Tuesday, December 28, 2010

எம்.ஜி.ஆர் 23


அக் கூட்டணியை – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை – ‘குட்டி காங்கிரஸ்’ என்றும் , இந்திரா காங்கிரஸின் எடுபிடி என்று தி.மு.க. சாடியது.பெருந்தலைவர் காமராஜரும், தந்தைப் பெரியாரும் புரட்சித்தலைவரின் அரசியல் திறமையைச் சரிவர எடையிடாமல் அவரை வெறும் நடிகர் என்னும் கண்ணோட்டத்திலேயே கணித்தனர்.ஆனால், மூதறிஞர் இராஜாஜியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சினரும் புரட்சித் தலைவரின் சக்தியை மிகவும் சரியாகக் கணித்து அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை நல்கினர்.

தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்ட்பிளாக், முஸ்லிம் லீக் தமிழரசுக் கழகம் ஆகிய கட்சிகள் ஓரணியில் இருந்தன.பொதுவாக இந்திரா காங்கிரஸ் புரட்சித தலைவரை ஆதரித்தாலும், அதில் ஒரு பகுதியினர் புரட்சித்தலைவரின் அரசியல் சக்தியைப் புரிந்து கொள்ளாமல் இருந்தனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் திண்டுக்கல் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திரா காங்கிரஸ் போட்டியிட விரும்பியது. மேலும் அக் கட்சியின் மேலிடம் அ.தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் தம் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்று விரும்பியது.

ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்பொழுது அரசியலில் ஏழு மாதக் குழந்தையாகவே இருந்தாலும், தமிழக அரசியலில் தன் முத்திரையைப் பதிக்க விரும்பும் ஓர் இயக்கமாக இருந்தது.ஆனால், இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைமை திண்டுக்கல் தொகுதியைத் தங்களுக்கே விட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்தியது.

திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதை ஆதரிப்பதும் உறுதியாகி விட்டது.ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதும் உறுதியாகிவிட்டது. அதைச் சுதந்திரக்கட்சி ஆதரித்தது.இந்த நிலையில் புரட்சித்தலைவர் என்ன செய்யவிருக்கிறார் என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

"அண்ணா தி.மு.க. என்பது திராவிட இயக்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக இந்திரா காங்கிரஸ் தூண்டிவிட்டுத் தொடங்கி வைத்த ஓர் அமைப்புத்தான். தி.மு.க. வைப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி முடித்ததும் எம்.ஜி.ஆர். தம் கட்சியை இந்திரா காங்கிரஸ் கட்சியோடு இணைத்துவிட்டு சினிமாவில் நடிக்கப் போய்விடுவார்” என்று முதல்வர் கருணாநிதி அடிக்கடி அப்போது கூறிக்கொண்டிருந்தார். அதனால், மக்களுள் ஒரு சாரார் புரட்சித்தலைவரின் இயக்கம் நீடித்து நடக்குமா என்று சந்தேகப்பட்டனர்.

மேற்குறித்த சந்தேகங்களையெல்லாம் போக்கும் வகையில் புரட்சித் தலைவர் ”திண்டுக்கல் தேர்தலில் தம் கட்சி போட்டியிடும்; இந்திரா காங்கிரசுக்கு அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாய் அறிவித்தார். கே. மாயத்தேவர் என்பவரை தம் கட்சி வேட்பாளராகவும் தேர்வு செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.வை ஆதரிப்பதாக அறிவித்தது.இந்திரா காங்கிரஸ், கரு. சீமைச்சாமி என்பவரை வேட்பாளராக நிறுத்தியது.தி.மு.க. சார்பில் பொன். முத்துராமலிங்கம் போட்டியிட்டார். ஸ்தாபன காங்கிரஸ் என்.எஸ்.வி. சித்தனைப் போட்டிடச் செய்தது. இந்த நான்கு வேட்பாளர்களுமே முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்திரா காங்கிரசோ மத்தியில் ஆளுங்கட்சி, அவ்விரு கட்சிகளும் தங்கள் பலம் முழுவதையும் பிரயோகித்துக் கடுமையாகப் பிரச்சாரம் செய்தன். தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் திண்டுக்கல்லிலேயே முகாமிட்டு கருணாநிதியும் தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்தார்.

தொடரும்...

No comments:

Post a Comment