Thursday, August 13, 2009

இளைஞர்கள்

முன்பெல்லாம் ஒரு வழக்கம் உண்டு வழக்கம் என்பதை விட அதை பழமொழி என்றே கூறலாம் உன் நண்பனை பற்றி சொல் நான் உன்னைப் பற்றி கூறுகிறேன் என்று. இப்பொழுதெல்லாம் இதை பின்பற்றினால் நம்மைப் போன்ற அறிவிலி யாரும் இல்லை என்றே கூறலாம்.இப்பொழுது உலகம் வளர்ந்து வரும் நிலையில் உறவுகளையே மறக்கத் துடிக்கும் சமுதாயத்தில் நண்பர்களை அதுவும் பால்ய கால நண்பர்களை நினைத்துப் பார்க்கக் கூட மனிதன் நேரம் இல்லாமல் பணத்தை தேடி அலைந்துகொண்டிருக்கிறான்.சிறு வயதில் கொண்ட நட்பு என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதார்த்தமாக இருந்தது. நாளாக நாளாக நாம் வளருவதைப் போல நண்பர்களிடையே எதிர்பார்ப்புகளும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.நான் இவனுக்கு இதை செய்திருக்கிறேன் என்றால் இவனும் இதை எனக்கு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்பொழுது வருகிறது என்று கேட்டால் நான் விடையற்று நிற்கின்றேன்.நான் மட்டும் அல்ல என்னை போன்ற பலருக்கும் இதே போன்ற கேள்விகள் ஆயிரம் இருக்கும்.ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே!!! பழகும் பொழுது எதிர்பார்ப்பில்லாமல் பழகும் ஒரு சிலர் பழகிய பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டே நம்மிடம் பழகுகிறார்கள். கேட்டால் உன்னிடம் கேட்காமல் வேறு யாரிடம் சென்று நான் கேட்பது அது உனக்கு அசிங்கம் இல்லையா என்றதொரு விளக்கம் வேறு. அதில் தவறில்லை நாம் நன்றாக இருந்தால் நண்பர்களுக்கு மட்டும் இல்லை உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் நம்மால் ஆன உதவிகளை செய்யலாம். நாமே இங்கு கஷ்டப்படும் போது நம்மால் பிறர்க்கு எப்படி உதவ முடியும்???? இதற்க்கு நல்ல உதாரணங்கள் உண்டு. நகரத்தில் இருக்கும் அனைவரும் இதை அனுபவப்பட்டிருப்பார்கள். முன்பெல்லாம் சென்னை போன்ற பேரு நகரங்களில் திருமணமாகாத வாலிபர்களுக்கு வீடு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயம்.அப்படியும் கிடைத்து விட்டால் ஆயிரம் நிபந்தனைகள். மூன்று பேருக்கு மேல் தங்கக் கூடாது, காலையில் மட்டும் தான் தண்ணீர் வரும்; அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அதற்க்குள் எல்லா வேலைகளையும் நாம் முடித்திருந்திருக்க வேண்டும்.அப்பொழுது நண்பர்களில் ஒருவன் மட்டுமே வேலைக்குச் செல்வான். மற்றவர்கள் வேலை தேடிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் சூழ்நிலையில் படித்து முடித்து வரும் நண்பர்கள்,உறவினர்கள் எல்லாம் நேராக நாம் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.