Thursday, December 2, 2010

எம்.ஜி.ஆர் 15புரட்சித் தலைவர் திரைப்படங்களில் வீராவேசத்தோடு சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார்; இருபது முப்பது பேரோடு ஏக காலத்தில் மோதி அவர்களைப் பந்தாடியிருக்கிறார். இக் காட்சிகளை அவர் நடித்த திரைப்படங்க்ளில் பார்த்திருக்கலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சிக் கொண்ட மாற்றுக்கட்சியினர் அவரை ‘அட்டைக்கத்தி’ வீரர், என்றும், பெரும்பாலான காட்சிகளில் தமக்குப் பதிலாகப் பிறரை நடிக்கச் செய்து, தாம் நடித்ததாக ஏமாற்றம் ‘டூப்’ சண்டை ஆடுபவர் என்றும் ஏளனம் செய்து கொண்டிருந்தனர்.

புரட்சித் தலைவர் தி.மு.க.விலிருந்து தனிக்கட்சி தொடங்கிய பின்னர் தி.மு.க.வினரும் அதே ஏளனப் பேச்சை மேடைதோறும் கூறிக்கொண்டிருந்தனர். அப்படி ஏளனம் செய்தவர்களெல்லாம் எம்.ஜி.ஆரின் வீரத்தையும், தோள் வலிமையையும் நேருக்கு நேராய்க் காணும் வாய்ப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க காலத்தில் கிட்டியது.

தமிழகம் முழுவதிலும் ஏராளமான தொண்டர்கள் புரட்சித்தலைவரின் இயக்கத்தில் தினசரி சேர்ந்து கொண்டிருந்தனர். சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட, அமைப்பாளர்களும் ஆளுங்கட்சியை விட்டு விலகினர். தாம் வகித்த பதவியின் மூலம் பெறக்கூடிய சலுகைகளையும் இலாபங்களையும் உதறினர்; கடுமையான அடக்கு முறைக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்த அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். அதைக் கண்ட தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்தது. அதனால் நாடு முழுக்க கடும் அடக்குமுறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அண்ணா தி.மு.க. தொண்டர்கள் தாக்கப்பட்டனர். ஏழை எளியவர்கள், கூலி வேலை செய்வோர், ரிக் ஷா, கைவண்டி இழுப்போர், மூட்டைத் தூக்குவோர், விவசாயக் கூலிகள், பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியோர்தாம் அ.தி.மு.க. தொண்டர்களுள் பெரும்பாலானவர்களாய் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் மீது ஒருபுறம், குண்டர்கள் தாக்குதல் தொடுக்கப்பட்டது; மற்றொரு புறம் பொய் வழக்கிட்டு அலைகழிக்கும் தாக்குதல் இடைவிடாமல் தொடுக்கப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டங்களுக்கு போலீஸ் அனுமதி வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டப்பட்டது. பொது அமைதிக்குப் பங்கமும் விளையும் என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது. அனுமதி பெற்று நடக்கும் அ.தி.மு.க. கூட்டங்களில் ஒரு கும்பல் கல் எறிந்து கலவரம் செய்தது; இன்னொரு கும்பல் நாய் நரியைப்போல ஊளையிட்டு இடையூறு விளைவித்தது. அ.தி.மு.க. மேடைப் பேச்சாளர்க்ள் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் தொடரப்பட்டன. புரட்சித் தலைவர் பேசிய பொதுக்கூட்டங்களைக்கூட ஒழுங்காக நடக்க விடாமல் தடுப்பதற்குச் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வளவுக்கும் மத்தியில்தான் புரட்சித்தலைவர் கட்சியைக் கட்டிக்காத்து வளர்க்க நேரிட்டது.


