Sunday, December 13, 2009

கடவுளைத் தேடி

ஒரு ஊரில் சிலர் கடவுளைத் தேடிப் புறப்பட்டார்கள். அந்த ஊர் மக்களும் அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.வெளியூர் சென்றிருந்த அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர், ஊர் திரும்பினார். சிலர் கடவுளைத் தேடிச் சென்றிருப்பதை அறிந்தார்.கழுதையில் அமர்ந்த அவர் அவர்கள் சென்ற திசையை நோக்கி வேகமாகச் சென்றார்.சில மணி நேரத்தில் அவர்களைப் பிடித்தார்.கழுதையிலிருந்து இறங்கிய அவர், "கடவுளைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்" என்று வாழ்த்தினார்.மீண்டும் கழுதையில் ஏறி அமர்ந்தார். அவர்கள் செல்லும் வழியிலேயே கழுதையை ஓட்டத் துவங்கினார்.அவர் ஊர் திரும்பாமல் தங்களுக்கு முன்னால் செல்வதைக் கண்ட அவர்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.அவர்களில் ஒருவர், "பெரரியவரே! ஊர் திரும்பாமல் எங்களுக்கு முன்னால் செல்கிறீரே?" என்று கேட்டார்."என் கழுதையைத் தேடி வந்தேன். வழியில் உங்களைப் பார்த்து வாழ்த்தினேன். மீண்டும் கழுதையைத் தேடிப் புறப்பட்டு விட்டேன். கழுதையைக் கண்டுபிடித்த பின்பே ஊர் திரும்புவேன். கழுதை கிடைக்காமல் ஊர் திரும்ப மாட்டேன்" என்றார்.இதைக் கேட்ட அவர்கள் "கழுதை மீது அமர்ந்தபடியே கழுதையைத் தேடுகிறாரே. இவரைப் போல் முட்டாள் யார் இருக்க முடியும்." என்று எண்ணிச் சிரித்தார்கள்."ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அவர்."கழுதையின் மீது அமர்ந்து இருக்கிறீர்கள். உம் கண் அருகிலேயே கழுதை இருக்கிறது. கழுதையைத் தேடிப் போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது"" என்றான் அவர்களில் ஒருவன்."நீங்கள் கடவுளத் தேடிச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் கடவுளைத் தேடி அலைகிறீர்கள். நான் உங்களைப் பார்த்துச் சிரித்தேனா" என்று பதில் கேள்வி கேட்டார்.அவர்களுக்கு உண்மை புரிந்தது. அவருடன் சேர்ந்து ஊர் திரும்பினார்கள்.

1 comment:

Anonymous said...

ரொம்ப அருமை
அகம் பிரம்மாஸ்மி என்பதும்
தத்வமசி என்று சொல்லுவதும்
கடவும் நம்முள்ளே இருக்கிறார்
அதை நாம் நம் வாழ்நாளில்
உணர்ந்து அறிவதே வாழ்வின்
நோக்கமாகும்

Post a Comment