(எப்படித்தான் நாம் இருக்கும் விலாசம் கிடைக்குமோ???) நிலைமையை எடுத்துச் சொன்னாலும் அவர்களை நாம் வேண்டுமென்றே தவிர்க்கிறோம் என்று நினைத்துக்கொண்டே சென்று விடுவார்கள். பிற்பாடு அவர்களுக்கும் நமக்கும் ஒரு தொடர்பே இல்லாமல் போய் விடும்.ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையே வேறு. திருமணம் ஆகாதவர்களை தவிர வேறு யாருக்கும் வீடு கிடைப்பதில்லை.இப்பொழுதெல்லாம் படிக்கும் பொழுது நட்புடம் இருப்பவர்கள் படித்து முடித்த பின்னரும் ஒன்றாக வீடு எடுத்து தங்கி வேலை தேடுகிறார்கள்.அதை நினைக்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாகவே இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் வேலை கிடைத்து விட்டு ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைக்காவிட்டால் ஒரு வித பொறாமை வந்து விடுகிறது அதுவே அவர்களின் நட்புக்கு ஒரு விரிசல் வர காரணமாகி விடுகிறது. நட்பு என்பது சகிப்புத்தன்மை,பொறாமை அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது அப்பொழுது எல்லாம் தெரியாது.ஏனென்றால் அதெல்லாம் பக்குவப்படாத வயது.வாழ்க்கைக்கும் தேர்வுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். படித்து முடித்து விட்டு தேர்வு எழுதிய பின்பு தான் நமக்கு முடிவுகள் வரும். ஆனால் வாழ்கையில் முடிவுகள் வந்த பின்பு தான் நாம் படிக்கவே ஆரம்பிப்போம். "உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று சொன்னால்,யாரும் நண்பனாக இருக்கமுடியாது ,நல்லவர்கள் மட்டும் நண்பர்களாகி விட்டால் ,தவறான வழியில் செல்பவர்களை யார் வழிநடத்துவது.கெட்டவர்கள் இருந்தால் அந்த நட்பு கெட்ட நட்பும் .நல்லவர்கள் இருந்தால் அது நல்ல நட்பும் என்றும் சொல்வது வேடிக்கையான விஷயம்.ஒரு நண்பர்கள் கூட்டத்தில் ஒரு கெட்டவன் இருந்தால் அவனை ஒழுங்குபடுத்துவது ஒரு உண்மையான நண்பனின் கடமையாகும்.அதை விட்டு விட்டு அவன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன என்று இல்லாமலும், இல்லை அவன் செய்யும் செயல்களுக்கு உடன் போகாமல் இருப்பதும் ஒரு நல்ல நண்பனின் தலையாய கடமையாகும்.இப்பொழுதெல்லாம் சமுதாயத்தில் ஒரு பரவலான கருத்து நண்பர்கள் ஒன்று சேர்ந்தாலே குடியும் கும்மாளமும் தான் என்று. அந்த கருத்தை தகர்த்தெறிந்து கெட்ட சகவாசங்களை விட்டெறிந்து இந்த சமுதாயத்தின் முன்னேற்றதிற்க்குப் பாடு படுவோம். எல்லோரும் சொல்கிறார்கள் நாளைய உலகம் இளைஞர்கள் கையில் என்று அப்படியென்றால் இன்றைய உலகம் யார் கையில்??? அதுவும் நம் கையில் என்று கூறி நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் பாடு படுவோம்....

