Wednesday, May 17, 2017

வாக்காளனின் ஏக்கம்

தேர்தல் நெருங்கும் வேளையில் 👀 😉😉😉 என் மனதில் புதைந்துள்ள சில கருத்துக்களை என் மனதில் மட்டும் இல்லை தமிழனாய் பிறந்த எல்லோர் மனதிலும் உள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு....

தேர்தல் என்றாலே அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் மனு தாக்கலில் ஈடுபடுவர். அவர்களில் பலபேர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். அவர்களில் எத்தனைப் பேர் கடந்த முறை மக்களுக்காக உண்மையாக பாடுபட்டிருப்பார்கள்???? கூட்டணி கட்சியில் இருக்கும் பெரும்பாலான வேட்பாளர்களுக்கும் இந்த தேர்தல் இரண்டாவதோ அல்லது மூன்றாவதாக இருக்க வாய்ப்புள்ளது. கடந்த முறை அவர்கள் எல்லோரும் தனது தொகுதிகளுக்காக எத்தனை முறை சட்ட மன்றத்திலே வாயை திறந்திருப்பார்கள்!!!!! நாடாளுமன்றத்தைப் போல பேசாத உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட்டால் நாறிப்போயிருக்கும் அவர்களின் நிலைமை.

நமது வாக்காளர்கள் அதையும் செய்திதாளில் படித்து விட்டு வரும் தேர்தலில் அவருக்கே தனது ஓட்டை பதிவு செய்து விடுவர். எனக்கு நீண்ட நாள் ஒரு சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது மனுதாக்கல் செய்த அல்லது செய்யப்போகிற எத்தனை வேட்பாளர்களுக்கு தனது கட்சியின் முழு வரலாறு தெரியும்??? நான் சாலையில் கடந்து செல்லும்பொழுது பல ஊர்வலங்களில், ஆர்ப்பாட்டங்களில் வாக்களிக்கக் கூட உரிமை இல்லாத பல இளைன்கர்கள் மற்றும் மாணவர்களை கண்டிருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் தெரியுமோ தெரியாதோ ஏன் இந்த ஆர்ப்பாட்டமும்,ஊர்வலமும் என்று... ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது அரசியல் என்பது ஒரு முதல் போடாத தொழில் என்று.

ஆனால் அதுவும் இப்பொழுது பொய்த்துப் போனது. அதற்கு உதாரணம் நேர்காணலுக்கு வந்த உடன்பிறப்பு ஒருவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார் கருணாநிதி. தென் மாவட்டங்களின் வேட்பாளர் நேர்காணலின்போது, கழுத்திலும் கையிலும் கிலோக்கணக்கில் தங்க நகைகளை அணிந்து வந்தாராம் உடன்பிறப்பு. 'எவ்வளவுய்யா செலவு செய்வே...’ என்று அவரிடம் கேட்கப்பட, 'அய்யா, அஞ்சு கோடி செலவு செய்வேன்யா’ என்றார் அவர். உடனே கருணாநிதி, 'அஞ்சு கோடிக்கு எத்தனை சைபர் தெரியுமா?’ என்று கேட்க, உடன்பிறப்போ திருதிருவென விழித்தார். 'அஞ்சு கோடிக்கு எத்தனை சைபர்னு தெரியலை... நீ எம்.எல்.ஏ-வாகி என்ன செய்யப்போற? போயிட்டு வா.’ என்று அனுப்பிவிட்டாராம்!

