Wednesday, May 30, 2012

இந்தியாவில் சரக்கு தோன்றிய வரலாறு




வாஸ்கோடகாமா, 1498 மே மாதம் கள்ளிக்கோட்டை மன்னர் சமோரினை சந்தித்தபோது, போர்ச்சுக்கீசிய மதுச்சந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட்டார். காரணம், அப்போது இந்தியாவில் குடிப்பழக்கம் மிக, மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, மொகலாய மன்னர்கள் உண்மையான முசல்மான்களாக இருந்து, மதுவை 'ஹராம்’ செய்து இருந்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னர் ஜஹாங்கீர் ஆட்சியில்தான் போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு நாட்டு மதுபானச் சந்தைக்கு இந்தியாவின் கதவுகள் அகலத் திறந்தன. மன்னர் ஜஹாங்கீர் விதவிதமான மது பானங்களைச் சுவைப்பதிலும் மது சுவைப்பவர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். ஆட்சியை வழிநடத்தும் ஒரு மன்னரால் அப்போது தொடங்கி சந்தைப்படுத்தப்பட்ட மது கலாசாரம், இன்று தமிழகத்தில் அரசே மதுபானங்களை கூவிக்கூவி விற்கும் நிலைக்குக் கொண்டுவந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது. 'குடி உயர கோன் உயரும்’ என்ற அவ்வை வாக்கை தப்பாய் புரிந்துகொண்டால் இப்படித்தான்!


இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். மதுவால் ஏற்படும் சமூகப் பிரச்னையால் இந்தியா மிகப்பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. அணு, மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக. வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்பதுதான் அரசாங்கத்தின் குறைந்தபட்ச இலக்கு. வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்றுஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கோடிகளில் டார்கெட் நிர்ணயித்துக் காத்து இருக்கிறார்கள்.


கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மதுக் கடைகள், மதுக் கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை சராசரியாக ஆறு முதல் எட்டு சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 1952-ம் ஆண்டில், மது அருந்தத் தொடங்கும் இந்தியரின் சராசரி வயது 19. இன்று அது 13. பன்னாட்டு மது நிறுவனங்களின் மிகப்பெரிய 'ஹப்’பாக மாறிவிட்டது இந்தியா. மாறாக, மேற்கத்திய நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருகிறது - பிரபல இன்டர்நேஷனல் மருத்துவ பத்திரிகையான லேண்ட்செட் சமீபத்தில் வெளியிட்ட தகவல் இது!


தமிழகத்திலோ, நிலைமை மிக மிக மிக மோசம். ஏழு கோடி மக்களில் சுமார் ஒரு கோடிப் பேர் குடிக்​கிறார்கள். சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கும் மது அடிமைகள். இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம்.


ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக் கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய் - ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்ஸின் ஷாம்பெயின் திராட்சையிலும், கோவாவின் பென்னி முந்திரியில் இருந்தும் தயாராகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்திலும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட்களில் இருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே!


இன்றும் நம் சகோதரர்கள் ஓட்டையும், வீட்டையும் ஒரு சரக்கு பாட்டிலுக்காக விற்கின்ற அவலங்களை அன்றாடம் தினசரியில் படித்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது மாணவர்களின் சந்திப்பே பிரபலமான பார்களில் தான். உன் நண்பனை பற்றி சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்ற பழமொழிக்கே வேலை இல்லாமல் போய்விட்டது இந்த டாஸ்மாக் வந்ததில் இருந்து...அப்துல் கலாமின் 20 - 20 கனவு டாஸ்மாக் பாரில் தான் நனவாகிக் கொண்டிருக்கிறது இன்றைய இளைங்கர்களால்.

அதுசரி, 'தினைக் கள் உண்ட தெளிதோல் மறவர்’ வழி....

1 comment:

dfgtrdefg said...

நண்பரே உங்கள் தளம் கல்வி தொடர்புடையது. அதனால் நீங்கள் உங்கள் தளத்தில் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடலாமே!

தேர்வு முடிவுகள் வெளியிட லிங்க் http://www.muruganandam.in/2012/05/tamilnadu-10th-results-2012-10th.html

Post a Comment