Monday, September 14, 2009

சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் ஆரம்பிக்கலாமா?

சுவிட்சர்லாந்து வங்கிகள் என்றாலே வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் குறித்த பாதுகாப்புக்குப் பிரபலமானவை என்பது சர்வதேசப் பாமரர்களுக்கும் தெரிந்த உண்மை. சுவிஸ் வங்கிகளின் ரகசியத்தன்மை 1934-ம் ஆண்டு சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சுவிஸ் வங்கிகள் பரபரப்பாக இயங்கி வந்தாலும், 'இரும்புத் திரை வங்கிகளாக' இவை மாறத் தொடங்கியது அதன் பிறகுதான். பின்னணியில், இரண்டு காரணங்கள் இருந்தன.
ஹிட்லர் ஜெர்மனியை ஆண்ட 1931-ம் ஆண்டு, 'ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருக்கக் கூடாது' என்று அறிவித்திருந்தார். அதை மீறி சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். 1932-ல் பிரான்ஸின் மேல்தட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிராக பிரெஞ்சு இடதுசாரிகள் கலகம் செய்யத் துவங்கினர். அதிலிருந்தே சுவிஸ் வங்கிகளின் நடைமுறைகள் மேலும் இறுக்கமாகின. சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரை, சொத்துக் குவிப்பைக் கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணம் குவிப்பது அந்த நாட்டின் சட்டப்படி குற்றமே கிடையாது. எனவேதான் உலகெங்கும் அரசாங்கங்களின் கண்களில் மண்ணைத் தூவி, வருமான வரித் துறையுடன் கண்ணாமூச்சி ஆடி, கறுப்புப் பணம் சேர்க்கும் பணக்காரர்களும், மகா மெகா ஊழல் அரசியல்வாதிகளும் சுவிஸ் வங்கிகளில் பணம் குவிக்கின்றனர்.
'எங்கள் நாட்டில் இந்த அமைச்சர் ஊழல் செய்து சேர்த்த பணம் இங்கு வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளதா?' என்றோ, 'வருமானத்தில் கணக்கு காட்டப்படாத பணம் உங்கள் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளதா?' என்று கேட்டாலோ, சுவிஸ் வங்கிகள் சொல்லும் ஒரே பதில், 'ஸாரி'. ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்ற பிரத்யேகக் குற்றங்களுக்கு மட்டும் விதிவிலக்காக விசாரணையின் பொருட்டு சுவிஸ் வங்கிகள் வாடிக்கையாளர் குறித்த ரகசியங்களைத் தரும்.
ஆனாலும்கூட, அந்தக் குற்றங்கள் முழுவதுமாக நிரூபிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். மேலும், சுவிஸ் மாஜிஸ்டிரேட் ஒருவர் தீர விசாரித்து, 'சுவிட்சர்லாந்து சட்டங்களின்படி இது தண்டிக்கப்படக்கூடிய குற்றம்' என்று சான்றிதழ் அளித்தால் மட்டும்தான் இது சாத்தியம். இல்லாமல்போனால், சுவிட்சர்லாந்து அரசாங்கமே கேட்டாலும் சுவிஸ் வங்கிகள் வாடிக்கையாளர் குறித்த விவரங்களைத் தர வேண்டிய அவசியமில்லை. இது தவிர விவாகரத்து, சொத்துப் பிரிவினை போன்ற எந்த ஒரு காரணத்துக்காகவும் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் தரப்பட மாட்டாது. வருமானத்தை மிஞ்சி சொத்து சேர்ப்பது, பணம் சேர்ப்பது அந்த நாட்டுச் சட்டப்படி குற்றமில்லை. இது குறித்த விவரங்களை யாராவது கேட்டு, வங்கிகள் கொடுத்தால்தான் சுவிட்சர்லாந்து குற்றவியல் சட்டத்தின்படி கடுமையான குற்றமாகும்.
அப்படியானால், இந்த வங்கிகளில் யார் வேண்டுமானாலும் அக்கவுன்ட் ஓப்பன் செய்துவிட முடியுமா?
சுவிஸ் வங்கிகள் வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்குக் கேட்கும் ஆவணங்கள்.
1. பாஸ்போர்ட்
2. இருப்பிடச் சான்றிதழ், கேஸ் கனெக்ஷனுக்கான பில்கள், குடிநீர் வரி கட்டிய பில்கள் போன்றவை.
3. பொருளாதாரப் பின்னணிக்கான ஆவணங்கள். உங்கள் கம்பெனியின் டாகுமென்ட்ஸ், பிசினஸ் ஒப்பந்தங்கள் ஆகியவற்றைக் காட்டலாம்.
4. நீங்கள் சுவிஸ் வங்கிகளில் கட்டும் பணம் உங்களுக்கு எந்த வருமானத்தின் மூலம் வந்தது என்பதற்கான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் ஆயுதக் கடத்தலும் போதைப் பொருள் கடத்தலும் சுவிஸ் அரசியலமைப்பின்படி தடைசெய்யப்பட்டு இருப்பதால், அத்தகைய சட்டவிரோதச் செயல்களின் மூலம் வந்த வருமானம் இல்லை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். மற்றபடி அது கறுப்புப் பணமா, ஊழல் பணமா என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.
என்ன, ரொம்ப சிம்பிளாகத்தானே இருக்கிறது, நாமும் சுவிஸ் வங்கியில் ஒரு அக்கவுன்ட் ஓப்பன் செய்யலாம் என்று கிளம்புகிறீர்களா? ஒரு நிமிஷம்... பெரும்பாலான சுவிஸ் வங்கிகளில் 'மினிமம் பேலன்ஸ்' கண்டிப்பாகத் தேவை. அந்த மினிமம் பேலன்ஸ்... சுமார் ஆறு கோடியே அறுபத்தைந்து லட்ச ரூபாய்.
இதையெல்லாம் விட முக்கியம், சுவிஸ் வங்கியில் ஏற்கெனவே கணக்கு வைத்திருக்கும் ஒருவரின் அறிமுகம் தேவை. அவரை நீங்கள் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்து டவுசர் கிழிவது நிச்சயம்.
சுவிஸ் வங்கிக் கணக்குகள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம் திரும்பி இருக்கிறது.
காரணம், அமெரிக்கா தொடங்கி மூன்றாம் உலக நாடுகள் வரை தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து இறுக்கி நெரிக்கும் பொருளாதார நெருக்கடி. 'உள்ளூர்ச் சந்தையும் அரசாங்கமும் பங்குச் சந்தையும் இன்ன பிறவும் பொருளாதார நெருக்கடிகளில் தள்ளாடும்போது தங்கள் தேசத்தைச் சேர்ந்த மில்லியன், பில்லியன், டிரில்லியன் கணக்கான பணம் சுவிஸ் வங்கிகளில் முடங்கிக் கிடப்பது என்ன நியாயம்?' என்று உலக நாடுகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்தியப் பண மதிப்புப்படி 72 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த இந்தியாவின் இடைக்கால பட்ஜெட் தொகை ரூ. 9 லட்சத்து 53 ஆயிரத்து 231 கோடி. ஆக மொத்தம், கிட்டத்தட்ட ஏழு இந்திய பட்ஜெட்டுகளுக்கான இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ளன.

1 comment:

ப.கந்தசாமி said...

I will open the account after I receive the promised prize money from Nigeria

Post a Comment