Thursday, May 6, 2010

வாழ்க்கைக்கு பணம் மட்டுமே குறிக்கோளா???

இன்று செல்வந்தர்கள் முதல் பிச்சைக்காரர்கள் வரை பணம் ஒன்றே குறிக்கோளாகிவிட்டது. அன்றே ஒரு கவிஞன் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று பாடி வைத்துப் போய் விட்டான்.


ஏழைக்குப் பணம் மகிழ்ச்சிதான். அதில் சந்தேகமில்லை. தன்னிறைவுக்கு மேலே அதிகப் பணவரவு மகிழ்ச்சியா? என்பதுதான் இங்கே கேள்வி.
உடனே தன்னிறைவுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கணம் வைத்துக் கொண்டு, எனக்குப் பத்து காரும், பத்து பங்களாவும் வந்தால்தான் தன்னிறைவு எனக் கொள்ளக்கூடாது. ஒருவர் உயிர் வாழக் குறைந்தபட்ச தேவைகள், அடிப்படை வசதிகள் இவற்றைத் தன்னிறைவு எனக்கொள்ளலாம்.


அடிப்படை வசதிகளைப் பெற பணம் முக்கியம்தான். ஆனால் அதுவே வாழ்க்கையாகி விடாது. ஒருவருக்குப் பணம் வந்தவுடனேயே பாதுகாக்க வேண்டிய அவசியமும் வந்து விடுகிறது. அதனால் பல சமயங்களில் நிம்மதி போகிறது. இப்படி தான் நம் வாழ்க்கை பயணமும் போகின்றது. நாம் நம் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளைக் கணக்கிடுவதாக வைத்துக் கொள்வோம். எதையெல்லாம் கணக்கிடுவோம்? கார், பங்களா, வீடு, நிலம், தோட்டம், நகைகள், வங்கியில் சேமிப்பு எவ்வளவு? இப்படித்தானே? பதிலாக நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள், நண்பர்கள், செய்துள்ள தர்ம காரியங்கள், பொதுநலப் பணிகள் என்னென்ன என்று கணக்கு எடுத்திருப்போமா?


நாம் எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பாய்ச்சல் குறையும், மகிழ்ச்சிக்கான மற்ற தேடல்களில் மனத்தைச் செலுத்த முடியும். தேடும் போதே அனுபவிப்பதும், அனுபவிக்கும் போதே தேடுவதும் வாழ்க்கையில் சாத்தியப் படுத்திக் கொள்ள முடியுமா? வாழ்க்கையை அனுபவித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.


நிகழ்காலத்தை நினைத்து வாழ சொல்கிறார்கள் உளவியலாளர்கள். ஆனால் நாம் அவ்வாறு வாழ்வது கிடையாது. பெரும்பாலும் இறந்த காலத்தைப் பற்றிய கவலையில் மூழ்கியிருப்போம். அல்லது வருங்காலத்தைப் பற்றிப் பயந்து கொண்டு இருப்போம். அல்லது இரண்டுமற்ற ஒரு சூழலில் சிக்கியிருப்போம்.

பணம் என்ற உப்புத் தண்ணியைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும். தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சி தரும் விசயங்களான உறவுகள், நண்பர்கள், கலை, பொதுப்பணி, சமூகச்சிந்தனை, புத்தகம், இலக்கியம், மொழி, கலாச்சாரம், இசை இவற்றோடு நம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழக வேண்டும். அதற்காக பொருள் தேடலை முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல கருத்து. முக்கிய நோக்கம் அதுவாக இருப்பதுதான் தவறு.


ஓட்டத்தை நிறுத்தாமல் சீராக ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். அந்த ஓட்டம்தான் உழைப்பு. உழைப்பின் பயன் பணம் மட்டும் இல்லை. உடல் ஆரோக்கியமும்தான். உடல் ஆரோக்கியத்திற்கு மன ஆரோக்கியமும் முக்கியம்தானே? மன ஆரோக்கியத்துக்குத்தான் மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்.


புதையல்களை தேடும் இந்த உலகத்தில் இதயங்கள் முற்றிலும் தொலைந்து போனதுதான் நிசப்தமான உண்மை.

3 comments:

ப.கந்தசாமி said...

வாழ்க்கைக்கு உதவும் நல்ல சிந்தனை.

V.S.SUNIL KUMAR PILLAI said...

நல்லா பதிவு அருமையான கருத்துக்கள்.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//தன்னிறைவுக்கு மேலே அதிகப் பணவரவு மகிழ்ச்சியா?//
இங்கே தன்னிறைவு என்பது என்ன என்பதில்தான் பிரச்சனையே. (சைக்கிள் இருக்கும்போது மோட்டர் சைக்கிள் தன்னிறைவு போல்தோன்றும். ஆனால் மோட்டர் சைக்கிள் வந்தபின் மழைகாலத்தில் சிரமாமாக இருப்பது புரிந்தவுடன் கார் என்பது முக்கியம் என தெரிந்தாலும், சில நாளில் Altoவைவிட Santroநல்லாயிருக்கு எனத்தோன்றும். மாற்றம்.. நாமும் ஓடிக்கொண்டே மாறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்... என்ன செய்ய..

Post a Comment