இலவசம் இலவசம் என்று சொல்லி மக்களின் சுயமரியாதையை இழக்க செய்து விட்டது சுயமரியாதை இயக்கம். மக்களை சிந்திக்க விடாமல் இலவசங்களை கொடுத்து முட்டாள்களாக்கி வைத்து விட்டனர். கிரைண்டர் வேண்டாம் என்றால் மிக்ஸ்சீயாம். அதை உபயோகப்படுத்துவதற்கு மின்சாரம் எங்கே தமிழ்நாட்டில். அரசு அறிவிப்போடு இரண்டு மணிநேரம் அறிவிப்பின்றி ஐந்து முதல் எட்டு மணிநேரம் மின்சாரம் துண்டிப்பு. நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு எல்லாம் இது ஒரு செய்தியாகத் தான் தெரியும். ஆனால் கிராமங்களில் வாழும் மக்களுக்கு இதனால் எவ்வளவு இன்னல்கள்.

அனைத்து கட்சிக்கூட்டங்களிலும் இளைன்கர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிறார்கள் ஆனால் என்னைப் பொறுத்தவரை இளைஞகர்கள்  யாரும் அரசியலில் ஈடுபட வேண்டாம். சிரமம்  பார்க்காமல் தேர்தல் அன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாலே போதுமானது. வாக்கு பதிவு சதவிகிதத்தை உயர்த்திக்காட்டினால் தான் கள்ள ஓட்டை ஓரளவாது குறைக்க முடியும். ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் நாட்டை காப்போம். 

Tuesday, April 12, 2016

திருந்துமா இனி கட்சிகள்

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்னுடைய வலைபதிவில் பதிவேற்றம் இட்டு. தேர்தல் நெருங்கும் வேளையிலாவது பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கனவு இப்பொழுது நினைவாகிவிட்டது. எதைப் பற்றி எழுதலாம் என்ற சிந்தனையில் இருந்த பொழுது நேற்று தேர்தல் பரப்புரையில் நடந்த இரண்டு மரணத்தை பற்றி எழுதவே என் மனம் விரும்பியது.

கடந்து வந்த தேர்தல்களில் எல்லாம் தேர்தல் நடக்கும் பொழுதோ அல்லது வாக்குப் பெட்டியை கைப்பற்றும் பொழுதோ மரணம் ஏற்பட வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இந்த முறை தேர்தல் பரப்புரையின் போதே அந்த சம்பவம் நிறைவேறிவிட்டது. ஆனால் இந்த முறை வெயிலின் கொடுமையினால். இப்பொழுது இருக்கும் நவீன உலகத்தில் வெயிலின் தாக்கத்தையோ அல்லது மழையின் அறிகுறியவோ எளிதாக நம்மால் தெரிந்து விட முடியும். அப்படி இருக்கின்ற சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் நண்பகளிலா அவர்களுடைய பரப்புரையை மேற்கொள்வது? அதனால் வந்த விளைவே இந்த 2 மரணம்.

முதல்வர் ஜெயலலிதா பேசத் துவங்கிய சற்று நேரத்தில், வெயில் கொடுமை காரணமாக சிலர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, கூட்டத்திலிருந்து மக்கள் வெளியேற முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது என்று தெரிகிறது. மேலும் அதில் 15க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து காயமடைந்தனர். இந்த சம்பவத்தினால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்ததால் மயக்கம் அடைந்தவர்களை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பின் ஒரு வழியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இருவரும் இறந்தனர்.

இந்த இரண்டு கழகங்களுக்கும் பேருந்து எரிப்போ அல்லது பத்திரிக்கை அலுவலக எரிப்போ ஒன்றும் புதிதல்ல. மாறாக இயற்கையின் எரிப்பை இந்த பாழாய் போன என் சாமானிய வாக்காளன் உணராதது தான் நிசப்தம். அவனை இயற்கையும் வஞ்சிக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்.

இனிமேலாவது ஆட்சியாளர்களோ அல்லது ஆட்சிக்கு வரத்துடிப்பவர்களோ இதை உணர்ந்து தத்தமது பரப்புரைகளை மாலை நேரத்தில் வைப்பர்களேயானால் இது போன்ற துர்மரணங்கள் நிகழாமல் செய்யலாம். என்ன செய்வது நம் நாட்டில் ஒரு முன்னேர்ப்பாடோ அல்லது சட்டமோ இயற்ற வேண்டுமானால் குறைந்தது இரு உயிர்களாவது இழக்க வேண்டும் என்பது சாபக்கேடு போலும்... இதில் நிவாரண இழப்பிடு உடனே வழங்க முடியாது என்பது கொடுமையிலும் கொடுமை ஏனென்றால் அது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானதாம்...இதை எங்கு போய் சொல்ல...இறந்தவர் ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்.

