நான் கற்றதையும் பெற்றதையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டி முற்பட்டதன் விளைவு இந்த எழுத்துக்கள்..............
Saturday, August 1, 2009
கிடா விருந்து
உங்களில் பெரும்பாலோனோர்க்கு கிடா விருந்து அனுபவம் இருக்கும் என நினைக்கின்றேன்.எனக்குக் கிடைத்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.பெரும்பாலும் கிராமங்களில் இந்த கிடா விருந்து என்பது மிகவும் பிரசித்தம். சிறு வயது முதல் இன்று வரை கிடா விருந்திற்க்காக என்னை என் சொந்தங்கள் அழைத்துக்கொண்டே இருக்கின்றனர். பணி சுமை காரணமாக இன்று என்னால் அவ்வளவாக அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலை. கோவில் திருவிழா, குழந்தைகளுக்கு மொட்டை போட,பிராத்தனைகளை நிறைவேட்ற, காதணி விழா என்றால் உடனே கிடா விருந்து தான் என் ஊரில். அந்த கிடா விருந்துக்குச் செல்வதென்பதே ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். இதற்க்கான ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை கிடாவை வளர்ப்பார்கள். பெரும்பாலும் அவரவர் குலதெய்வ கோவில்களில் தான் இந்த கிடா விருந்து சம்பவம் அரங்கேறும். ஊருக்கு அருகினில் கோவில் என்றால் மாட்டு வண்டி பயணம் தான். ஊருக்கு சற்று தொலைவினில் என்றால் ஒரு லாரியை வாடகைக்குப் பிடித்து எல்லோரும் செல்வோம்.அந்த லாரி வைக்கோல் ஏற்றிச் செல்லும் லாரியாகத் தான் இருக்கும்.அவ்வளவு பழையதாக இருக்கும். எல்லோரும் சேர்ந்து தள்ளினால் தான் அது ஸ்டார்ட் ஆகும். பொறுமையாக அதில் ஏறிச் சென்று கோவிலை அடைந்து விடுவோம். பெண்கள் எல்லோரும் குடங்களை எடுத்துக் கொண்டு அருகினில் இருக்கும் குளங்களைத் தேடி சென்று விடுவர்.ஒவ்வொரு கோவில்களுக்கு அருகில் குளங்கள் இருக்கும்.சிறு குழந்தைகள் எல்லாம் விளையாட சென்று விடும். பெரியவர்கள் எல்லாம் நிழல் இருக்கும் பகுதியைப் பார்த்து சென்று விடுவர். சமையல்காரர்கள் சமையலுக்கான வேலையை ஆரம்பித்து விடுவர். மசாலா அரைப்பது,அடுப்புகளை தயார் பண்ணுவது,விறகுகளை வண்டியில் இருந்து இறக்குவது போன்ற வேலையே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சில சமயங்களில் உறவினர்களே நல்ல சமையல்காரர்களாக இருப்பர். அவ்வாறு இருந்தால் அவர்கள் படுத்தும் பாட்டுக்கு அளவே இருக்காது. அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.முன்தினமே சமையலுக்கான பட்டியலை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள்.அதில் ஒன்று குறைந்தால் கூட போச்சு.கத்தி கூச்சல் போட்டு விடுவார்கள். உடனே கிடா விருந்து கொடுப்பவருக்கு கோபம் வந்து அவர் வீட்டு ஆட்களை கூச்சல் போடுவார். அந்த வீட்டுப் பெண்கள் எல்லாம் அங்கே தான் வைத்தேன்...இங்கே தான் வைத்தேன் என்று தேட ஆரம்பித்து விடுவார்கள். இதே சமையலுக்கு ஆள் வைத்தால் அவர்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு வேலை மிச்சம். பெரும்பாலும் கிடா விருந்தில் சமையலுக்கு ஆள் வைப்பது என்பது குறைவு.வீட்டு ஆட்கள் தான் எல்லாவற்றையும் ப்ர்ரதுக்கொள்ள வேண்டும்.அடுப்பை எரிய வைக்கும் முன் போதும் போதும் என்றாகிவிடும். ஏனென்றால் பச்சை விறகுகளாக இருக்கும். அவை சாமானியமாக எரியாது. அங்கு இருக்கும் இலை தலைகளை எல்லாம் போட்டு முதலில் எரிய வைத்து பின்பு விறகுகளை வைத்து விடுவர்.கிடாவை வெட்டும் முன்பாகவே பொங்கல் வைத்து விடுவார்கள். பின்பு கோவிலில் உள்ள பூசாரியிடம் சொல்லி கிடாவை வெட்ட ஏற்ப்பாடு செய்வார்கள். அந்த கிடாவை சம்மதிக்கச் செய்வது என்பது நகைச்சுவையான சம்பவம்.