Monday, May 10, 2010

கொட்டாவி!!!

வழக்கமாக அப்பாவின் இம்சை தாங்கமுடியாமல் கடனே என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாவனை செய்யும்போது, சாப்பாட்டிற்குப் பிறகு, மதியம் முதல் வகுப்பில் ஆசிரியரின் பாடம் சுகமான தாலாட்டாகக் காதில் விழும்போது கொட்டாவி வருவது இயற்கை.இந்த பாழாய் போன கொட்டாவியால் தான் எவ்வளவு அடி உதைகள் வகுப்பறையில்!!!!! இன்று அதைப் பற்றி நினைக்கும் போதும்,எழுதும் போதுமே கொட்டாவி வந்து விடுகிறது எனக்கு. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு கொட்டாவி விட்டால் நம்மை அறியாமல் அது தொற்றிக்கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? கொஞ்சம் கொட்டாவி விடாமல் படியுங்களேன்!

கொட்டாவி என்பது ஒரு அனிச்சைச் செயல். கொட்டாவி விடும்போது நாம் வாயை அகலத் திறந்து ஆறு விநாடிகளுக்கு எவ்வளவு காற்றை உள்ளே இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்துக் கொள்கிறோம். அதெப்படிக் கொட்டாவியை அனிச்சைச் செயல் என்று சொல்ல முடியும் என்று கேட்கலாம். கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறது என்று ஆராய்ச்சி சொல்கிறதே! நீங்கள் கொட்டாவி விடும்போது உங்கள் உடல் ஓய்வு நிலையிலோ, பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை. முதலில் உங்கள் வாய் அகலத் திறந்து தாடை கீழே செல்கிறது. அதனால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியுமோ அவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடிகிறது. கொட்டாவி விடும்போது உங்கள் இதயத்துடிப்பு 30சதவிகிதம் வரை அதிகமாகலாம்.

உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை. நமது உடலே இயற்கையாக, அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி விடச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சில ஆராய்ச்சியாளர்கள் கொட்டாவி என்பது நமது மூதாதையர்கள் வாயைத் திறந்து, பற்களை வெளிக்காட்டி மற்றவர்களை பயமுறுத்துவதற்காகக் கையாண்ட ஆயுதம் என்றும், சிலர் குட்டிபோட்டுப் பாலூட்டும் இனத்தைச் சார்ந்த பூனை, நாய், மீன்கள் போன்று அனைத்துமே கொட்டாவி விடுவதால் இது ஒரு அனிச்சைச் செயல் என்றும் சொல்கிறார்கள். இன்னுமொரு ஆராய்ச்சி கொட்டாவி நமது நுரையீரலிலுள்ள எண்ணை போன்ற பொருளை உறைந்துவிடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம்.

எப்படியோ, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தக் கொட்டாவிப் பழக்கம் இருந்து வந்தாலும் இன்னும் ஏன் இந்தக் கொட்டாவி வருகிறது என்ற ஆராய்ச்சி மட்டும் முடிவடையவில்லை.... இதை எழுதி முடிப்பதற்குள் நான் ஒரு பத்து கொட்டவியாவது விட்டிருப்பேன். எழுதிய எனக்கே பத்து என்றால்.... இதை வாசிக்கப் போகும் உங்களுக்கு எவ்வளவோ?????

3 comments:

Anonymous said...

அன்புள்ள வெங்கடேஷ்
உண்மையில் இது படிக்க ஆர்வமாக தான் இருக்கிறது .
எனக்கே கொட்டாவி வரவில்லை என்றால் பார்த்துக்கோங்களேன்

சந்தோஷ்

Venkatesh said...

தங்கள் வருகைக்கும் பின்னுட்டதிற்க்கும் நன்றி.....

பின்னோக்கி said...

படிச்சதும் உண்மையாலுமே கொட்டாவி வந்துச்சு. நிறைய தகவல்கள். மூதாதையார் விஷயம் புதுசு. நன்றி.

Post a Comment