மனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார் உறவினரிடமும், உற்ற நண்பர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக முக்கியமானது 'இங்கிதம்'.
நமது பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால், நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். கிடைத்த நட்பு நிலைத்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும். உறவுகள் பலப்படும். உயர் அதிகாரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத 'ராசிபலன்' வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவித்த உண்மைகள்.
அலுவலகம் ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயிலில், 'உத்திரவின்றி உள்ளே வரக் கூடாது' என எழுதி வைக்கப் பட்டிருந்தது. அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும் படியும், அதற்குப் பதிலாக 'உத்திரவு பெற்று உள்ளே வரவும்' என எழுதி வைக்கும் படியும் கேட்டுக் கொண்டார். இரு வாசகங்களின் கருத்தும் ஒன்று தான். முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இரண்டாம் வாசகத்தின் நேர்மறை அணுகுமுறை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே!.
தம் வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு படுத்தியும் வைத்திருப்பதைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக் குழந்தைகள் உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கும். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன் அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு தர்ம சங்கடத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த வீட்டுக்குச் சென்றாலும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும் ஓர் இங்கிதம்.
விருந்தினராக அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பின் நம்மால் இயன்ற அன்பளிப்புப் பொருட்களை, குறிப்பாக இனிப்புப் பண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள்.
பிரபலப் பேச்சாளர் வரும் வரை சிறிது நேரம் பொது மேடைகளில் பேச வாய்ப்பு கிடைத்தால், சுருக்கமாகப் பேச வேண்டும். எவ்வளவு தான் நாம் அருமையாகப் பேசினாலும் பிரபலப் பேச்சாளரின் உரைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நமது பேச்சு 'அறுவையாக'த் தான் தெரியும். இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேசமாட்டாரா? என மற்றவர்கள் எதிர்பார்க்கும் போது நம் உரையை முடித்துக் கொள்ள வேண்டும்.
இங்கிதத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இதுவும் ஓர் இங்கிதமே!
1 comment:
அழகாக சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Santhosh
Post a Comment