Thursday, December 12, 2013

வேலூர் புரட்சி ஒரு கண்ணோட்டம்

இப்பொழுது உள்ள இளைங்கர்களுக்கு வேலூர் புரட்சியைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே வரலாறை நாம் படித்திருக்கிறோம்....அதை இப்பொழுது எண்ணிப் பார்த்தால் வருத்தமாகத்தான் உள்ளது. இப்பொழுது இந்த வேலூர் புரட்சியைப் பற்றி சற்று படிப்போமே!!! 1806 ம் ஆண்டு ஜூலை 10 ம் தேதி வேலூர் கோட்டையிலிருந்த இந்திய சிப்பாய்கள், வெள்ளையர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். இந்தப் புரட்சியே வேலூர் புரட்சி எனப்படுகிறது. புரட்சிக்கு என்ன காரணம்? 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானுக்கும் நிஜாம் மற்றும் மராட்டியர்கள் ஆதரவு பெற்ற பிரிட்டிஷ் படைக்கும் போர் நடைபெற்றது. இதில் திப்பு கொல்லப்பட்டார். இது தென்னிந்தியா முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்த பாளையக்காரர்கள் அனைவரும் இணைந்து 1800-1801 ஆண்டுகளில் தொடர்ந்து புரட்சி நடவடிக்கைகளில் இறங்கினர். இதில் திப்புசுல்தானின் மகன்களும் பங்கு கொண்டனர். திப்புவின் குடும்பத்தினர் அனைவரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இதனால் வேலூர் நகரம் புரட்சியின் மையப்பகுதியாக விளங்கியது. இதே நேரத்தில் இந்திய சிப்பாய்களுக்கு ஆங்கில அரசு பல புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. “மாட்டுத்தோலினால் செய்யப்பட்ட பன்றிக்கொழுப்பு தடவப்பட்ட தலைப்பாகை அணிய வேண்டும், மீசையின் அளவை குறைக்க வேண்டும், தாடி வளர்க்கக்கூடாது” போன்ற கட்டளைகள் இஸ்லாமிய சிப்பாய்கள் மத்தியிலும், திருநீறு அணியக்கூடாது போன்ற கட்டளைகள் இந்திய சிப்பாய்கள் மத்தியிலும் பெரிய கொந்த்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 1806 ஜூலை 10 ம் தேதி அதிகாலை 2 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் புரட்சி வெடித்தது. வேலூர் கோட்டைக்குள் அணிவகுத்துச் சென்ற இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேய படைத்தளபதிகளை சுட்டுக்கொன்றனர். பீரங்கிகளால் தாக்கிக்கொண்டே முன்னேறினர். இந்திய சிப்பாய்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்த கர்னல் மிக்கிராங் சுட்டுக்கொல்லப்பட்டான். மூன்றே மணிநேரத்தில் புரட்சியாளர்கள் கோட்டையை கைப்பற்றினர். திப்புவின் புலிக்கொடியை கோட்டையில் ஏற்றினர். சிலமணி நேரங்களில் ஆற்காட்டிலிருந்தும் மற்ற பகுதிகளில் இருந்தும் வந்த ஆங்கிலேயப் படை வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றியது. அதில் மூவாயிரம் புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரக்கணக்கான சிப்பாய்களுக்கு ஆங்கிலேய அரசு மரணதண்டனை வழங்கியது. புரட்சி தோல்வியுற்றாலும் ஆங்கிலேய அரசிற்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியதாலும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டியதாலும் இந்தப்புரட்சி வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாக பதிந்துபோனது.

