Thursday, April 30, 2009

சிறுகதை

முருகேசனுக்கு திடீரென்று எதிர்காலத்துக்குப் போகும் ஆசை வந்தது. எப்படிப் போவது என்றுதான் தெரியவில்லை. நண்பர்களிடம் கேட்டுப்பார்த்தான். அவர்களோ அது நடக்கவே நடக்காது என்றார்கள். சினிமாக்களில் பார்க்கும் டைம்மெஷின்கள் எல்லாம் கற்பனைதான். அவை நிஜத்தில் கிடையாது என்று சொன்னார்கள்.
அவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது.
'தவம் செய்து கடவுளிடம் வரம் கேட்டால் என்ன?'
சரியான ஐடியா!
இரவு பகல் பார்க்காமல் கடுமையாக தவம் செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் "டொய்ங்க்..." என்று ஒரு சத்தம். அவன் முன் தோன்றினார் கடவுள். "(அதேதான்) பக்தா! உன் பக்திக்குமெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்"
புல்லரித்துப்போனது முருகேசனுக்கு.
"எனக்கு எதிர்காலத்துக்குப் போகும் சக்தியைக்கொடு ஆண்டவா".
யோசிக்கவே இல்லை கடவுள். "அப்படியே ஆகட்டும். கண்களை மூடிக்கொள். கண்களைத் திறக்கும் போது நீ எதிர்காலத்தில் 25 வருடங்கள் தாண்டியிருப்பாய்."
சொல்லிவிட்டு காணாமல் போனார் கடவுள்.
கண்களை மூடினான் முருகேசன். சில வினாடிகள் காத்திருந்தான். கண்களைத் திறந்து பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை. கடவுளையும் காணவில்லை. ஏமாற்றத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தான். எதிரில் டீக்கடையில் மக்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பெஞ்சில் வழக்கம் போல பேப்பர் ஒன்று கிடந்தது. சரி! கடவுள் நம்மை ஏமாற்றி விட்டார் என்று நினைத்துக்கொண்டான். சரி, பேப்பர் படித்து விட்டுப்போகலாமே என்று பெஞ்சில் போய் உட்கார்ந்தான் அவன்.
பேப்பரை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றொரு தேசிய விருது...
காவிரிப் பிரச்னைக்காக மீண்டும் கூடுகிறது நடுவண் நீதிமன்றம்...
பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை பயணம்...
இலங்கையுடன் விடுதலைப்புலிகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. அழைப்பு...
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்...
பிரதமர் சென்னை வருகை : வரலாறு காணாத பாதுகாப்பு...
முல்லைத் தீவு வீழ்ந்தது - விரைவில் புலிகள் பிடிபடுவார்கள் : இலங்கை அதிபர் பேட்டி...
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு...
ஆப்கன், ஈராக்கில் வீரர்களைக் குவித்தது அமெரிக்கா...
என்று செய்திகள் இருந்தன. வெறுத்துப்போனான் முருகேசன்.
என்னடா இந்தக் கடவுள், இப்படி எதிர்காலத்துக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி நன்றாக ஏமாற்றி விட்டாரே! எல்லாமே இப்படி வழக்கமான செய்திகளாகவே இருக்கிறதே என்று வருத்தமும் கோபமுமாய் பக்கத்தைத் திருப்பினான். முதல் பக்கம் பார்க்கலாம் என்று பேப்பரை மடித்தவனின் கண்ணில் தலையங்கம் பட்டது.
"தங்கம் விலை உச்சத்தைத்தொட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 500 ரூபாய் உயர்ந்து ரூ.19,255-ஐ தொட்டது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,52,000-ஐ தாண்டியது" என்று அச்சாகியிருந்தது.
ஆச்சரியத்துடன் தேதியைப் பார்த்தான் முருகேசன்.
'01 மே 2035' என்று இருந்தது!

1 comment:

நவீன் said...

seriousaana visayatha camedyaa nalla eludhiyirukeenga..

Post a Comment