Wednesday, March 7, 2012

எமெர்ஜென்சி

கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் தலையாயத் தலைவர்களில் மிக முக்கியமானவர்கள் பலர் இருந்தாலும் இந்த கட்டுரையின் நாயகர்கள் இருவர். ஒருவர் பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி. மற்றொருவர் சர்வோதய இயக்கத்தின் தலைவராக இருந்த ஜெயப்ரகாஷ் நாராயண் (ஜே.பி) .முன்னவர் அதிகாரமும் பணபலமும் படைத்தவர். பின்னவரோ அதிகாரத்தின்மீது துளியும் ஆசை வைக்காதவர். இந்த இருவருக்கும் இடையில் புகுந்த வில்லன், பதவி வாரிசாகத் துடித்துக் கொண்டிருந்த சஞ்சய் காந்தி. இந்த கட்டுரையை நான் எழுத காரணம் எமெர்ஜென்சி முடிவுக்கு வந்த மாதம் மார்ச் மாதம் தான்.

சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக்கொண்ட இந்திரா காந்திக்கும் குடியாட்சி முறையை முழுமையாக ஆதரித்த ஜேபிக்கும் இடையேயான இந்தப் போராட்டம் ஜூன் 1975 ல் தொடங்கியது.மார்ச் 1977 ல் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்த போது, குடியாட்சி முறை வென்றது. சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டது. இந்திய அரசியல் முற்றிலுமாக மாறியது. உலகின் மிகப் பெரிய குடியாட்சி நாடு என்று தற்பெருமை கொள்ளும் இந்த நாட்டில், இந்திரா காந்தியும் அவரது குடும்பமும் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஜேபியின் பெயர் வரலாற்றில் இருந்து முற்றிலுமாகத் துடைதெறியப்பட்டுவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் நடைபெற்ற, சக்திவாய்ந்த மாபெரும் இளைஞர் இயக்கம் ஒன்றுக்கு ஜேபி தலைமை வகித்தார். இன்றைய இளைஞர்களுக்கோ ஜேபி யார் என்றே தெரியாது!
என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
என்றார் வள்ளுவர். நன்றி மறப்பதைப் போன்ற பாவம் வேறெதுவும் இல்லை.ஆனால் அதைத்தான் இந்தியாவும் இந்தியர்களும் ஜேபிக்குச் செய்துள்ளனர். இது தொடர்ந்தால் எதிர்காலம் நம்மை நிச்சயம் மன்னிக்காது.

முதலில், நடந்த வரலாற்றின் சிறிய சுருக்கம். ஆகஸ்ட் 8 1942 ல் மகாத்மா காந்தி ஆரம்பித்த ''வெள்ளையனே வெளியேறு" இயக்கம் பிசுபிசுக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அந்த ஆண்டு தீபாவளி இரவு அன்று துணிகரமான நிகழ்வு ஒன்று நடந்தது. கடுங்காவல் சிறையான ஹசாரிபாக் சிறையிலிருந்து ஜேபி தப்பித்து வெளியேறினார். பிரிட்டிஷார் அவரை உயிரோடவோ அல்லது பிணமாவோ பிடிக்க, மாபெரும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். இந்த நிகழ்விலிருந்து தான் தேசிய இயக்கம் புத்துயிர் பெற்றது. காலனி ஆதிக்கம் வீழ்ந்து, இந்தியா தன் முதல் சுதந்தரத்தை பெற்றது.

இந்த சுதந்திரம் 25 ஜூன் 1975 நள்ளிரவில், வீழ்ந்தது. அன்று இரவு, குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அஹ்மத், ஒரு சில வரிகளில் ஓர் ஆணையை வெளியிட்டார். அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 352 ,உபபிரிவு 1 ,எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி, இந்தியாவின் குடியரசுத் தலைவராகிய பக்ருதின் அலி அஹ்மத் என்னும் நான் , உள்நாட்டு கலவரங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் உள்ளது என்பதால், நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்கிறேன்.

நெருக்கடி நிலை அமுலில் இருந்த 20 மாதங்களிலும் தனிமனித சுதந்திரமும் அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. கொடுமையான அடக்குமுறைக்கு ஆளான மக்கள், பயத்தால் வாய்மூடி மெளனமாக ஆனார்கள். தேசம் முழுவதிலும் கல்வியாளர்கள், வழக்கறின்கர்கள், அலுவலர்கள் எனப் பலரும் சுயமரியாதையை இழந்து,நெருக்கடி நிலை அதிகார வர்க்கத்தினர் கால்களில் விழுந்து அவர்களது புகழைப் பாடினர். கொஞ்சம் குனி என்றால், தரையிலேயே விழுந்தனர் சிவில் சர்வீஸ் அதிகாரிகள்! நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் குடிமக்களுக்கு உயிர் வாழும் உரிமைகூடக் கிடையாது என்று தீர்ப்பளித்தனர். ஒருசிலரைத் தவிர பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அனைவரும் ஆண்மை இழந்து, அடிபணிந்தனர். நாடு முழுவதும் இருள் பரவி இருந்தது. உலகின் மிகப் பெரிய குடியாட்சி நாடு கொஞ்சம் கொஞ்சமாகச் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தது.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் இடையில், ஒரே ஒருவர், ஒரு தனி மனிதர், வேதனையிலும் விரக்தியிலும் வெந்து கொண்டிருந்தார். முதலில் சண்டிகரில் கைதியாக...அடுத்து மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் ஒரு டயாலிசிஸ் மசினுடன் இணைக்கப்பட்டபடி....பின்னர் பாட்னாவில் ஒரு சாதாரண வீட்டில்...ஆனாலும் எதற்கும் கலங்காத, தலை வணங்காத ஜேபி என்ற மாமனிதர்தான் இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, இரண்டே வருடங்களுக்குள்ளாக அதைத் தோற்கடித்துக் காட்டினார். இந்தியா இரண்டாவது முறையாகச் சுதந்திரம் பெற்றது. இத்தனையும் நடந்த போது அவரது உடல் படுமோசமாகவும் அவரது உயிர் பிரியும் நிலையிலும் இருந்தது என்பது முக்கியம்.

இத்தகைய தலைவரை இன்று நாம் முழுமையாக மறந்துவிட்டோம். அதே நேரம் நியாயமான, நேர்மையான, சுயநலமற்ற நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு சிலரை புழுவைப் போலப் பார்த்து அவமரியாதை செய்கிறோம்.அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜேபி. நாட்டுக்காக அவர் அனைத்தையுமே தியாகம் செய்தார். தன் இளமையை, குடும்பத்தை, ஆரோக்கியத்தை, உயிரையும்... அதன்மூலம் இந்த நாடு சுதந்தரத்தைப் பெற்று. அதை தொடர்ந்து பாதுகாக்க வழிவகை செய்தார்.

No comments:

Post a Comment