Thursday, May 13, 2010

தங்க நாற்கர சாலை










இந்த தங்க நாற்கர சாலை திட்டத்தைப் பற்றி நாம் அனைவருமே நன்கு அறிவோம். இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவுவதில் இந்த திட்டத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இந்த திட்டத்தின் மூலம் பயனடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் முதல் பயண நேரம் வரை மிச்சமோ மிச்சம்.... அதுவும் லாரி ஓட்டுனர்களுக்காக கட்டி வைத்துள்ள தங்குமிடம் மற்றும் கழிப்பிட வசதிகள் அருமையோ...அருமை...
அது மட்டுமல்லாது தமிழகத்தின் கடை கோடியிலிருந்து கோட்டை வரை வரவேண்டுமானால் எத்தனை எத்தனை கஷ்டங்கள். கஷ்டங்கள் அல்லாது வரும் வழியில் தான் எத்தனை விபத்துகள், உயிரிழப்புகள்..... அதுவும் இந்த திருச்சியிலிருந்து செங்கல்பட்டு வரும் வரை நமக்கெல்லாம் உயிர் போய் உயிர் வந்துவிடும். முன்பெல்லாம் செங்கல்பட்டிலிருந்து தான் இந்த நாற்கர சாலையே ஆரம்பம் ஆகும்.

ஆனால் இப்போது நாட்டில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்த போது திட்டமிட்டார். இதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. தங்கநாற்கர சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்கள் துவக்கப்பட்டன. அடுத்து வந்த அரசும் இத்திட்டத்தை செவ்வனே செய்து முடித்ததால், நாட்டில் உள்ள பல்வேறு சாலைகள் நான்கு வழி போக்குவரத்து கொண்டவையாக மாறியுள்ளன. நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்பான பயணத்திற்கும் இந்த நான்கு வழிச் சாலைகள் உதவுகின்றன.

இந்தியா முழுவதும் தங்க நாற்கர சாலை பணியை பொறுத்தவரை 5,846 கிலோ மீட்டரில் 181கிலோ மீட்டர் தவிர மற்ற பணிகள் அனை‌த்து‌ம் 97 விழு‌க்காடு வரை‌ முடி‌ந்து விட்டன. இந்தியா முழுவதும் 5,000 கிலோ மீட்டர் நீள சாலைகள் இரு வழிச் சாலைகளாக மாற்றப்பட இரு‌க்‌‌கிறது. இந்த திட்டத்தின் கீழ் த‌‌மிழக‌த்தில் 1,250 கி.மீ. நீள சாலை இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் மக்களுக்காக பயன் பட கூடிய நல்ல திட்டங்கள் தான். ஆனால் இந்த சுங்க சாவடிகள் தான் பர்சை கடிக்கிறது. சுங்கவரி மிக அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இருப்பினும், அதிகமான முதலீடு செய்துள்ள சாலைகளில் சுங்க வரி கட்டணம் குறைந்ததாக தெரியவில்லை. சென்னையில் இருந்து திருச்சி வரையில் செல்லும் ஒரு கார், செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் துவங்கி, திருச்சி வரையில் உள்ள பல சுங்கவரி பிளாசாக்களில் குறைந்தது 200 ரூபாய் வரை சுங்க வரியாக செலுத்த வேண்டியுள்ளது. "இந்த கட்டண விகிதம் அதிகம். குறைந்த தூரம் செல்வோருக்கு தற்போதைய கட்டணம் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், 400 முதல் 500 கி.மீ., தொலைவு வரை தொடர்ந்து செல்லும் வாகனங்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மனித உயிர்களை விட இவை எல்லாம் சொற்பமே........

No comments:

Post a Comment