Tuesday, December 7, 2010

எம்.ஜி.ஆர் 18



புரட்சித் தலைவர் நடித்துக் கொண்டிருந்த படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் எல்லாருமே இலட்சாதிபதிகள் அல்லர் அவருள் சிலரைத தவிர மற்றவர்களெல்லாம் சாமானியர்கள்தாம்.அவர்களின் ஒரே முதலீடு புரட்சித் தலைவர்தான்.அவர் பெயரைச் சொல்லிக் கடன் வாங்கித்தான் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கட்டப் படப்பிடிப்புக்கும் எம்.ஜி.ஆரின் கால் ஷீட்டுக்களைக் காட்டி விநியோகஸ்தர்களிடமும், பைனான்சியர்களிடமும் பணம் வாங்கித்தான் அவர்கள் தங்கள் தயாரிப்பைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்த விநியோகஸ்தர்களையும் பைனான்ஸியர்களையும் அழைத்து சிலர் தொடர்ந்து மிரட்டிகொண்டருந்ததனால் அவர்களுள் சிலர் வாக்களித்த தொகைகளைக் குறிப்பிட்ட காலத்தில் கொடுக்காமல் காலம் கடத்தினார்கள். அதன் விளைவாகப் புரட்சித் தலைவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியிடப்பட முடியாமல் தாமதப்பட்டன.

அப்படி காலதாமதமாய் வெளிவந்த சில படங்கள் சிறப்பாக ஓடி வெற்றிப்பெற்றாலும் தயாரிப்பாளர்களுக்கு நட்டமே ஏற்படுத்தின; விநியோகஸ்தர்களும், திரையரங்க அதிபர்களும் தாம் இலாபம் பெற்றனர். அதற்குக் காரணம், படத்தயாரிப்பாளர்கள் பலரும் பைனான்ஸியர்களிடம் தொடரும் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்ததுதான். குறிப்பிட்ட காலத்திற்குள் படம் வெளிவந்தால் வட்டி குறையும்; தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு இலாபம் கிட்டும். தாமதமாகப் படம் வெளிவந்தால் அதிகரிக்கும் வட்டித் தொகை அவர்களுடைய இலாபத்தைக் குறைத்துவிடும்! இதுதான் திரையுலக பொருளாதாரம்.

இதை நன்கு அறிந்திருந்த எம்.ஜி.ஆரின் எதிரிகள் பைனான்ஸியர்ளை மிரட்டி, புரட்சித் தலைவரின் படங்களுக்கு வாக்களித்தப்படி உரிய காலத்தில் கடன் தொகையைக் கொடுக்காமல் தாமதிக்கச் செய்தனர். அதன் மூலம், புரட்சித் தலைவரை நடிக்கச் செய்து திரைப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் பலரை நட்டமடையச் செய்தார்கள்.

பின்னர், எம்.ஜி.ஆரை நடிக்கச் செய்து படம் தயாரிப்பவர்களுக்கு இனிமேல் இதுதான் கதி” என்று பிரச்சாரமும் செய்தனர். இவ்வாறு தொழில்துறையிலும் புரட்சித் தலைவரை செயலற்று விடச் செய்யவும் ஒழித்துக் கட்டவும் அவர் எதிரிகள் பெரும் முயற்சி செய்தனர். அதையும் மீறி புரட்சித் தலைவர் திரைப்படத் தொழிலில், அசையாது நிமிர்ந்து நின்றார். 1972 முதல் 1978 வரை ஆறாண்டுக் காலத்தில் அவர் 16 வெற்றிப் படங்களைக் கொடுத்தார்! இந்த முனையிலும் அவர் எதிரிகள் தோல்வியையே தழுவினார்கள்.

1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதியன்று புரட்சித் தலைவரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்; 14 – ஆம் தேதியன்று நிரந்தரமாகவே (டிஸ்மிஸ்) நிக்கினார்கள்; எம்.ஜி.ஆர் 16 – ஆம் தேதியன்று அது பற்றி அறிவித்தார். 18 – ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 3 ஆம் தேதிக்குள்- எண்ணிப் பதினைந்தே நாட்களுக்குள் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலும் 6000 கிளைகள் தொடங்கப்பட்டன. 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 15 நாள்களில் 10 இலட்சம் உறுப்பினர்க்கைச் சேர்ந்த சாதனையை உலகில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதற்கு முன்னர் சாதித்ததே இல்லை.

1949 இல் தொடங்கப்பட்ட தி.மு.க.வுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் – அதாவது, 1972இல் தான் -18,000 கிளைகளும், 15 இலட்சம் உறுப்பினர்களும் இருப்பதாகத் தி.மு.க. தலைவர் கருணாநிதியே அந்தச் சமயத்தில் ஒப்புக்கொண்டார். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் பத்து இலட்சம் உறுப்பினர்களையும், ஆறாயிரம் கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய சாதனை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட சாதனை இது என்றுதான் கூறவேண்டும். இந்த சாதனை, புரட்சித் தலைவருக்கு தி.மு.கழகத்திலும், பொதுமக்கள் மத்திலும் எத்துணை செல்வாக்கு இருந்தது என்பதை எடுத்துக்காட்டியது.
தொடரும்...

No comments:

Post a Comment