கிரேக்கத் தத்துவ ஞானியான டயோஜனஸ், ஒரு வீதியின் வழியே நடந்து கொண்டி ருந்தார். வழியில், சிறுவன் ஒருவனை பலரும் சேர்ந்து அடித்துக் கொண்டிருப் பதைக் கண்டார். அவர்களை விலக்கி விட்டவர், சிறுவனை அடிப்பதற்கான
காரணத்தைக் கேட்டார். அவர்கள், "கேட்கச் சகிக்காத வார்த்தைகளால்... அசிங்கமாக பேசியதால் இவனை அடிக்கிறோம்!'' என்றனர்.
உடனே, "அதற்காக இந்தச் சிறுவனை அடிக்காதீர்கள். இவனின் தந்தை யார் என்பதை அறிந்து, அவனைப் பிடித்து அடியுங்கள். மகனுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தராத தந்தையே தண்டனைக்கு உரியவன்'' என்றார் டயோஜனஸ்!
மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தனின் குரு சாணக்கியர். இவரது அர்த்த சாஸ்திரம் அரசியல் பொக்கிஷம்!
இவர் ஒரு நாள் அரசவையில், "மன்னா, ஏழை மக்கள் கடும் குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு இலவச கம்பளி கொடுத்து உதவ வேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தார். அரசனும் இதை ஏற்று, கம்பளி வழங்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தான்.
அரசாங்க செலவில் வாங்கப்பட்ட கம்பளிகள், ஏழைகளுக்கு விநியோகிக்க வசதியாக சாணக்கியரது வீட்டில் அடுக்கப்பட்டன. இந்த விஷயம், ஊர் எல்லையிலிருந்த கொள்ளையர்களுக்கும் தெரிய வந்தது. அன்று இரவு, சாணக்கியரது வீட்டுக்குச் சென்று கம்பளிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். திட்டப்படி அன்று இரவு சாணக்கி யரது வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கு, அரதல் பழசான - கிழிந்த போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் சாணக்கியர். அருகில் அவரின் தாயாரும் அப்படியே! கொள்ளையர்களுக்கு ஆச்சரியம். திருட வந்ததையும் மறந்து சாணக்கியரை எழுப்பினர்!
கண் விழித்த சாணக்கியர் ஆச்சர்யமுற்றார். எதிரே நின்றிருந்த திருடர்களில் ஒருவன், "ஐயா... நாங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் கம்பளிகளைத் திருடவே வந்தோம். இங்கு புதிய கம்பளிகள் இவ்வளவு இருந்தும் நீங்களும் உங்கள் தாயாரும் கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிறீர்களே? புதிய கம்பளிகளில் இரண்டை உங்களது தேவைக்காக எடுத்திருக்கலாமே?'' என்று கேட்டான்.
அதற்கு சாணக்கியர், "அவை, ஏழை- எளியோருக்கு வழங்கப்பட இருக்கும் அரசாங்கப் பொருட்கள். அதை எப்படி நான் உபயோகிக்க முடியும்? மன்னன் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்னாவது?'' என்றார்.
இதைக் கேட்டதும் சாணக்கியரின் கால்களில் விழுந்த திருடர்கள், தங்களை மன்னிக்க வேண்டினர். 'இனி, வாழ்நாளில் நாங்கள் திருடவே மாட்டோம்' என்று அவர் முன் சத்தியமும் செய்தனர்!
சாணக்கியர், இன்றளவும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால், அதற்குக் காரணம்... அவரது அரசியல் தந்திரங்கள் மட்டுமல்ல; தன்னலமற்ற அவரது தூய்மையான வாழ்வும்தான்!
சுதந்திரப் போராட்ட காலம்! புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு வர இருந்தார் ஜவஹர்லால் நேரு. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆதரித்த சமஸ்தானம், 'நேருவின் கார், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையக் கூடாது!' என்று தடை விதித்தது. ஆனாலும், குறிப்பிட்ட நாளில் புதுக்கோட்டை எல்லையை நெருங்கினார் நேரு. அவரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
சமஸ்தான அதிகாரி ஒருவர் காரின் அருகில் வந்து, தடை உத்தரவுக்கான கடிதத்தை நேருவிடம் காட்டினார். அப்போது, நேருவுடன் தீரர் சத்தியமூர்த்தியும் இருந்தார். அவர் நேருவின் காதில் ஏதோ முணுமுணுத்தார்!
அடுத்த நிமிடம்... இருவரும் காரில் இருந்து இறங்கி, ஊருக்குள் நடக்க ஆரம்பித்தனர். பதறிப்போன அதிகாரி ஓடி வந்து அவர்களை மறித்தார். உடனே சத்தியமூர்த்தி, "நேருவின் கார் சமஸ்தான எல்லைக்குள் வரக் கூடாது என்பதுதானே உங்கள் உத்தரவு? தடை காருக்குத்தானே தவிர, நேருவுக்கு அல்ல!'' என்றார். வேறு வழியின்றி அதிகாரிகள் பின்வாங்கினர்.
சத்தியமூர்த்தியின் சமயோஜிதத்தை பாராட்டிய நேரு, பிறகு புதுக்கோட்டை மக்களை சந்தித்து விட்டுத்தான் டெல்லி திரும்பினார்!
கர்மவீரர் காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.
ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார்.
உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.
உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே.
ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்'' என்று கூற... உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்!
No comments:
Post a Comment