அந்த சமயத்தில் புரட்சித் தலைவர், கடலூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்றிருந்தார். அந்தக் கூட்டம் கடலூர் டவுன் ஹாலில் நடைபெறவிருந்தது. அக்கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் ஒருவர் குண்டர்கள் பலருடன் தடிக்கம்புகளுடனும் வந்து நின்றிருந்தார். புரட்சித் தலைவர் காரில் வந்து இறங்கினார். புள்ளிமானின் மீது பயும் புலியாக, அடியாள்களும் அவர்களைஅழைத்து வந்தவரும் புரட்சித் தலைவர்மீது பாய்ந்தனர். கடலூர் எம்.ஜி.ஆர் மன்றத் தலைவராகப் பணியாற்றியவர், இளைஞர் ஜனார்த்தனம் ஆவார். அவர் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் குறுக்கே புகுந்து புரட்சித் தலைவருக்குக் குறி வைத்து வீசப்பட்ட தடியடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டார். அதனால் புரட்சித்தலைவரின் மேல் ஓரடிகூட விழாமல் தடுக்கப்பட்டன. ஆனால், புரட்சித்தலைவரைத் தாக்க வந்த கொலைவெறியர்கள் வெறி அடங்காமல் மேலும் மேலும் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

அந்த வெறியர்களின் தாக்குதலைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தக் கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்குக் கோபம் எழுந்தது. உடனே அந்தக் கொலை வெறியர்களுக்கு மத்தியில் அவர் புலிபோல் பாய்ந்தார். அப்போது குண்டன் ஒருவன் எம்.ஜி.ஆர். தலையைக் குறி வைத்துக் கழியை ஓங்கினான். உடனே எம்.ஜி.ஆர். கழியை வெறுங்கையாலேயே தடுத்துப் பிடித்து, ஒரு சுழற்றுச் சுற்றிப் பிடுங்கினார். அடுத்த விநாடி அவர் கையிலிருந்த கழி, சக்ராயுதம்போல நாலாபக்கமும் சுழன்றது. தாக்க வந்த தடியர்களோ, மின்னல் வேகத்தில் தங்கள்மீது பாய்ந்த கழியின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல், ”ஐயோ! அம்மா” என்று அலறிக்கொண்டு பின்வாங்கி ஓடினார்கள். இரண்டே நிமிடம்தான் புரட்சித் தலைவர் கழியைச் சுழற்றினார். அவரைச் சூழ்ந்து நின்று தாக்க வந்த கும்பல் முழுவதும் அளறியடித்துக்கொண்டு சிதறி ஓடியது. திரைப்படங்களில் மட்டுமே புரட்சித்தலைவரின் புலிப்பாய்ச்சலையும் கைவண்ணத்தையும் கண்டு களித்திருந்த மக்கள் அன்று நேரிலும் கண்டு களித்தனர்! கடலூர் மக்களுக்குத்தான் அந்தப் பெரும் பேறு முதன் முதலாகக் கிட்டியது!

தாக்க வந்த குண்டர்கள் அனைவரும் கலைந்து ஓடியதும் காவல் துறையின் பெரிய அதிகாரிகளெல்லாம் விரைந்து வந்தனர்! புரட்சித் தலைவரை சூழ்ந்து நின்ற அவர் தொண்டர்களிடமே தங்கள் அதிகார முறுக்கைக் காட்டினர். அதைப்பார்த்து புரட்சித் தலைவரின் முகம் மேலும் சிவந்தது. ”உங்கள் கடமை உணர்வுக்கு மிக்க நன்றி! உங்கள் பாதுகாப்பை நம்பி நான் வெளியே வரவில்லை. தயவு செய்து எங்கள் கட்சிக் காரர்களைத் தொந்தரவு செய்யாமல் தூர விலகிச் செல்லுங்கள்!” என்று அவர் கூறினார். அதற்குப் பின் டவுன்ஹால் கூட்டம் தடையின்றிச் சிறப்பாக நடந்து முடிந்தது!

இது மட்டுமல்ல; 1972 -ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் தி.மு.க. அமைச்சரவை பதவி நீக்கம் செய்யப்பட்ட 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி வரை, சுமார் மூன்றேகாலாண்டுகளிலும் நடந்த எண்ணற்ற சம்பவங்களைப் புரட்சித் தலைவர் சந்திக்க நேர்ந்தது.
தொடரும்...

2 comments:

ராசு மாமா (நண்பேண்டா..) said...

ரைட்டு

KANA VARO said...

தொடருக்கு நன்றி. பலா் வரலாறு அறிய ஆவலாக உள்ளனா்.

Post a Comment