Wednesday, December 1, 2010

எம்.ஜி.ஆர் 14



அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.

புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த புரட்சித் தலைவர், அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் ‘தென்னகம்’ நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார். தங்கள் புரட்சிநாயகன் புதியகட்சியைத் தொடங்கிவிட்டார்; அக்கட்சிக்கு அறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டிவிட்டார் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் அகமகிழ்ந்தனர்; ஆனந்தக் கூத்தாடினர். உடனடியாகத் தமிழகம் முழுவதிலும் அண்ணா தி.மு.க. கிளைகள் உருவாக்கப்பட்டன. கட்சிக் கொடிகள் அவசர அவசரமாய் உருவாக்கப்பட்டு ஏற்றப்பட்டன.

தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழர்கள் வாழும் பெங்களூர், பம்பாய் முதலிய நகரங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கிளைகள் உருவாக்கப்பட்டன. அதுவரை தி.மு.க. என்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்த கழகத்தை அதன்பின்னர் புரட்சித்தலைவர் ‘கருணாநிதி கட்சி’ என்றுதான் வழங்கினார்.

கருணாநிதி கட்சியிலிருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர். புரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம் ஒன்றாய் இருந்தது. அடுத்த சில நாள்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.

அப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார், புரட்சித்தலைவர். பின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.



புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் எனப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. ‘மக்கள் திலகம்’ என்று அவரை முதன்முதலில் வழங்கியவர் ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன் ஆவார். ‘புரட்சி நடிகர்’ என்று அவரை விளித்தவர், கலைஞர் கருணாநிதி ஆவார். ‘பொன்மனச் செம்மல் என்று வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் ஆவார்.! ஆனால் புரட்சி நடிகராய் விளங்கிய எம்.ஜி.ஆரை முதன் முதலில் புரட்சித்தலைவர்’ என்று வழங்கியவர் ‘தென்னகம்’ ஆசிரியரும், அ.தி.மு.க.வின் முதல் அமைப்புச்செயலாளரும், பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினருமான கே.ஏ.கிருஷ்ணசாமி ஆவார்.

அ.தி.மு.க.வின் சார்பில், 1972 ஆம் ஆண்டு, நவம்பர் 3 ஆம் தேதியன்று, சென்னை கடற்கரை சீரணி அரங்கில் ஒரு பிருமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய கே.ஏ.கே. ”இதுவரை நம் தலைவரை நாம் அனைவரும் புரட்சி நடிகர் என்றே வழங்கினோம். இனிமேல் அவர் புரட்சி நடிகர் அல்லர். புரட்சித் தலைவர்! ஊழலை ஒழித்துக்கட்டும் தர்மயுத்தத்தின் தானைத் தலைவர்! இனி மேல் நாம் அனைவரும் அவரைப் புரட்சித் தலைவர் என்றே வழங்க வேண்டும்!” என்று கூறினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம் ”புரட்சித் தலைவர் வாழ்க!, புரட்சித் தலைவர் வாழ்க!” என்று விண்ணதிர முழக்கமிட்டது. கடல் அலைகளின் ஓசை சில நிமிடங்கள் அமுங்கிவிட்டது போன்ற நிலை அங்கே தோன்றியது. புரட்சி நடிகராய் இருந்த மக்கள் திலகம், பொன்மனச்செம்மலாகிப் புரட்சித் தலைவராய் மாறிய வரலாறு இதுதான்!



தொடரும்...

No comments:

Post a Comment