நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.
அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.
மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சித்தலைவர்.
உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள்.
காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.
காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர் ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.
காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.
இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேளவியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயந்தான்.
மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்.
தொடரும்....
No comments:
Post a Comment