Sunday, June 20, 2010

எம்.ஜி.ஆர் 7






முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 - இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத்த் தலைவராக உயர்ந்தார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்குப் பெருகியது. ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.

இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு வேதனை அளப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். இரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன.கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்கள் புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நடவடிக்கைகள் புரட்சித் தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.

இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருணாநிதி அறிவித்தார்.

மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது. இதுவே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்க வித்தாக அமைந்தது.



தொடரும்....

No comments:

Post a Comment