Thursday, December 3, 2009

எங்கள் மதமே உயர்ந்தது...!

தங்கள் நிலத்தில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக அருகிலுள்ள ஊர்ச் சந்தைக்கு தங்களது வண்டிகளில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே இருந்த ஒரு ஆலமரத்தினடியில் இளைப்பாறிச் செல்லலாமென்று அந்தப்பக்கம் வந்த விவசாயிகள் பலரும் அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த கூட்டத்தில் சைவம், வைணவம், புத்தம் என்று மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் பேச்சுகளுக்கிடையே அவர்களுக்குள் அவரவர் மதமே உயர்ந்தது என்று விவாதம் வந்தது.சைவ மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் "சிவபெருமான்தான் அனைத்துக்கும் மேலானவர். சைவ மதம்தான் உலகில் உண்மையான சமயம்" என்றார்.வைணவ மதத்தைச் சேர்ந்த இன்னொருவர் "இல்லையில்லை திருமால்தான் பெரியவர். வைணவமே உண்மையான சமயம்" என்றார்."புத்தரை மறந்து விட்டு நீங்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. புத்த மதம்தான் அனைத்திலும் சிறந்தது" என்றார் புத்த மதத்தைச் சேர்ந்த மற்றொருவர்.அவ்வளவுதான் அங்கு கூடியிருந்த மூன்று மதத்தினரும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து தங்கள் மதத்தின் பலத்தைக் காட்டும் வேகத்தில் பேசி, கடைசியில் அடித்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர், "ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள். எது உண்மையான சமயம் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதானே?" என்றார்."ஆமாம்" என்றார்கள் அனைவரும்."நீங்கள் கொண்டு வந்திருக்கும் பருத்தியை விற்பதற்காகத்தானே சந்தைக்குச் செல்கிறீர்கள். அங்கு யாருடைய பருத்தி அதிக விலைக்குப் போகும்? சைவருடையதா? வைணவருடையதா? புத்த சமயத்தவருடையதா? உங்களில் யாராவது சொல்லுங்கள் என்று கேட்டார் பெரியவர்."சந்தையில் யாருடைய பருத்தி தரமுடையதாக இருக்கிறதோ அதுதான் அதிக விலைக்குப் போகும். சந்தையில் யாருடைய நிலத்தில் விளைந்தது என்று பார்த்து யாரும் வாங்குவதில்லை" என்று பதிலளித்தார் ஒருவர்."நல்லது" என்ற பெரியவர், "அதே போலத்தான் கடவுளும். நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.எப்படிப் பருத்தி வாங்குபவன் எந்த நிலத்தில் விளைந்தது என்று பார்ப்பதில்லையோ அது போல கடவுளும் சமயம் பார்ப்பதில்லை. யார் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனரோ அவரே கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர். அவரைப் பொறுத்தவரை எல்லா சமயமும் ஒன்றுதான். இனி மேலாவது மதத்தின் பெயரால் சண்டை போடாதீர்கள்." என்றார்.இதைக் கேட்ட மும்மதத்தினரும் அமைதியடைந்து அந்தப் பெரியவரை வணங்கி விட்டு ஒற்றுமையாகச் சந்தைக்குக் கிளம்பினர்.

5 comments:

cheena (சீனா) said...

அன்பின் வெங்கடேஷ்

அருமையான போதனை - கதை நன்று - நல்வாழ்த்துகள்

தங்க முகுந்தன் said...

ஏன் நீங்கள் இந்த மூன்றையும் எடுத்துக் கொண்டீர்கள் என எனக்குப் புரிகிறது! அருமையான கருத்துக்கு வாழ்த்துக்கள்

Venkatesh said...

தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி.....சீனா மற்றும் தங்கமுகுந்தன் அவர்களே

Unknown said...

Hi Venkatesh ,

It is one of the best examples to teach the core concept of the religion.

Santhosh

பின்னோக்கி said...

நல்ல கதை கருத்து. அருமை.

Post a Comment