Friday, December 10, 2010

எம்.ஜி.ஆர் 20

அப்பொழுது சிதந்திராக் கட்சியின் தலைவராய் இருந்த மூதறிஞர், முன்னாள் கவர்னர் ஜெனரல் இராஜாஜி, புரட்சித் தலைவரின் சக்தியையும், அவரது புனிதப்போரின் அவசியத்தையும் மிகத் துல்லியமாய் எடை இட்டு வரவேற்றுப் பாராட்டினார்.

துரியோதனனும் அவன் சகோதரர்களும் இழைத்த தீமையைவிடக் கருணாநிதியும் அவர் குழுவினரும் தமிழ்நாட்டிற்கு அதிகமான தீமையைச் செய்திருக்கின்றனர். நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றை அவர் ஆட்சியில் காணோம். அதற்கு மாறாக ஊழலும் லஞ்சமும் அநாவசியமான செலவினங்களுந்தாம் எங்கும் எதிலும் காணப்படுகின்றன. அரசாங்க அலுவலகங்கள் கொள்ளையடிக்கும் கூடாரங்களாய் மாறிவிட்டன. காமராஜர் போன்ற தலைவர்கள் இவற்றையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லியும், தி.மு.க.வின் திட்டமிட்ட பிரச்சாரங்கள் அவர் பேச்சுகளை மக்கள் மதிக்காதவாறு செய்துவிட்டன.

இந்த நேரத்தில்தான், பாண்டவருக்கு கிருஷ்ணபரமாத்மா உதவிக்கரம் நீட்டியதுபோல் எம்.ஜி.ஆர். இந்த அசுரர்களை ஒழிக்க முன் வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். எதைச் சொன்னாலும் மக்கள் அதைச் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். எனவே இந்தத் தர்ம யுத்தத்தில் அவர் வெற்றி பெற இருப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! நேற்றுவரை நெருங்கிப் பழகிய பதவியிலிருக்கும் நண்பர்களை எதிர்க்க மிகுந்த மனதிடம் வேண்டும். தீமை செய்யும் நண்பர்களை எதிர்த்துப் போராடும் எம்.ஜி.ஆரையும், அவரது ஆதரவாளர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்! என்று கல்கி, மற்றும் ஸ்வராஜ்யா பத்திரிகைகளில் எழுதியிருந்தார் இராஜாஜி.

திராவிட இயக்கத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவர் கே. ஏ. மதியழகன். அவர் அப்பொழுது (1972) தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருந்தார். “தி.மு.க.வில் கருணாநிதியின் கை ஓங்குவதையும் தி.மு.க ஆட்சியில் தவறுகள் பெருகிக் கொண்டிருப்பதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சபாநாயகர் பதவி வகிக்கும் மதியழகனும் புரட்சித் தலைவரின் இயக்கத்தை ஆதரிக்கத் தொடங்கினால், தம் நிலைமை மிகவும் பலவீனமாகிவிடும் என்று முதல்வர் கருணாநிதி அஞ்சினார். ஆகவே
அவர், தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் எம். பி. யை சபாநாயகர் மதியழகனிடம் அனுப்பி அவரைச் சரிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், எஸ். டி. எஸ். அவர்களையே சரிக்கட்டி புரட்சித்தலைவரோடு சேரும்படி செய்துவிட்டார், மதியழகன். இதை தனதுநூல் ஒன்றில் கருணாநிதி வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், 1974-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியன்று புரட்சித்தலைவரும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களும் இணைந்து ‘ஊழல் ஒழிப்புப் பேரணி’ நடத்தினர்.

அந்த ஊர்வலத்தை சபாநாயகர் மதியழகன் அண்ணாசாலையில் ஓரிடத்திலிருந்து பார்வையிட்டார். அதை அறிந்து பதை பதைப்புற்றார், முதல்வர் கருணாநிதி, நவம்பர் 13 ஆம் தேதியன்று கூட இருக்கும் தமிழக சட்டமன்றத்தில், சபாநாயகர் மதியழகன் எப்படி நடந்து கொள்வாரோ என்று கவலைப் பட்டார். நவம்பர் 13 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடியது.
ஆளுங்கட்சியான தி. மு. கழகம் சபாநாயகர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை 30-10-72 அன்று அளித்திருந்தது. ஆனால், அதைச் சட்டசபைச் செயலாளர் 7-11-72 அன்றுதான் தமக்குத் தெரிவித்தார் என்றும், அது முறைகேடான ஒரு செயல் என்றும், சபாநாயகர் கூறினார். பின்பு எதிர்க்கட்சியினர் அமைச்சரவைமீது நம்பிக்கை இல்லை என்று கூறி, சட்டசபையைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்கு நிற்கத் தயாரா என்று ஆளுங்கட்சி முதல்வருக்குச் சவால் விட்டனர். அச்சவாலை ஏற்கலாம் என்று சபாநாயகரே முதல்வருக்கு யோசனை கூறினார்; அடுத்து அவர் அதைப்பற்றி யோசிக்க அவகாசம் அளித்து, 22 நாட்களுக்குச் சபையை ஒத்திவைத்தார்.

ஆனால், அன்று (13-11-72) மாலையில் தி.மு.க தன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, சபாநாயகரின் மேல் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்னும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஒரு கடிதம் மூலம் ஆளுநருக்குத் தெரிவித்தது. இவ்வாறு சபாநாயகர்மீது நம்பிக்கை இல்லையென்று சபைக்கு வெளியில் கூட்டம் நடத்தி ஆளுநருக்கு மனுக் கொடுத்தது, இந்திய வரலாற்றிலே முதல் முறையாகும்.

தொடரும்...

No comments:

Post a Comment