Saturday, December 11, 2010

எம்.ஜி.ஆர் 21


சட்டமன்றத்தை ஒத்தி வைத்தால் அதனை மீண்டும் கூட்டுகின்ற அதிகாரம் சபாநாயகரிடமே இருக்கும். அம்மரபிற்கு மாறாக, முதல்வர் கருணாநிதியின் ஆலோசனைப்படி 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தை ஆளுநர் கூட்டினார்.

சபாநாயகர் மதியழகன் சபையை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். முதல்வர் கருணாநிதியோ கவர்னரிடம் எடுத்துக்கூறி மெத்த சிரமப்பட்டு அதை டிசம்பர் 2 – ஆம் தேதிக்கு மாற்றினார். டிசம்பர் 2 ஆம் தேதிக்கும் 5 ஆம் தேதிக்கும் இடையில் இருந்தது இரண்டே தினங்கள்தாம். அந்த இரண்டு நாள்கள் போருத்திருப்பதால் எந்தப் பிரளயமும் நடந்து விடப்போவதில்லை! இருந்தாலும் முதல்வர் கருணாநிதி ஏன் இப்படி நடந்து கொண்டார்? சபாநாயகரை மட்டம் தட்டவா? அது இன்று வரை யாருக்கும் புரியாத விஷயம்!

சபாநாயகர் மதியழகன் அந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிடவில்லை,
சட்டசபையைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் சபாநாயகருக்கே பூரண உரிமையுண்டு. தம் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கவர்னர் கூட்டத் தொடரையே இரத்து செய்த்து (Prorogue) செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்மனு’ தாக்கல் செய்தார், சபாநாயகர் மதியழகன். ஆனால், உயர்நீதிமன்றம் அந்தப் பிரச்சனையில் ஒரு முடிவு சொல்வதற்கு முன்பாகவே, 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்ற ஆளுநரின் உத்தரவுப்படி கூடியது. சபாநாயகர் மதியழகன் அந்தக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

சபை கூடியதும் தி.மு.க. அரசு மீது நம்பிக்கயில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த சபாநாயகர், தீர்மானத்தின் மீது பேசும்படி புரட்சித்தலைவரை அழைத்தார். புரட்சித் தலைவரும் எழுந்து நின்று பேசத் தொடங்கியதும் அவரைப் பேச விடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் பலர் கூட்டலிட்டுத் தடுத்தனர். அப்போது அவை முன்னாள் நாவலர் எழுந்து நின்று, சபாநாயகர் மீது கொடுகப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானமந்தான் முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு சபாநாயகர் மதியழகன், அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்கெனவே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது என்று கூறிப் புரட்சித் தலைவரைத் தொடர்ந்து பேச அனுமதித்தார்.

அப்பொழுது கல்வி அமைச்சரும் அவை முன்னவருமான நாவலர் எழுந்து. துணைச் சபாநாயகர் பெ. சீனிவாசன் தலைமை வகித்து தொடர்ந்து சபையை நடத்த வேண்டும்” என்று ஒரு திடீர்த் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுங்கட்சிக் கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆதரிப்பதாகக் குரல் எழுப்பினார்கள். உடனே துணை சபாநாயகர் பெ.சீனிவாசன் சபாநாயகர் இருக்கையை நோக்கிப்பாய்ந்து சென்றார். சபாநாயகர் மதியழகனோ தம் இருக்கையை விட்டுச் சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தார்.உடனே தி.மு.க. உறுப்பினர் ஒருவர் ஒரு நாற்காலியைத் தூக்கி வந்து, சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் வைத்தார். துணைச் சபாநாயகர் பெ. சீனிவாசன் அதில் அமர்ந்து கொண்டு அவர் ஒரு பக்க சபையை நடத்தத் தொடங்கினார்.

இவ்வாறு, ஆளுங்கட்சி சபாநாயகராகத் துணை சபாநாயகரான பெ.சீனிவாசன் இருந்துகொண்டும், எதிர்க்கட்சி சபாநாயகராக மதியழகன் இருந்து கொண்டும் போட்டி சட்டசபை நடத்தினர். அதனால் கூச்சலும் குழப்பமும் எழுந்தன.முடிவில், பிற்பகல் 2 மணிக்குச் சபாநாயகர் மதியழகன் சபையை டிசம்பர் 4 – ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு சபையை விட்டு வெளியேறினார். அவரோடு அண்ணா தி.மு.க. காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள்.

ஆனால், போட்டி சட்டமன்ற சபாநாயகராகச் செயல்பட்ட பெ.சீனிவாசன் தம் சட்டசபையை மேலும் அரைமணிநேரம் தொடர்ந்து நடத்தினார்.சபையை விட்டு வெளியேறிய சபாநாயகர் மதியழகன், அவர் தம்பி கே.ஏ.கே மற்றும் புரட்சித்தலைவர் ஆகிய மூவரும் ஒரு காரில் புறப்பட்டனர். அப்போது வெளியே கூடியிருந்த உறுப்பினர்கள் அவர்களை எதிர்த்துக் கோஷமிட்டதோடு செருப்புகளையும் எடுத்து வீசினர்.

இந்த சட்டமன்றம் முடமாகிவிட்டது. தி.மு.க. ஆட்சி நீடிக்கும் வரை இந்தச் சட்டசபைக்குள் நான் நுழையமாட்டேன் என்று அன்றுதான் அறிவித்தார், புரட்சித் தலைவர். அதற்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நீடித்த மூன்றாண்டு காலமும் புரட்சித்தலைவர் தமிழ சட்டமன்றக் கூட்டங்களுக்குச் செல்லாமல் புறக்கணித்தார்.


தொடரும்...

2 comments:

மதுரை சரவணன் said...

பழைய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

இதெல்லாம் தெரியாத செய்திதான்....
தொடருங்க.

Post a Comment