Monday, August 10, 2009

நான் பார்த்த மனிதர்கள்

சில சமயம் நான் கடவுளின் மீது கோபம் கொள்வது உண்டு. ஏனென்றால் என் சிறு வயதில் சிறு வயது என்றால் என் அப்பாவின் கைப் பிடித்து நடந்த வயதில் நான் பார்த்த மனிதர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே தான் இப்பொழுது வரை இருக்கிறார்கள். நான் படித்த வரலாறுகளாகட்டும், கதைகளாகட்டும் அதில் வருபவர்கள் அனைவரும் முன்னேறிவிடுகிறார்கள். ஆனால் நான் பார்த்த மனிதர்களில் பெரும்பாலோனோர் எப்படி இருந்தார்களோ அப்படியே இன்னும் இருக்கிறார்கள்.இவ்வளவுக்கும் அவர்கள் யாரும் உழைக்காமல் இல்லை..... செருப்பு தைப்பவர் இன்னும் செருப்பு தைத்துக்கொண்டு தான் இருக்கிறார், மூட்டை சுமப்பவர் இன்னும் மூட்டையை மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறார்.நான் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போது அவர்களைப் பார்ப்பதுண்டு.என்னால் முடிந்த உதவிகளையும் செய்துவிட்டு வருவதுண்டு. சில சமயம் நினைத்துப்பார்க்கும் போது எனக்கு விந்தையாகவே உள்ளது. அப்பொழுது எனக்குள் எழுந்த எண்ணங்கள் ஆயிரம் ஆயிரம்....அதில் அவர்கள் செய்யும் தொழிலின் மீது தவறா????? இல்லை இந்த சமுதாயத்தின் மீது தவறா????? என்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்காதா நாமும் இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று??? எனக்குத் தெரிந்து நம் நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரியான நிலைமை. அவர்களின் வாழ்வுக்கும் அரசாங்கம் ஒன்றும் செய்யாமல் இல்லை; அவர்களின் குழந்தைகளின் கல்வியாகட்டும், வாழ்க்கையாகட்டும் அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை முழுமையாக சென்றடைகிறதா என்பது தான் கேள்விக் குறி.சமுதாயத்திலும் இன்னும் அவர்களுக்கு முழுமையான அங்கிகாரம் கிடைக்க வில்லை என்பது தான் என்னுடைய கருத்து.நம்மில் இன்னும் எத்தனை பேர் செய்யும் தொழிலை வைத்து அவர்களை எடை போடுகிறோம்... ஆனால் அவர்கள் நேர்மையாக உழைக்கின்றனரா என்று ஒரு போதும் பார்ப்பதில்லை... உதாரணத்திற்கு பேருந்தில் நமக்கு அருகாமையில் உட்காருபவர்கள் நல்ல ஆடை அணிந்து டிப் டாப்பாக இருந்தால் தான் நாம் இடமே கொடுக்கிறோம்.பின்பு எப்படி அவர்களுக்கு மனதில் இடம் கொடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்ப்படுத்த நமக்கு மனம் வரும். நானே சில சமயம் ஆள் பார்த்து இடம் கொடுத்ததுண்டு... இப்பொழுது அதை நினைத்துப்பார்க்கும் பொழுது என்னை நினைத்து நானே வெட்க்கப்படுவதுண்டு. அப்பொழுது வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத வயது.ஏற்றத்தாழ்வுகள் என்பது எப்பொழுது வேண்டுமானாலும் யார் வாழ்கையிலும் வரும் என்பதை புரிந்துகொள்ள முடியாத பருவம்.நான் ஒன்றும் தெரியாத மனிதர்களுக்கு உதவுங்கள்,கருணைபடுங்கள் என்று கூறவில்லை... நமக்கு தெரிந்த நாம் சிறு வயது முதல் பார்த்து வந்த மனிதர்களுக்கு நம்மால் ஆனா உதவிகளை செய்தாலே போதுமானது... அதை விட்டு விட்டு கண்ணுக்குத் தெரியாத மனிதர்களுக்கு நான் இதை செய்தேன் அதை செய்தேன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் ஒன்றும் இல்லை. அரசாங்கமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்...அரசாங்கம் செய்யும் நலத்திட்டங்களை முழுமையாக அவர்களுக்கு சேருமாறு செய்து மற்றும் நம்மை போன்றவர்கள் முயற்சி எடுத்து செய்தாலே கோடான கோடி மக்களின் வாழ்வுக்கு வெளிச்சம் ஏற்றிவிடலாம்........

Friday, August 7, 2009

தபூசங்கர் கவிதைகள்

அற்புதமான காதலை மட்டுமல்ல அதை உன்னிடம் சொல்ல முடியாத அதி அற்புதமான மௌனத்தையும் நீதான் எனக்குத்தந்தாய்.

யாராவதுஏதாவதுஅதிர்ச்சியானசெய்தி சொன்னால்அச்சச்சோ என்றுநீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்.



