Sunday, June 13, 2010

எம்.ஜி.ஆர் 6




1972 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 - ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் த்த்தமது சொத்துக்கணக்குகளைஞ்ச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பப்பனியாய் இருக்கும்.

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் கலைங்கருக்குக் கட்டுபட்டவர்கள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 - ஆம் ஆண்டு அக்டோபர் 10 - ம் நாளாகும்.

தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.
தொடரும்....

No comments:

Post a Comment