Tuesday, April 27, 2010

அட அப்படியா!!!!

Public house என்ற வார்த்தை தான் சுருங்கி Pub-ஆகிப் போனதாம். அங்கு டான்ஸ் ஃப்ளோரில் நடனமாட சத்தமாய் பாட்டு போடும் நண்பரை DJ அல்லது Deejay என்போம். இவ்வார்த்தை Disc Jockey என்பதின் சுருக்கமாம். அங்கே நீங்கள் Naked-ஆய் (means unprotected) போகலாம் ஆனால் Nude-டாய் அல்ல (means unclothed). மீறிப்போனால் காவல் துறையினர் அதாவது Cop வருவார்கள். உண்மையில் அவ்வார்த்தை Constable on Patrol-லின் சுருக்கமாம்.இது எப்படி இருக்கு.

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில விநாடிகள்

தும்மும் போது 'நன்றாய் இரு", "இறைவனுக்கு நன்றி" அல்லது அம்மா, அப்பா என்று ஏதாவது சொல்லக் கேட்டிருப்போம்.தும்மும் போது இதயம் ஒரு"மில்லி செகண்ட்" நிற்குதாம். மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.

நாம் பற்பசையை அளவோடு உபயோகிக்க வேண்டும். ஒரு வருடம் முழுவதும் 565 கிராம் பசையைத்தான் தேய்க்கலாம் என்று பல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் ஒரு மாதத்திற்கு 50 கிராம் பற்பசை போதுமானது.

Saturday, April 17, 2010

வாழ்க்கை

இது எனது ஐம்பதாவது பதிவு. ஒரு பொழுதுபோக்கிற்காக பதிவு எழுதுவதை ஆரம்பித்தேன் ஆனால் அதுவே என்னை ஐம்பது பதிவுகள் வரை எழுத என்னை தூண்டியது. இதுவரை ஆதரவு தந்த இனிமேல் ஆதரவு தரப்போகும் நல்ல உள்ளங்களுக்கு இந்த பதிவின் மூலம் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏதாவது சிறப்பாக எழுத வேண்டும் என்று எண்ணி என்ன எழுதலாம் என்று யோசித்த பிறகு எழுத முற்ப்பட்டதே இந்த வாழ்க்கை.

நமது வாழ்க்கையை நமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டிருப்பதாக ஓர் எண்ணத்தில் நாம் இந்த உலகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் சிறு வயது முதல் நமது எதிர்காலத்தைப் பற்றி ஓர் திட்டத்தை சிறிய அளவிலாது தயாரித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமது வாழ்க்கையை எவ்வாறு வாழப்போகிறோம், நமது மனைவி அல்லது கணவன் எப்படி இருக்க வேண்டும், இல்லற வாழ்விலே கணவன் அல்லது மனைவியிடம் எப்படி பழகபோகிறோம் என்பது பற்றி ஓர் அனுமானம் கொண்டிருப்போம்.இது நமது அகப்புற சூழ்நிலைகளால் உண்டாகும். அதாவது நமது தாய் தந்தயருக்கிடையில் இருக்கும் உறவுமுறையன்றி,நாம் அடிக்கடி நெருங்கிப் பழகும் உறவினர்கள் மத்தியில் நிலவும் உறவுமுறைகளின் தாக்கங்களினால் நமது மனதில் ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும்.

நம்மில் எத்தனை பேர் நாம் நினைத்தபடியே நமது வாழ்க்கையை அமைக்கிறோம் என்று எண்ணிப்பார்த்தால் மிகவும் சொற்பமானவர்களே என்று கூறலாம்.இதன் காரணம் நமது வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதே. நமது சூழ்நிலை, நமது மனப்பான்மை, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உறவுமுறையின் தாக்கம் நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து விடுகிறது என்பதே உண்மை.

இதை ஏற்றுக்கொள்ள நம்மில் பலர் மறுத்தாலும் இது ஒரு எதார்த்தமான உண்மை நிலையாகும். இந்த நிலையில் நாம் எப்படி அமைதி அடைவோம்? ஆற்று வெள்ளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஒருவன் அதைக் கடப்பது என்பது அவனைப் பொறுத்தே உள்ளது. வெள்ளம் ஓடும் திசைக்கு எதிராக கடக்க முற்ப்பட்டால் அவனது பயணம் கடினமாகிறது. அதேசமயம் அவன் அந்த ஆற்றை வெள்ளத்தின் திசையிலேயே சென்று கடக்க முற்ப்பட்டால் மிகவும் எளிதாக கடந்து விட முடியும்.சேர எண்ணிய இடத்தைவிட சில அடி கடந்து மறுகரையை அடைந்தாலும் பயணம் இலகுவாகிறது. இதைப்போலவே சிலசமயங்களில் வாழ்வில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை எதிர்ப்பதைவிட அதன் பாதையில் சென்று இலக்கை அடைவது என்பது சிரமத்தைக் குறைக்கும்.

நமது கையில் ஒன்றும் இல்லை. ஆனால் கடவுள் போட்ட விதி என்று எண்ணி நாம் வாழ்க்கை எனும் வண்டியில் பயணம் செய்யும் பொது நம்பிக்கை என்னும் எரிசக்தியை உபயோகித்தால் நம் பயணம் எளிதாகும்.

Saturday, April 10, 2010

விநாயகர் சில விபரங்கள்

தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?
அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார். அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும் துவங்கியது.தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?
மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.அருகம்புல் மாலை ஏன்?
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

Tuesday, April 6, 2010

இங்கிதம்

மனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார் உறவினரிடமும், உற்ற நண்பர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக முக்கியமானது 'இங்கிதம்'.

நமது பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால், நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். கிடைத்த நட்பு நிலைத்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும். உறவுகள் பலப்படும். உயர் அதிகாரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத 'ராசிபலன்' வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவித்த உண்மைகள்.

அலுவலகம் ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயிலில், 'உத்திரவின்றி உள்ளே வரக் கூடாது' என எழுதி வைக்கப் பட்டிருந்தது. அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும் படியும், அதற்குப் பதிலாக 'உத்திரவு பெற்று உள்ளே வரவும்' என எழுதி வைக்கும் படியும் கேட்டுக் கொண்டார். இரு வாசகங்களின் கருத்தும் ஒன்று தான். முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இரண்டாம் வாசகத்தின் நேர்மறை அணுகுமுறை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே!.

தம் வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு படுத்தியும் வைத்திருப்பதைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக் குழந்தைகள் உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கும். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன் அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு தர்ம சங்கடத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த வீட்டுக்குச் சென்றாலும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும் ஓர் இங்கிதம்.

விருந்தினராக அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பின் நம்மால் இயன்ற அன்பளிப்புப் பொருட்களை, குறிப்பாக இனிப்புப் பண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள்.

பிரபலப் பேச்சாளர் வரும் வரை சிறிது நேரம் பொது மேடைகளில் பேச வாய்ப்பு கிடைத்தால், சுருக்கமாகப் பேச வேண்டும். எவ்வளவு தான் நாம் அருமையாகப் பேசினாலும் பிரபலப் பேச்சாளரின் உரைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நமது பேச்சு 'அறுவையாக'த் தான் தெரியும். இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேசமாட்டாரா? என மற்றவர்கள் எதிர்பார்க்கும் போது நம் உரையை முடித்துக் கொள்ள வேண்டும்.

இங்கிதத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இதுவும் ஓர் இங்கிதமே!