என்னை எங்கு பார்த்தாலும்ஏன் உடனே நின்று விடுகிறாய்?என்றா கேட்கிறாய்.நீ கூடத்தான்கண்ணாடியை எங்கு பார்த்தாலும்ஒரு நொடி நின்று விடுகிறாய்.உன்னைப் பார்க்க உனக்கேஅவ்வளவு ஆசை இருந்தால்எனக்கு எவ்வளவு இருக்கும்...



நீ இல்லாத நேரத்திலும்உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறதுஉன் அழகு. .....



ஊரிலேயேநான்தான் நன்றாகபம்பரம் விடுபவன்ஆனால் நீயோஎன்னையே பம்பரமாக்கிவிடுகிறாய் ......



நீ யாருக்கோ செய்தமௌன அஞ்சலியைப்பார்த்ததும்...எனக்கும்செத்துவிடத் தோன்றியது..




உன்னைக் காதலித்துக்கொண்டிருக்கும்போதுநான் இறந்துபோவேனாஎன்பது தெரியாது.ஆனால்நான் இறக்கும்போதும்உன்னைக் காதலித்துக்கொண்டிருப்பேன்என்பது மட்டும் தெரியும் .




எதை கேட்டாலும் வெட்கத்தயே பதிலாக தருகிறாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்




நீ வருவதற்காவே காத்திருக்கிறேன்
என்னை கடந்து போவதற்காவே வருகிறாய்



அழகான பொருள்கள் எல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவுபடுத்துபவை
எல்லாம் அழகாகவே இருக்கின்றன




நீ நடந்து போன சுவடின்றி
அமைதியாக கிடக்கிறது
சாலை
அதிவேக ரயிலொன்று கடந்துபோன
தண்டவாளம் போல் அதிர்கிறது
என் இதயம்




அரைமணிநேரமாய்பேசிகொண்டிருக்கிறாய்..வாழ்நாள் விமோட்சனம்அடைந்துவிட்டதாய் கூச்சலிடுகிறதுசெல்போன் பொத்தான்கள்..




அழகான கன்னமெனசொல்லி கிள்ளுகிறாய்பக்கத்துவீட்டு குழந்தையை!தன்னுடையதை விடஉன்னுடையது அழகெனபொறாமையில் அழுகிறது குழந்தை....