Sunday, December 8, 2013

இதற்குத்தானே ஆசை பட்டாய் இந்தியனே....

நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் சோடை போகும் என்று சொல்லிவிடமுடியாது...ஏனென்றால் நம் மக்களின் எண்ண ஓட்டங்களை விஞ்கானதாலும் கண்டறிய முடியாது...இன்னும் லோக் சபா தேர்தலுக்கு ஆறு மாத காலம் உள்ள சூழ்நிலையில் இந்த காங்கிரஸ் அரசாங்கம் இன்னும் நம்பிக்கையில் இருப்பது நம் மாநில கட்சிகளின் என்னவோட்டங்களுக்காக...நம் மக்கள் தான் எவ்வளவு ஊழல் செய்தாலும் அவர்களின் ஒரு நாள் வாழ்க்கை நடத்த காசு கொடுத்தால் போதுமே...இந்த பாழாய் போன காங்கிரஸ் கூட்டணிகுத்தானே வோட்டு பொத்தானை அழுத்துவார்கள்...ஏனென்றால் காராபூந்திக்கும் ராகுல்காந்திக்கும் வித்தியாசம் தெரியாத பயபுள்ளைங்க நாம்... டெல்லியை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது...டெல்லியை போல் நம் மாநிலத்தில் புதிதாக ஆரம்பித்த கட்சியை இந்த அரசியல்வாதிகள்தான் ஏற்றுகொள்வார்களா??? இல்லை நம் மக்கள்தான் தான் ஏற்றுகொள்வார்களா??? யார் குடிப்பதற்கும் பிரியாணிக்கும் காசு கொடுப்பார்கள் என்று ஏங்கும் மக்கள் இருக்கும் வரையில் எத்தனை பெரியார் வந்தாலும் நம் மக்களை திருத்த முடியாது...இந்த நேரத்தில் நாம் ஆம் ஆத்மி கட்சியை சேர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்... வாழ்த்துக்கள் கேஜ்ரிவால்! டெல்லியில் எவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்,மீண்டும் ஒருமுறை டெல்லியில் தேர்தல் நடத்துவதே உத்தமம்.அதனால் மக்கள் வரிப்பணம் வீணாக போனாலும் பரவாயில்லை! இந்த இரண்டு தேசிய கழிசடை கட்சிகளையும், எஙகெல்லாம் ஒழிக்க முடியுமோ,அங்கெல்லாம் மெல்ல மெல்ல ஓரம் கட்டி ஒழித்தாகவேண்டும். இரண்டு பயலும் அயோக்கியனுங்க தான்!ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல!இந்த நேரத்தில் மாற்று கட்சியினரின் ஆதரவை விலை பேசும், அயோக்கியத்தனங்களை எல்லாம் தடுக்க வேண்டும்.அப்படி செய்யும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.அப்படி விலை போகும் சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும்.மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!எப்படியாயினும் மாற்றம் தேடி வாக்களித்த,டெல்லி மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த,கேஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

Saturday, March 2, 2013

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு!

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார்?  இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!

இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான்.

அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ?

அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு.

சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார்.

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள்.

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள்.

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார்.

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள்.

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது.

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள். வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது.

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .

ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது.அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார்.காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார்.

அதன் பிறகு ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது.ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள்.

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான்.

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக...

Thursday, August 2, 2012

நான் ஒரு தமிழன்....