கிடாவிற்கு மாலை போட்டு மஞ்சள் தண்ணீரை ஊற்றி சம்மதிக்க வைப்பார்கள். கிடாவை வெட்டுவதர்க்கென்றே ஒரு கோஷ்டி இருக்கும்.அப்பொழுது அந்த கிடாவைப் பார்த்தலே பரிதாபமாக இருக்கும்.சில மணித்துளிகள் நாம் அசைவமே சாப்பிடக்கூடாது என்றெல்லாம் எண்ணிய நாட்கள் அவை.அவர்கள் அரைமணி நேரத்தில் முழுவதுமாக வெட்டி உரித்து விடுவார்கள். அதில் ஈரல்,குடல்,கால்கள் என்றெல்லாம் தனித்தனியே பிரித்து விடுவார்கள்.அதன் ரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து விடுவார்கள்.கறி பகுதியை சமையலுக்கு அனுப்பிவிடுவார்கள். கிடா விருந்து நாட்களில் தான் கிடாவின் அனைத்துப் பாகங்களையும் ஒரு சேர சாப்பிட முடியும். குடல் கொலம்பு, சூப்பு, மூளை, தலை கறி மற்றும் பல.... அந்த கொலம்பு கொதிக்கும் போது வரும் வாசனைக்கு ஈடு இணையே கிடையாது.அந்த வாசனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்றடயும் அதை வைத்தே அந்த பகுதி மக்கள் ஆஹா!!!!! யாரோ கிட விருந்து போட போகிறார்கள் என்று கண்டுபிடித்து அங்கே வந்துவிடுவார்கள் சட்டிகளை தூக்கிக் கொண்டு....மிச்சம் இருந்தால் அவர்களுக்கு அன்று சரியான விருந்து இல்லையென்றால் அன்று அவர்களுக்கு ஏமாற்றம் தான். அந்த ஏமாற்றத்தைப் போக்க சிலர் அவர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கமும் உண்டு.... பணம் கொடுக்கும் பழக்கம் என்பது மிகவும் அரிது. கிடா விருந்து என்றாலே சராயத்திற்க்குப் பஞ்சம் இருக்காது. தண்ணி அடிப்பவர்களுக்கென்று தனியாக சமைக்கும் பழக்கமே உண்டு. அவர்கள் படுத்தும் பாட்டிற்கு அளவே கிடையாது.ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை வந்து வந்து கறியை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். தண்ணியைப் போட்டு விட்டு அவர்கள் படுத்தும் பாட்டிற்கு இந்த கட்டுரையே போதாது. சமைத்து முடித்த பிறகு அதை கடவுளுக்குப் படைத்து விட்டு சாப்பிட உட்க்கார்ந்து விடுவார்கள். சிறியவர் முதல் பெரியவர் வரை.....மண் தரையில் தான் சாப்பாடு. யாரும் அதற்க்காக கூச்சப் படுவது என்பதே கிடையாது... அவர்கள் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும்.சைவம் சாப்பிடும் ஆட்கள் வந்திருந்ததால் அவர்களுக்கு தனியாக சமைத்திருப்பர்கள். இதில் ஒரு சாஸ்திரம் வேறு உண்டு கிடா விருந்து வைத்து மிச்சம் இருந்தால் அதை வீட்டற்கு எடுத்துச் செல்ல கூடாது. அதனால் ஒவ்வொருவரும் குறைந்தது கால் கிலோ கறியாவது சாப்பிட்டு விடுவார்கள்.ஒவ்வொரு கிடாவும் குறைந்தது பதினைந்து முதல் இருபது கிலோ இருக்கும்.அழைக்கப்பட்டிருக்கும் விருந்தாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பூசாரிக்கும் அந்த கோவிலை சுற்றி உள்ள மக்களுக்கும் அன்று திருவிழா தான்.மீதமுள்ளதை அவர்களிடமே கொடுத்து விட்டு பாத்திரங்களை நன்றாக கழுவி வந்த லாரியில் ஏற்றி விடுவார்கள். விருந்து முடிய எப்படியும் மாலை நேரம் ஆகிவிடும்.அதற்குள் குழந்தைகள் எல்லாம் விளையாடி அசந்து தூங்கிப்போயிருக்கும்.அவர்களை எல்லாம் எழுப்பி தயார் செய்வதே பெரிய வேலை வீட்டில் உள்ளவர்களுக்கு. இந்த மாதிரியான விஷேசங்களுக்கு குழந்தைகளுக்கு நிறைய அணிகலன்களை அனுவிக்கும் பழக்கம் வேறு உண்டு.சில சமயம் கவன குறைவு காரணமாக குழந்தைகள் அதனை தொலைத்து விடும் சம்பவங்களும் நிறைய உண்டு. இப்பொழுது உள்ள தலைமுறையினர்க்கு சொந்த பந்தங்களின் பாசங்களைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாதிரியான தருணங்கள் தான் ஒவ்வொருவரையும் இணைக்கும் விழாவாக நான் கருதுகின்றேன்.
Labels:
அனுபவங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment