Monday, December 27, 2010

எம்.ஜி.ஆர் 22



தமிழக அமைச்சரவை மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றம் சாட்டி புரட்சித் தலைவரும், எம். கல்யாணசுந்தரமும் நவம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதியிடம் கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியலை, ஜனாதிபதி அவர்கள் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் இந்திரா காந்தி அதைப் படித்துவிட்டு, அதற்கு முதல்வர் கருணாநிதியின் பதிலைக் கோரி, அதன் நகலை முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அதைப்பற்றி முதல்வர் கருணாநிதியிடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, ”பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார். ஆனால், மத்திய அரசுக்கு அந்தப் பதிலையே கூற முடியுமா? அதனால், ஊழல் பட்டியலில் உள்ள ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் மிக விளக்கமான பதில் அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினார், கருணாநிதி. 286 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை 1972- ஆம் ஆண்டு டிசம்பர் 14- ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்திலும் சமர்ப்பித்தார்.

டிசம்பர் 7 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருணாநிதி அமைச்சரவையின் மீது சாட்டப்பட்ட ஊழல் புகார்களைப் பிட்டுப் பிட்டு வைத்தனர். முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு அனுப்பிய பதில் அறிக்கையின் சாராம்சத்தை சபையில் சமர்ப்பித்ததோடு, தம் அமைச்சரவை மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் ஒன்றையும் தாமே முன்மொழிந்து நிறைவேற்றச் செய்தார்.

தமிழக அமைச்சரவை மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரிக்க விசாரணை கமிஷனை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், சட்டமன்றத்தில் முதல்வர் வாதிட்டார். ஆனால் அனைத்து எதிர்கட்சிகளும் விசாரணைக் கமிஷன் அமைத்தே தீரவேண்டுமென்று வலியுறுத்தின. ஆனால், அதை அலட்சியம் செய்வது போலத் தி.மு.க. அரசு ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷனை நியமிக்க ஒரு மசோதா கொண்டு வந்தது.

ஊழல் செய்தவர்களைப் பாதுகாக்கவும், ஊழல் புகார் கூறவோரை அச்சுறுத்தும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவை கொண்டு வந்த தி.மு.க. அரசைப் புரட்சித் தலைவரும், இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் மூதறிஞர் ராஜாஜியும், முன்னாள் முதல்வர் பக்தவத்சலமும் கடுமையாக்க கண்டித்தனர். பத்திரிகைகள் அனைத்தும் இந்த மசோதாவை சூழ்ச்சி வலை’ என்று வருணித்தன. ஆனால், தி.மு.க. அரசு எதைப் பற்றயும் கவலைப்படாமல் முறையற்ற முறையில் மசோதாவை நிறைவேற்றியது.

இந்நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில், 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாங்கம் என்னும் தி.மு.க. எம்.பி. மரணமடைந்தார். அதனால் அங்கே இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.

அப்பொழுது தமிழக அரசியல் களத்தில் அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகச் சேர்ந்திருந்தன. அதற்கு முக்கிய காரணம், 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உதயமாகியிருந்ததுதான். 1971 – இல் தி.மு.க.வோடு அணி சேர்ந்திருந்த கம்யூனிஸ்டு இந்திரா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதை விட்டு விலகின; புரட்சித் தலைவரின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை உற்சாகமாக ஆதரித்தன.




தொடரும்...

No comments:

Post a Comment