எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.
1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் 135. இவற்றுள் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை 115.
எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.
எம்.ஜி.ஆர். ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கலைஞர் கருணாநிதியுடன் கொண்ட நட்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
தொடரும்.......
1 comment:
எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் எம்.///
என்ன கொடுமை
Post a Comment