்டு களித்திர்பார்கள் நகரவாசிகள். உரங்களைப் பிரித்து அவரவர்களுக்கு கொடுத்த பகுதிகளுக்குச் சென்றோம். வயல் முழுவதும் தண்ணிர் சூழ்ந்திருந்த நேரம் எனது கால் சட்டையை மடித்து விட்டு வயலுக்குள் இறங்க ஆயத்தமானேன். எனது கையில் உள்ள சட்டி முழுவதும் உரம்.வயலுக்குள் இறங்கியதும் ஒரு சறுக்கு!!! என்னை நிதானப்படுத்திக் கொண்டு உரத்தை தூவ ஆரம்பித்தேன்.சட்டியில் உள்ள உரம் முழுவதும் காலியாகி இருந்தது. வயலுக்குள் இருந்து வரப்பில் கால் வைத்த போது தான் தெரிந்தது என் கால்கள் முழுவதும் ரத்தம். வயலில் பயிர்களுக்குத்தான் எத்தனை கோபம்....வேலை தெரியாமல் என்னை மிதிக்கிறான் என்று ... கூட்டுமுயற்சியின்(டீம் வொர்க்)ஆரம்பமே விவசாயம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அப்பொழுது தான் கற்றுக்கொண்டேன் விவசாயம் எவ்வளவு கடினம் என்று அசை போட்டுக் கொண்டே பணிக்குத் தயாரானேன்.....
மழைக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமையை கண்டறிய முற்ப்பட்டபோது விளைந்தது:
மழை நீர் எந்த மண்ணில் விழுகிறதோ அதே நிறமாக மாறுகிறது அதே போல் மனிதனும் எந்த மனிதனோடு நட்பு கொள்கிறானோ அதே போல் மாறிவிடுகிறான்.

Wednesday, July 15, 2009

தகவல் பெட்டி

சிங்கப்பூரின் பழைய பெயர் 'தெமாசெக்' இங்கு வந்த ஒரு இந்திய இளவரசன் ஒரு வினோத விலங்கை கண்டான். அதன் பெயர் சிங்கம் என்றறிந்து அவ்வோருக்கு சிங்கங்களின் நகரம் என பொருள் படும் வகையில் சிங்கபுரம் என பெயர் வைத்தான். அதுவே நாளடைவில் சிங்கப்பூர் ஆனது.

ரஷ்ய தலைவர் ஸ்டாலினின் இயற்பெயர் ஜொஸெப் பெசரிஒநிஸ் சுக்தஷ்விலி. சுக்தஷ்விலி என்பதற்கு பயனற்றது என்று பெயர்.

௧௯௬௨ ஆம் ஆண்டு அக்டோபர் ௮ம் தேதி வடகொரியாவில் நடைபெற்ற தேர்தலில் ௧00% வாகளர்களும் வாக்களித்தனர். அதுமட்டுமின்றி அனைவருமே வாகளித்து கொரியா தொழிலாளர் கட்சிக்கே.