Saturday, August 1, 2009

கிடா விருந்து

உங்களில் பெரும்பாலோனோர்க்கு கிடா விருந்து அனுபவம் இருக்கும் என நினைக்கின்றேன்.எனக்குக் கிடைத்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.பெரும்பாலும் கிராமங்களில் இந்த கிடா விருந்து என்பது மிகவும் பிரசித்தம். சிறு வயது முதல் இன்று வரை கிடா விருந்திற்க்காக என்னை என் சொந்தங்கள் அழைத்துக்கொண்டே இருக்கின்றனர். பணி சுமை காரணமாக இன்று என்னால் அவ்வளவாக அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலை. கோவில் திருவிழா, குழந்தைகளுக்கு மொட்டை போட,பிராத்தனைகளை நிறைவேட்ற, காதணி விழா என்றால் உடனே கிடா விருந்து தான் என் ஊரில். அந்த கிடா விருந்துக்குச் செல்வதென்பதே ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். இதற்க்கான ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை கிடாவை வளர்ப்பார்கள். பெரும்பாலும் அவரவர் குலதெய்வ கோவில்களில் தான் இந்த கிடா விருந்து சம்பவம் அரங்கேறும். ஊருக்கு அருகினில் கோவில் என்றால் மாட்டு வண்டி பயணம் தான். ஊருக்கு சற்று தொலைவினில் என்றால் ஒரு லாரியை வாடகைக்குப் பிடித்து எல்லோரும் செல்வோம்.அந்த லாரி வைக்கோல் ஏற்றிச் செல்லும் லாரியாகத் தான் இருக்கும்.அவ்வளவு பழையதாக இருக்கும். எல்லோரும் சேர்ந்து தள்ளினால் தான் அது ஸ்டார்ட் ஆகும். பொறுமையாக அதில் ஏறிச் சென்று கோவிலை அடைந்து விடுவோம். பெண்கள் எல்லோரும் குடங்களை எடுத்துக் கொண்டு அருகினில் இருக்கும் குளங்களைத் தேடி சென்று விடுவர்.ஒவ்வொரு கோவில்களுக்கு அருகில் குளங்கள் இருக்கும்.சிறு குழந்தைகள் எல்லாம் விளையாட சென்று விடும். பெரியவர்கள் எல்லாம் நிழல் இருக்கும் பகுதியைப் பார்த்து சென்று விடுவர். சமையல்காரர்கள் சமையலுக்கான வேலையை ஆரம்பித்து விடுவர். மசாலா அரைப்பது,அடுப்புகளை தயார் பண்ணுவது,விறகுகளை வண்டியில் இருந்து இறக்குவது போன்ற வேலையே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சில சமயங்களில் உறவினர்களே நல்ல சமையல்காரர்களாக இருப்பர். அவ்வாறு இருந்தால் அவர்கள் படுத்தும் பாட்டுக்கு அளவே இருக்காது. அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.முன்தினமே சமையலுக்கான பட்டியலை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள்.அதில் ஒன்று குறைந்தால் கூட போச்சு.கத்தி கூச்சல் போட்டு விடுவார்கள். உடனே கிடா விருந்து கொடுப்பவருக்கு கோபம் வந்து அவர் வீட்டு ஆட்களை கூச்சல் போடுவார். அந்த வீட்டுப் பெண்கள் எல்லாம் அங்கே தான் வைத்தேன்...இங்கே தான் வைத்தேன் என்று தேட ஆரம்பித்து விடுவார்கள். இதே சமையலுக்கு ஆள் வைத்தால் அவர்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு வேலை மிச்சம். பெரும்பாலும் கிடா விருந்தில் சமையலுக்கு ஆள் வைப்பது என்பது குறைவு.வீட்டு ஆட்கள் தான் எல்லாவற்றையும் ப்ர்ரதுக்கொள்ள வேண்டும்.அடுப்பை எரிய வைக்கும் முன் போதும் போதும் என்றாகிவிடும். ஏனென்றால் பச்சை விறகுகளாக இருக்கும். அவை சாமானியமாக எரியாது. அங்கு இருக்கும் இலை தலைகளை எல்லாம் போட்டு முதலில் எரிய வைத்து பின்பு விறகுகளை வைத்து விடுவர்.கிடாவை வெட்டும் முன்பாகவே பொங்கல் வைத்து விடுவார்கள். பின்பு கோவிலில் உள்ள பூசாரியிடம் சொல்லி கிடாவை வெட்ட ஏற்ப்பாடு செய்வார்கள். அந்த கிடாவை சம்மதிக்கச் செய்வது என்பது நகைச்சுவையான சம்பவம்.கிடாவிற்கு மாலை போட்டு மஞ்சள் தண்ணீரை ஊற்றி சம்மதிக்க வைப்பார்கள். கிடாவை வெட்டுவதர்க்கென்றே ஒரு கோஷ்டி இருக்கும்.