Thursday, December 9, 2010

எம்.ஜி.ஆர் 19



1972 – ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 5 – ஆம் தேதியன்று அண்ணா சாலையிலிருந்து பத்து இலட்சம் பேர் கொண்ட பிரும்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது. அதற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி, கிண்டி கவர்னர் மாளிகைக்குச் சென்று அப்போதைய ஆளுநர் கே.கே.ஷாவைச் சந்தித்தார். எம்.ஜி.ஆருடன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் எம். கல்யாண சுந்தரமும் இருந்தார்.

ஆளுநர் கே.கே.ஷோ, புரட்சித் தலைவர் கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியலை பெற்றக்கொண்டார். அவர் அந்தப் புகார்களை முதல்வர் கருணாநிதிக்கே அனுப்பி, அவர் பதிலைப்பெற்று அதற்குப் பின்னரே அதை மத்திய அரசுக்கு அனுப்ப முடியும் என்றும், அதுதான் சட்டப்படியான முறை என்றும் கூறினார்.
ஆளுநரின் அச்சட்ட விளக்கத்தைப் புரட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால், அந்த ஊழல் புகார்ப்பட்டியலை ஆளுநரிடம் கொடுக்காமல் திரும்பினார், புரட்சித் தலைவர். நவம்பர் 6 – ஆம் தேதியன்று அவர் கம்யூனிஸ்டுத் தலைவர் கலியாண சுந்தரம், கே. பாலதண்டாயுதம், கே.ஏ.கே , எஸ்.டி. சோமசுந்தரம் ஆகியோரை அழைத்துக்கொண்டு புதுடெல்லிக்குப் பறந்தார்; அன்றே இந்திய ஜனாதிபதி வி.வி. கிரியைச் சந்தித்து; அந்த ஊழல் புகார்ப்பட்டியலை ஜனாதிபதியிடம் கொடுத்தார். ஒர் அமைச்சரவையின் மீது ஒரே நேரத்தில் இரு ஊழல் புகார்ப்பட்டியல்கள் கொடுக்கப்பட்டது, இந்திய அரசியல் வரலாற்றிலேயே அதுதான் முதல் தடவை ஆகும் எனக் கூறப்பட்டது.

அன்றைய தினம் தலைநகரத்துப் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார், புரட்சித்தலைவர். சர்வதேசத் தலைவர்களையே கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் பத்திரிகையாளர்கள் புரட்சித்தலைவரை மட்டும் விட்டுவிடுவார்களா? எம்.ஜி.ஆரிடமும் பத்திரகையாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் புரட்சித் தலைவர் தயக்கமின்றி நிதானமாயும் ஆணித்தரமாயும் பதிலளித்தார்.

அப்பொழுது ஒரு நிருபர், ”தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டீர்களா?” என்று கேட்டார்.
அதற்குப் புரட்சித் தலைவர், ”நாங்கள் அப்படிக் கோரவில்லை. ஆனால், நாங்கள் கொடுத்த ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தால், தி.மு.க. அமைச்சரவை உடனடியாகத் தானாகவே பதவி விலகுவதுதான் நியாயம். நாகரிகமுள்ள எந்த அரசாங்கமும் அப்படித்தான் செய்யும்!” என்று மிகவும் சாதுரியமாகப் பதிலளித்தார்.

எம்.ஜி.ஆரின் அறிவுக்கூர்மையும், அரசியல் சாதுரியத்தையும் டெல்லிப் பத்திரிகையாளர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். எம்.ஜி.ஆர் அளித்த பட்டியிலிலுள்ள ஊழல்கள் ஒவ்வொன்றுக்கும் கைமாறிய தொகைகள், சம்பந்தப்பட்ட நபர்கள் முதலிய அனைத்தும் ஆதாரப் பூரவமாய்க் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஊழல் பட்டியலைப் படித்துப் பார்த்த ஜனாதிபதி வி.வி.கிரி அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தார். அந்தப் புகார்ப் பட்டியலை முழுமையாக ஆராய்ந்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியும் அளித்தார். இவ்வாறு புரட்சித் தலைவரின் டெல்லிப் பயணம் வெற்றிகரமாய் முடிந்தது.
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும், இந்திரா காங்கிரசும் புரட்சித் தலைவரின் இந்த ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை உற்சாகமாக ஆதரித்தன; துணை நின்றன.

துரதிர்ஷ்டவசமாகப் பெருந்தலைவர் காமராஜர் அப்பொழுது “தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்” என்று கூறினார்.
இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்டுக் கட்சியும் ஆதரிக்கும் எதையும் ஆதரிக்க இயலாத மனநிலையில் அப்பொழுது அவர் இருந்தார். அவர், பிரதமர் இந்திரா காந்தியை எதிர்க்கும் சிண்டிகேட் காங்கிரஸ் என்று வழங்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸின் தலைவராத் தனிமைப்பட்டு நின்றார். அதனால்தான் புரட்சித் தலைவரின் புனிதப் போரையும், அவர் தொடங்கியுள்ள புதிய இயக்கத்தையும் அவரால் அப்பொழுது சரியாகக் கணிக்க இயலவில்லை.

தொடரும்...

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

எம்ஜிஆரை பற்றி எழுதுனா படிக்க இனிமையாக இருக்கிறது...

சூப்பர்...வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

எம்ஜிஆர் ஒரு சரித்திரம் வரலாறு என்ன சொன்னாலும் தகும்...

Post a Comment