Sunday, September 27, 2009

தேர்ச்சிக்குத் தேவை பயிற்சி

ஜப்பான் தேசத்து அரசன் ஒருவன், தன் மகனுக்கு முடிசூட்ட நினைத்தான். நாடாளப் போகும் ஒருவனுக்கு விழிப்பு உணர்வு அவசியம் என்று கருதியவன், தன் மகனை ஞானி ஒருவரிடம் அனுப்பி வைத்தான். அவர் தரும் பயிற்சிகள், மகனின் விழிப்பு உணர்வை வளர்க் கும் என்பது அரசனின் எண்ணம். ஞானியின் ஆசிரமத்தில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தான் இளவரசன். ஒரு நாள், திடீரென தடியால் அவனைத் தாக்கினார் ஞானி.இளவரசன் அதிர்ந்தான். ''என்ன இது? ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்?'' என்று கேட்டான்.''உனது விழிப்பு உணர்வை மேம்படுத்துவதற்கான முதல் பயிற்சி இதுதான். திடீர் திடீரென தடியால் உன்னைத் தாக்குவேன். அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும்'' என்றார். இளவரசன் திகைத்தான். ஆரம்பத்தில்... ஞானியின் தாக்குதலில் இருந்து அவனால் தப்பிக்க இயலவில்லை; பல முறை அடி வாங்கினான். ஆனால், போகப் போக அவனது அறிவும் உணர்வும் கூர்மையாயின. ஞானியின் காலடி ஓசையைக்கூடத் துல்லியமாகக் கணித்து, அவரிடம் இருந்து தப்பித்தான். ஞானி மகிழ்ந்தார். ''பயிற்சியின் முதல் கட்டம் முடிந்தது. இனி, தூங்கும்போது தாக்கு வேன். எச்சரிக்கையாக இரு'' என்றார். இதிலும் ஆரம்ப கட்டத்தில் பல முறை அடி வாங்கியவன், அடிக்கு பயந்து தூக்கத்தையே இழந் தான். ஒரு கட்டத்தில் தூக்கத்திலும் உள்ளுணர்வு விழித்திருக்கும் நிலையை எட்டினான். ஒரு நாள், தூங்கிக் கொண்டிருக்கும் அவனைத் தாக்குவதற்காக தடியை ஓங்கினார் ஞானி. அவனோ, கண்களைத் திறக்காமலேயே தாக்குதலைத் தடுத்தான். ஞானிக்குத் திருப்தி! மறுநாள், ''இனி மூன்றாம் கட்ட பயிற்சி. தடிக்கு பதிலாக வாளால் தாக்குவேன். கொஞ்சம் அசந்தாலும் உயிர் போய் விடும். ஜாக்கிரதை!'' என்று எச்சரித்தார். இளவரசன் அதிர்ந்தான். 'விழிப்பு உணர்வை மேம்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறாரே... ஒரு முறை, இவர் தூங்கும் போது நாம் தாக்கினால் என்ன?' என்று எண்ணினான். மறுகணம், ஞானியின் முகம் சிவந்தது. ''என்னையே தாக்கத் திட்டமிடுகிறாயா? என்ன துணிச்சல்?'' என்று அவன் மீது பாய்ந்தார். 'மனதில் நினைப்பதையும் அறியும் அளவுக்கு விழிப்பு உணர்வு மிகுந்தவராக இருக்கிறாரே இந்த ஞானி' என்பதை அறிந்த இளவரசன் வெட்கித் தலை குனிந்தான். ஞானியிடம் மன்னிப்புக் கேட்டான். அவர் அளவுக்கு, விழிப்பு உணர்வில் தானும் மேம்பட உறுதி கொண்டான். பயிற்சிகள் தொடர்ந்தன. விரைவில் தேர்ச்சி பெற்றான். அவனை வாழ்த்தி வழியனுப்பினார் ஞானி!

No comments:

Post a Comment