Friday, December 3, 2010

எம்.ஜி.ஆர் 16


நாஞ்சில் மனோகரன் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராவார். அவர் 1972 ஆம் ஆண்டில், பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்வதற்காகச்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் சென்றார். அவரைப் போலவே, பாராளுமன்றக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள், நாஞ்சிலாரைக் கண்டதும் தி.மு.க.வினர், பதட்டமடைந்தனர்.

”டேய் துரோகி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே நாஞ்சிலார் மீது பாய்ந்து அவரைத் தாக்கினார்கள்; இதய நோயாளியான அவருடைய நெஞ்சில் சரமாரியாக குத்தினார்கள். அங்கிருந்து பதறி ஓடிய நாஞ்சிலார், விமான நிலைய நிருவாகியின் அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டார். அங்கிருந்து தொலைபேசியின் மூலம் புரட்சித் தலைவருடன் தொடர்புகொண்டு தம்மைக் காப்பாற்றும்படி வேண்டுகோள்விடுத்தார்.

புரட்சித்தலைவர் மனோகரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ”கவலைப்படாதீர்கள், இன்னும் பத்தே நிமிடத்தில் நம் ஆட்கள் பறந்து வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள்!” என்றும் கூறினார். புரட்சித் தலைவர் தொலைப்பேசியைக் கீழே வைத்துவிட்டு சத்யா ஸ்டுடியோ பத்மநாபனிடம் நாஞ்சில் மனோகரனின் நிலைமையைச் சொல்லி, ”உடனே தேவையான ஆள்களோடு போய் நாஞ்சிலாரைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார். அடுத்த நிமிடம் பத்மநாபன் பத்துப் பேரோடு ஒரு காரில் ஏறி மீனம்பாக்கத்தை நோக்கிப் பறந்து சென்றார். புரட்சித் தலைவருக்கோ அவர் நண்பர்களுக்கோ ஓர் ஆபத்து என்றால், தம்மைப் பலி கொடுத்தாவது காப்பாற்றத் துடிக்கின்ற அற்புதமான தொண்டர், பத்மநாபன்.

பத்மநாபன் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் புயல்போல் புகுந்து, தி.மு.க. எம்.பி.க்களின் முற்றுகையைத் தகர்த்தெறிந்தார்; நாஞ்சிலாரை மீட்டுக்கொண்டு வந்து அடுத்த அரை மணி நேரத்தில் புரட்சித் தலைவரிடம் ஒப்படைத்தார். இப்படி இன்னும் எத்தனையோ கொலை வெறித்தாக்குதல்களுக்கு அ.தி.மு.க.வினர். ஆளாகியுள்ளனர். அதே நாஞ்சில் மனோகரன் 1980 ஆம் ஆண்டு மறுபடியும் தி.மு.வில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதை இந்த இடத்திலே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவர் இணைந்தவுடன் தி.மு.க வில் அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது.

புரட்சித் தலைவர் அ.தி.மு.க வை ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அவருக்கும், தி.மு.கழகத் தலைமைக்கும் இடையில் கடைசி நேர சமரச முயற்சி ஒன்று நடந்தது. முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் அது சம்பந்தமாகச் சத்யா ஸடுடியோவில் புரட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன், தம் தலைவரைப் பார்ப்பதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர். அவரைக்கடற்கரைச் சாலையில் வழிமறித்துச் சைக்கிள் செயினால் தாக்கினார்கள்.

முசிறிப்புத்தன் அவர்களிடமிருந்து உயிர் தப்பிப் புரட்சித் தலைவரிடம் வந்து செய்தியைச் சொன்னார். ஒரு கால் சற்றே ஊனமான அவரைக் கொலை வெறியோடு தாக்கி, உடல்முழுக்க இரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்களே என்று புரட்சித் தலைவர் மிகுந்த வேதனையடைந்தார்.

அந்த நிமிடம் வரை தி.மு.க. வோடு சமாதானத்திற்கு இசைந்து விடலாம் என்றுதான் புரட்சித் தலைவரும் கருதிக் கொண்டிருந்தார். ஆனால், இரத்தக் கடாகத்தில் மூழ்கி எழுந்தவர் போலத் தம் முன்னால் இரத்தம் வழிய வழிய வந்து நின்ற முசிறிப்புத்தனைப் பார்த்ததும் புரட்சித் தலைவரின் உள்ளம் துடித்தது.

சமாதானம் பேச வந்தவர்களைப் பார்த்து, ” ஒரு பக்கம் சமாதானம் பேசுகிறீர்கள்; இன்னொருபக்கம் என் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்ககுதல்களை ஏவி விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்! இது என்ன நாடகம்? இனி மேல் உங்களோடு சமரசத்திற்கே இடமில்லை!” என்று கூறினார்.

அதற்குப் பின்னர்தான் சமரச முயற்சி தோற்றது. இவ்வாறு அ.தி.மு.க. தோன்றுவதற்கு முன்னும் பின்னும் நடந்த, கட்டவிழ்த்து விடப்பட்ட கொலை வெறித்தாக்குதல்கள் கணக்கிலடான்காதவை ஆகும். இத்தகைய வெறித்தாக்ககுதலுக்குப் பலியாகி உயிர் துறந்த கழகத் தோழர்களின் தொகை மட்டும் 20 ஆகும். ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கும் தி.மு.கழகத் தலைமைக்கும் சம்பந்தமில்லை என்றும், ஆங்காங்கே உள்ள உணர்ச்சிவசப்பட்ட சிலர் தாமாகவே அவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தி.மு.க. விளக்கம் அளித்தது.

அ.தி.மு.க. மீது தி.மு.க. வினர் தாக்குதல் தொடுத்தது ஒருபுறமிருக்க மறுபுறம் அண்ணா தி.மு.க. தொண்டர்களின், மீதும் முன்னணி வீர்ர்களின் மீதும் தி.மு.க. அரசு தொடுத்த கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் மொத்தம் 48000 ஆகும். இது மிகைப்படுத்தப்பட்ட தகவலோ, கற்பனையோ அல்ல. அது மட்டுமா? புரட்சித் தலைவர் மீது அரசு தொடுத்த வழக்குகள் மட்டும் 19 ஆகும்.

இப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திட ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறைகள், தொடர்ந்த பொய்வழக்குகள் தொடுத்த தாக்குதல்கள் ஆகியவை ஏராளம் ஆகும்! இவ்வளவையும் மீறித் தான் கட்சியைக் கட்டி வளர்த்தார். புரட்சித் தலைவர்!

தொடரும்...

No comments:

Post a Comment