Wednesday, December 29, 2010

எம்.ஜி.ஆர் 24


இந்திரா காங்கிரஸ் சார்பில் பிரதமர் இந்திராகாந்தியைத் தவிர எஞ்சியுள்ள மத்திய அமைச்சர்களுள் பெரும்பாலோர் திண்டுக்கல் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தனர். சி.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், ஐ.கே.குஜ்ரால், ஷா நவாஸ்கான், கே. பிரம்மானந்த ரெட்டி, கே.வி. ரகுநாத ரெட்டி, கே.ஆர்.கணேஷ், பகவத் ஜா ஆஸாத், அப்துல் கபூர், உமாசங்கர் தீட்சித் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். அனைத்து இந்திய காங்கிரஸ் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பொதுச்செயலாளர் மரகதம் சந்திரசேகர் முதலியோரும் திண்டுக்கல் பிரசாரத்திற்குச் சென்றனர். திண்டுக்கல் தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் இந்திரா காங்கிரஸ் மிகத் தீவிரமாகய் இருந்தது என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும்.

ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காகப் பெருந்தலைவர் காமராஜர் மிகவும் தீவிரமாய்ப் பிரச்சாரம் செய்தார். அவரோடு ஸ்தாபன காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர்களான நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா முதலியோரும் திண்டுக்கல் தொகுதியில் சுற்றுப் பயணம் செய்தனர்.

மேற்சொன்ன அரசியல் ஜாம்பவான்களின் கிடுக்கித் தாக்குதலை எதிர்த்து மாயத்தேவரை வெற்றி பெறச் செய்யும் இமாலயப் பணியை ஆறுமாதக் குழந்தையான அண்ணா தி.மு.க. மேற்கொண்டது. அந்தக் கட்சியிலோ புரட்சித்தலைவர்தாம் மக்களை ஈர்க்கும் சக்தி கொண்ட ஒரே தலைவராய் இருந்தார். பொருளாதார பலமோ மிக மிகக் குறைவு. என்றாலும், புரட்சித்தலைவர் அந்த இமாலயப் பணியைத் தம் தோளில் சுமந்துகொண்டு இரவும் பகலும் பாடுபட்டார். அவர், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குப் பிரச்சார வேனில், வேட்பாளர் மாயத்தேவரையும் ஏற்றிக்கொண்டு புறப்படுவார்; மறுநாள் காலை 6 மணி வரை விடிய விடிய தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

புரட்சித்தலைவரைக் காண்பதற்காக ஆண்களும் பெண்களும் ஒவ்வோர் ஊரிலும் சாலை ஓரத்திலேயே காத்துக் கொண்டு நிற்பார்கள். அவர் இரவில் வர நேரிட்டாலும் அவரைக் காண்பதற்காகப் பகல் முழுக்கச் சாலை ஓரங்களிலேயே மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்! அக்கம் பக்கத்துக் கிராமத்து மக்கள் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து, நள்ளிரவு வரை காத்திருந்து, புரட்சித்தலைவரின் பேச்சைக் கேட்டார்கள்.

புரட்சித் தலைவரின் சலியாத உழைப்புக்கும் அயராத சுற்றுப்பயணத்த திட்டத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் வேட்பாளர் மாயத்தேவரே திணறினார். பல நள்ளிரவுக் கூட்டங்களில் புரட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே! அவர் அருகில் நிற்கும் வேட்பாளர் மாயத்தேவர் பசி மயக்கத்தாலும், சோர்வாலும் புரட்சித் தலைவரின் தோளிலேயே சாய்ந்து விடுவார்! அவரைத் தாயன்போடு தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்வார் புரட்சித் தலைவர்!

திண்டுக்கல் தொகுதிக்குப் பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து தேர்தல் பணியாற்றினர். அண்ணா தி.மு.க. கூட்டங்களில் கல்லெறிந்தனர்; அடி தடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்; அ.தி.மு.க. தொண்டர்களைக் கண்ட இடங்களில் வெட்டினர். கை கால்களை உடைத்தனர்; பிரச்சார வேன்களைக் கவிழ்த்தனர். வாக்காளர்களை அச்சுறுத்தினர்; இந்த வெறியாட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதியில் முதன்முதலில் களபலியானவர் வத்தலகுண்டு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரான ஆறுமுகம் ஆவார். இரத்த வெள்ளத்தில் பிணமாகி மிதந்த அவரைக் கண்ட பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ”பதிலுக்குப் பதில்!… பழிக்குப் பழி!” என்று கிளம்பிவிட்டனர். அந்தச் செய்தியை அறிந்ததும், எம்.ஜி.ஆர் விரைந்து சென்று, கம்பும் கழிகளும் அரிவாளும் தாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கில் திரண்டு விட்ட அ.தி.மு.க. தொண்டர்களை வழிமறித்ததார்.

அறிஞர் அண்ணாவின் தாரகமந்திரமான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை நெஞ்சில் சுமந்து அண்ணாவின் மேல் ஆணையிட்டு, அனைவரையும் அமைதிப் படுத்திக் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு அன்று எம்.ஜி.ஆர். செய்திருக்காவிட்டால் திண்டுக்கல் நகரம் போர்க்களமாகியிருக்கும்.

தொடரும்...

No comments:

Post a Comment