Monday, January 17, 2011

எம்.ஜி.ஆர் 25


இனையதள நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்...பணிசுமையின் காரணமாக கடந்த இரண்டு வாரமாக என்னால் பதிவுகளை இட முடியவில்லை. பேருக்கு வாழாமல் ஊருக்கு வாழ்ந்தவரின் பிறந்த நாளன்று எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது தெய்வச்செயல் தான்.

1973 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதியன்று தேர்தல் நடந்தது. மே 22 ஆம் தேதியன்று தேர்தல் முடிவு வெளியாயிற்று.பொறுமையின் சின்னமாய் அண்ணாவின் இதயக்கனியாய்த் திகழ்ந்த புரட்சித் தலைவரின் பொறுமைக்கே வெற்றிக் கிட்டியது.

ஆம்; அ.தி.மு.க. வேட்பாளர் கே. மாயத்தேவரே வெற்றி பெற்றார். பெற்ற வெற்றி சாதாரணமானதா? மொத்தம் பதிவான வாக்குகள் 5 இலட்சம். அவற்றுள் மாயத்தேவர் பெற்ற வாக்குகள் 2,60,930 ஆகும்! அதாவது பாதிக்கு மேற்பட்ட வாக்குகள்!

இரண்டாவது இடம் ஸ்தாபன காங்கிரசுக்கு (1,19,000 வாக்குகள்) கிட்டியது. மூன்றாவது இடம்தான் மாநில ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு (93,000வாக்குகள்) கிட்டியது. மத்தியில் ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுக்கோ பொறுப்புத் தொகையை (டிபாசிட்) இழந்த அவல நிலையும், நான்காவது இடமும் (11,000) வாக்குகள் கிடடின.

தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ. பாலசுப்பிரமணியமும் தம் பொறுப்புத் தொகையை இழந்தார்.புரட்சித்தலைவரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 1,42,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.அந்த வெற்றி அ.தி.மு.க.வின் முதல் வெற்றி மட்டுமல்ல; தமிழக்த்தின் தலைவிதியையே மாற்றவிருக்கும் வெற்றிகள் பலவற்றுக்கு முன்னோடி என்பதை அதற்குப் பின்னரும் சில அரசியல் தலைவர்கள் உணரவில்லை.!

திண்டுக்கல் வெற்றிச் செய்தி வெளியானபோது தொண்டர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்! பட்டாசு வெடித்தார்கள். ஆனால் அப்பொழுது தியாகராய நகரில் உள்ள தம்முடைய அலுவலகத்தில் இருந்த எம்.ஜி.ஆர். ”மிக்க மகிழ்ச்சி” என்று மட்டும் கூறிவிட்டு அதற்கு மேல் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாகி விட்டார்.

தம் தலைவருக்கு வெற்றி மாலை சூட அ.தி.மு.க. முன்னணி வீரர்கள் பலர் வந்தனர். அவர்களிடம், அங்கேயிருந்த ஒரு சிறிய அண்ணா சிலைக்கு மாலைகளை அணிவித்துப் போகும்படி எம்.ஜி.ஆர் கூறினார். வெற்றியைக் கண்டு கூத்தாடாமலும், தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் இருக்கம் மனப்பக்குவத்தைப் புரட்சித்தலைவர் எப்பொழுதோ பெற்றுவிட்டார்!

மாற்றுக் கட்சியினர் கூறியதுபோல புரட்சித் தலைவர் இந்திரா காங்கிரசுக்குக் கட்டுப்பட்டவரல்ல என்பதையும் அந்த வெற்றி பறைசாற்றியது! அவ்வாறெல்லாம் மாயத்தேவருக்காக உழைத்த உழைப்பை மாயத்தேவர் மறந்து விட்டு மீண்டும் தி.மு.கவில் 1980 ஆம் ஆண்டு இணைந்ததுதான் வேதனை.

தொடரும்...

No comments:

Post a Comment