தட்டி எழுப்பிய

தம்பிக்கு

"குட் மார்னிங்"


தட்டில் உணவு கொடுத்த

அன்னைக்கு

"தேங்க்ஸ் மா"தோளில் கைபோட்டு

துட்டு கொடுத்த தந்தைக்கு

"ஸ்வீட் பா"


முற்றலில் இருந்த

தங்கைக்கு

"பை சிஸ்டர்"


வீதியில் கண்ட

நண்பர்களுக்கு

"ஹாய் ஹாய் ஹாய்"விலகிப் போன

நண்பிகளுக்கு

"ஹாய் ஸ்வீடி"பள்ளிக்கூட

வளாகத்திலே

"பச்சை பச்சை ஆங்கிலம்"


வீடு திரும்பும் நேரத்திலே

காலிலே குத்திய கல்லுக்காக

கத்தினேன் "அம்மா" - என்று


குத்தியது கல்லா - இல்லை

குத்திக்காட்டியது - தமிழா???

Monday, July 16, 2012

தமிழனுக்கு கல்வி என்ன எட்டா கனியா???

இது என்னுடைய நூறாவது பதிவு...என்ன எழுதுவது...எதைப் பற்றி எழுதுவது என்ற சிந்தனை என் மனதில் இருந்தவண்ணமே இருந்தது. இவ்வாறாக யோசித்த போது கர்மவீரர் காமராஜரே என் கண்முன்னே வந்து நின்றார். அதற்கு காரணம் உண்டு, ஏனென்றால் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பிறந்தவர்களுக்கு இலகுவாக பள்ளிக்கூடம் செல்வதற்கு காரணமாக இருந்தவரே கல்விக்கண் கொடுத்த காமராஜர்தான்.

ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது)

தி.மு.க வை சேர்ந்த இளைஞர் சீனிவாசனிடம் தோல்வியுற்றார் காமராஜர்.அப்பொழுது தி.மு.க வினர் "படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்" என சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.அதற்கு பதிலடியாக ஒரு சுவரொட்டி அதே பகுதிகளில் ஜொலித்து சிந்திக்கவும் வைத்தது...அது "படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார் அதற்கு வாழ்த்துக்கள்" என்று....அந்த சுவரொட்டியை ஒட்டியது அய்யா தந்தை பெரியார்.அந்தளவு காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார்.சொந்தமாய் கல்வி நிலையம் தொடங்கி கோடிகளை சுரண்டவோ, நிலம் புலங்களை வாங்கி சொத்து சேர்க்கவோ அல்ல... மக்களுக்கு உண்மையாக சேவை செய்வதற்காக...ஆனால் இப்பொழுதோ கல்வியின் நிலையை கல்விக்கடவுள் சரஸ்வதியால் கூட காப்பாற்ற முடியாத சூழ்நிலை இங்கே உருவாக்கி விட்டது.

“வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது'' என்பது கல்வியின் சிறப்பு. ஆனால் இன்று கல்வி, வணிகம் என்ற வெந்தணலில் வெந்து கொண்டிருக்கின்றது. கோடி கோடியாய்க் குவிந்து கிடக்கும் பணத்தாள்களை, அதாவது கறுப்பை வெள்ளையாக்க, பண முதலைகள் பயன்படுத்திக் கொண்ட உத்திதான், “கல்வி நிலையம்''. மழலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி, மெட்ரிக் என்னும் நுழைமுகப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என்று காடும் மேடும் கட்டடம் எழுப்பிக் கல்வி வணிகம் தொடங்கி விடுகின்றனர். ஆயிரம் இறைத்தால் ஆசிரியக் கூட்டம் மளமளவென்று வரிசையில் நிற்கின்றது. கறுப்பை எல்லாம் வெள்ளையாய் மாற்றுவதற்கும், கணக்கு வழக்கின்றிக் காசைக் குவிப்பதற்கும் நல்வழியாக இது அமைந்து வருகின்றது. கல்வி வள்ளல் என்னும் புகழ்மொழியோடு வெள்ளுடை பூண்டு வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளின்மீது ஆதிக்கம் செலுத்தியும் சுரண்டிக் கொள்ளையடித்தும் வல்லரசாகத் திகழ்ந்துவரும் அமெரிக்காவில்கூடத் தனியாரிடம் இருபத்திரண்டு விழுக்காடு கல்வி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியாவில் தொண்ணூற்று ஆறு விழுக்காடு கல்வி நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளன.

