Wednesday, July 7, 2010

எம்.ஜி.ஆர் 8


புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.

சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

முதன்மதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;

அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.

சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது;
கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.

நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.


தொடரும்....

No comments:

Post a Comment