அப்பொழுது அந்த கிடாவைப் பார்த்தலே பரிதாபமாக இருக்கும்.சில மணித்துளிகள் நாம் அசைவமே சாப்பிடக்கூடாது என்றெல்லாம் எண்ணிய நாட்கள் அவை.அவர்கள் அரைமணி நேரத்தில் முழுவதுமாக வெட்டி உரித்து விடுவார்கள். அதில் ஈரல்,குடல்,கால்கள் என்றெல்லாம் தனித்தனியே பிரித்து விடுவார்கள்.அதன் ரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து விடுவார்கள்.கறி பகுதியை சமையலுக்கு அனுப்பிவிடுவார்கள். கிடா விருந்து நாட்களில் தான் கிடாவின் அனைத்துப் பாகங்களையும் ஒரு சேர சாப்பிட முடியும். குடல் கொலம்பு, சூப்பு, மூளை, தலை கறி மற்றும் பல.... அந்த கொலம்பு கொதிக்கும் போது வரும் வாசனைக்கு ஈடு இணையே கிடையாது.அந்த வாசனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்றடயும் அதை வைத்தே அந்த பகுதி மக்கள் ஆஹா!!!!! யாரோ கிட விருந்து போட போகிறார்கள் என்று கண்டுபிடித்து அங்கே வந்துவிடுவார்கள் சட்டிகளை தூக்கிக் கொண்டு....மிச்சம் இருந்தால் அவர்களுக்கு அன்று சரியான விருந்து இல்லையென்றால் அன்று அவர்களுக்கு ஏமாற்றம் தான். அந்த ஏமாற்றத்தைப் போக்க சிலர் அவர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கமும் உண்டு.... பணம் கொடுக்கும் பழக்கம் என்பது மிகவும் அரிது. கிடா விருந்து என்றாலே சராயத்திற்க்குப் பஞ்சம் இருக்காது. தண்ணி அடிப்பவர்களுக்கென்று தனியாக சமைக்கும் பழக்கமே உண்டு. அவர்கள் படுத்தும் பாட்டிற்கு அளவே கிடையாது.ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை வந்து வந்து கறியை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். தண்ணியைப் போட்டு விட்டு அவர்கள் படுத்தும் பாட்டிற்கு இந்த கட்டுரையே போதாது. சமைத்து முடித்த பிறகு அதை கடவுளுக்குப் படைத்து விட்டு சாப்பிட உட்க்கார்ந்து விடுவார்கள். சிறியவர் முதல் பெரியவர் வரை.....மண் தரையில் தான் சாப்பாடு. யாரும் அதற்க்காக கூச்சப் படுவது என்பதே கிடையாது... அவர்கள் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும்.சைவம் சாப்பிடும் ஆட்கள் வந்திருந்ததால் அவர்களுக்கு தனியாக சமைத்திருப்பர்கள். இதில் ஒரு சாஸ்திரம் வேறு உண்டு கிடா விருந்து வைத்து மிச்சம் இருந்தால் அதை வீட்டற்கு எடுத்துச் செல்ல கூடாது. அதனால் ஒவ்வொருவரும் குறைந்தது கால் கிலோ கறியாவது சாப்பிட்டு விடுவார்கள்.ஒவ்வொரு கிடாவும் குறைந்தது பதினைந்து முதல் இருபது கிலோ இருக்கும்.அழைக்கப்பட்டிருக்கும் விருந்தாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பூசாரிக்கும் அந்த கோவிலை சுற்றி உள்ள மக்களுக்கும் அன்று திருவிழா தான்.மீதமுள்ளதை அவர்களிடமே கொடுத்து விட்டு பாத்திரங்களை நன்றாக கழுவி வந்த லாரியில் ஏற்றி விடுவார்கள். விருந்து முடிய எப்படியும் மாலை நேரம் ஆகிவிடும்.அதற்குள் குழந்தைகள் எல்லாம் விளையாடி அசந்து தூங்கிப்போயிருக்கும்.அவர்களை எல்லாம் எழுப்பி தயார் செய்வதே பெரிய வேலை வீட்டில் உள்ளவர்களுக்கு. இந்த மாதிரியான விஷேசங்களுக்கு குழந்தைகளுக்கு நிறைய அணிகலன்களை அனுவிக்கும் பழக்கம் வேறு உண்டு.சில சமயம் கவன குறைவு காரணமாக குழந்தைகள் அதனை தொலைத்து விடும் சம்பவங்களும் நிறைய உண்டு. இப்பொழுது உள்ள தலைமுறையினர்க்கு சொந்த பந்தங்களின் பாசங்களைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாதிரியான தருணங்கள் தான் ஒவ்வொருவரையும் இணைக்கும் விழாவாக நான் கருதுகின்றேன்.