Monday, December 6, 2010

எம்.ஜி.ஆர் 17



அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியிடப்படவேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.

அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள் அந்த விநியோகஸ்தர்கள் அவர்கள் அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்க மறுத்துவிட்டனர்.

படவிநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், இலட்சம் இலட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக்க முடியாது எனத் திரையரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!

பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.

”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!

திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல இலட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள். பின் வாங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்களுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார். தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார். அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!




தொடரும்...

No comments:

Post a Comment