கல்வியை வணிக மயமாக்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெறுகிறது. இன்று தமிழ்நாட்டில் ஆங்கில வழிப் பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில் வழங்கப் படும் தொகை, ஒருவரது மேல்நிலை மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் தொகைக்கு இணையாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் போதிய இடவசதியும், ஆசிரியர்களின் பற்றாக் குறையும், கல்லூரிகளில் அனைத்துப் பாடப் பிரிவும் ஆங்கிலத்தில் உள்ளதும், அடிப்படையிலேயே குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்தியாவில் சிறந்த கல்லூரிகள் தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தின் கல்வித் தரத்தை அடிப்படையாகக் கொண்டு வட மாநிலத்தவர்கள் பலர் உயர்கல்வி பெற இங்கு வந்து கல்வி கற்பது வழக்கமாகிவிட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்கள் பல அரசின் நிதி உதவியுடன் இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் என்பதும் கடந்த பல ஆண்டுகளாக நல்ல நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு உயர் கல்வியை ஒரு சமூகத் தொண்டாகக் கொண்டு இயங்கி வருவதும் கல்வியாளர்கள் முதல் பொதுமக்களும் அறிந்ததே.

இவ்வாறு சிறப்புடன் இயங்கும் அரசின் உதவி பெறும் தொழில் நுட்பக் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக் கழகங்களாக உருவாக்க மாநில அரசின் உயர்கல்வித்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த உயர்கல்வி நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க, இப்போது செயல்படும் பல தனியார் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவும் கல்வியை ஒரு சமூகத் தொண்டாகக் கருதாமல் வணிகமாகக் கருதும் நிலையே உள்ளது. இப்போது தமிழ்நாட்டின் இரண்டு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகள் பல்லாண்டுகளாக உயர்கல்விக்குத் தொண்டு செய்துவரும் நிலையில், தனியார் பல்கலைக் கழகங்களாக உருமாறும் போதும், நடுவண் மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவிகளுடன் கட்டமைப்பு வசதிகளைப் பெற்று, அங்குப் பணிபுரியும் ஆசிரியர்கள், படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகிறது.

இங்கு படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் நிலையும், ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வியை நடுவில் இழக்கும் நிலையும் ஏற்படலாம். இப்போது இங்குப் பணி புரியும் பேராசிரியர்களின் நிலை, அவர்களின் வாழ்வுரிமைகள் பற்றி பல்வேறு வினாக்கள் எழுகின்றன. தமிழகத்தின் பல பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் பல அரசு உதவிபெறும் கல்லூரிகள் “தனியார் கல்வி நிறுவனங்களாக'' உருமாறும் போது, ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாகும் நிலை ஏற்பட்டுவிடும். இடஒதுக்கீடும் கிடைக்காமல் போகும். உயர்கல்விச் சாலைகளில் அடியெடுத்து வைக்காத நிலையில் பல இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் உள்ள நிலையில் நடுவண் மற்றும் மாநில அரசுகளின் உயர்கல்விக் கொள்கையில் தகுந்த மாற்றம் செய்யவேண்டும்.

சாராயக் கடைகளையும், மணல் வணிகத்தையும் அரசே ஏற்று நடத்தும்போது, கல்வியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது. குழந்தைகள் தங்களது சுய ஆர்வத்தைத் தாங்களே அறிந்து கொள்ளும் விதத்தில் கல்வி முறை இருக்கவேண்டும். அறிவியல் அறிஞர்களை உருவாக்கும் வகையில் செய் முறையுடன் கல்வி அமல்படுத்துவதே காலத்தின் கட்டாயம். இக்கல்விச் சீர்திருத்தங்களுக்காகக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்களின் கருத்துகளின்மீது அக்கறை செலுத்துவது, அரசின் கடமையாகும்.