Monday, September 14, 2009

எய்ட்ஸ் நோயாளிக்கு வாய்த்த அதிர்ஷ்டம்...

'அதிசயம்... ஆனால், உண்மை!' என்று சொல்லும்படியாக எங்காவது, எப்போதாவது, ஏதாவது சில சம்பவங்கள் நடப்பதுண்டு. அந்தப் பட்டியலில் இந்த விஷயத்தையும் சேர்க்கவேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் எதிர்கால நலன் கருதி, பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட ஊர் அது. அந்த ஊரைச் சேர்ந்த சரவணனுக்கும், கீதாவுக்கும் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஒரு வருடத்துக்கு முன்பு கீதா அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு ஆராதனா என்று பெயர் சூட்டி சந்தோஷப்பட்டிருக்கிறார்கள். 'இதுல என்ன அதிசயம் இருக்கு..?' என்று கேட்கிறீர்களா?
சரவணன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்! அவரைக் கரம் பிடித்தபோது
கீதாவுக்கு எய்ட்ஸ் கிடையாது. குழந்தை ஆராதனா எய்ட்ஸ் நோய் பாதிப்பில்லாமல் பிறந்திருக்கிறாள். கீதாவுக்கும் எய்ட்ஸ் பரவவில்லை. அதுதான் அதிசயம்!
சரவணனின் வீட்டுக்குப் போனோம். ''பாப்பா தூங்கிட்டு இருக்கா... வாங்க வெளியில உட்கார்ந்து பேசுவோம்!'' என்றவர், வீட்டு வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டார். ''நாமக்கல்ல இருக்கிற ஒரு காலேஜ்ல நான் டிகிரி படிச்சேன். ஃபைனல் இயர் படிக்கும்போது, ஃபர்ஸ்ட் இயர்ல வந்து சேர்ந்தா கீதா. அவளை முதல்ல பார்த்ததுமே மனசுக்குள்ள ஒரு பூ பூத்துச்சு. 'இதயம்' படத்துல வர்ற முரளி மாதிரி என்னோட காதலை கீதாகிட்ட போய்ச் சொல்லத் தயங்கியே... ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு.
இந்த நிலையில... ஃபைனல் இயர்ல எங்க செட் பசங்க நாலு பேரு குற்றாலம் டூர் போயிருந்தோம். நாங்க தங்கியிருந்த இடத்துல ஒரு வெளிநாட்டுப் பொண்ணு இருக்கறதா சொல்லி புரோக்கர் ஒருத்தன் வந்தான். வெளிநாட்டுப் பொண்ணுன்னு சொன்னதால, ஆசையில ஓகே சொல்லிட்டோம். நாங்க தங்கியிருந்த காட்டேஜுக்கு பொண்ணை கூட்டிட்டு வந்தான் புரோக்கர். நாலு பேரும் விடியற வரைக்கும் அந்த பொண்ணோட சந்தோஷமா இருந்தோம். என் நண்பர்கள் எல்லாரும் காண்டம் யூஸ் பண்ணினானுங்க. என்னோட திமிரு... வெளி நாட்டுப் பொண்ணுகிட்ட என்னடா பிரச்னை இருக்கப் போவுதுன்னு, காண்டம் யூஸ் பண்ணல. என் வாழ்க்கையில நான் செஞ்ச முதல் தப்பும் அதுதான்... கடைசி தப்பும் அதுதான்.
ஊருக்கு வந்ததும் திரும்பவும் கீதாவைத் தொடர ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷ போராட்டத்துக்குப் பிறகு தான் அவ என் காதலை ஏத்துக்கிட்டா. அதுக்குப் பிறகு நான் அவளுக்கு உண்மையா இருக்க ஆரம்பிச்சேன். இந்த சூழ்நிலையில கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. அப்போதான் கீதா, தன்னோட வீட்டுல எங்க காதலைச் சொன்னா...'' என்று சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூடு பறக்கத் தேநீர் கொண்டுவந்தார் கீதா.
தேநீரை நம்மிடம் கொடுத்துவிட்டு சரவணன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் கீதா. ''நான் காதலிக்கற விஷயத்தைச் சொன்னதும் அப்பா என்னை அடிக்க வந்துட்டாரு. அப்புறம் என்னோட பிடிவாதத்தைப் பார்த்த பிறகு கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு. நாமக்கல் ஏரியாவுல கல்யாணத்துக்கு முன்னாடி பையனுக்கும் பொண்ணுக்கும் ஹெச்.ஐ.வி. டெஸ்ட் பண்ணிக்கறது ஒரு சம்பிரதாயமாகவே இருக்கு. நாங்களும் டெஸ்ட் பண்ணினோம். அப்போதான் இவருக்கு எய்ட்ஸ் இருக்கறதை கண்டுபிடிச்சாங்க. அந்த நேரத்துல இவரு அழுத அழுகை எனக்கு மட்டும்தான் தெரியும். எய்ட்ஸ் இருக்குன்னு நான் இவரை விட்டுட்டு போயிருந்தா... கண்டிப்பா அன்னிக்கே இவரு செத்திருப்பாரு. முதல்ல அதிர்ந்துபோன நான், மெள்ள ஜீரணிச்சுக்கிட்டேன். 'கல்யாணம் பண்ணிகிட்டு உன்னோட வாழ்க்கையை கெடுக்க விரும்பல கீதா'ன்னு சொல்லி ஒதுங்கப் பார்த்தாரு. ஆனா, நான் பிடிவாதமா இவரை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன். இவருக்கு எய்ட்ஸ் இருக்கற விஷயம் இன்னும் எங்க குடும்பத்துல யாருக்கும் தெரியாது.
கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி எய்ட்ஸ் நோய்க்கு ட்ரீட்மென்ட் கொடுக்கற டாக்டர் ஆனந்தைப் போய் பார்த்தோம். 'உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு?'னு அவரு என்னை திட்டினாரு. என் காதலோட உறுதியைப் பார்த்துட்டு, 'சரி... கல்யாணம் பண்ணிக்கங்க. ஆனா, குழந்தையெல்லாம் பெத்துக்கக் கூடாது. எப்போ செக்ஸ் வச்சுக்கிட்டாலும் கண்டிப்பா காண்டம் யூஸ் பண்ணணும்'னு சொன்னாரு. கல்யாணம் முடிஞ்சு ரெண்டரை வருஷம் அப்படித்தான் இருந்தோம். குழந்தை இல்லைன்னு ஊருல அவரைப் பத்தித் தப்பா பேசுறதைக் கேட்டுட்டு, என்னால தாங்கிக்க முடியல. எனக்கு அந்த வியாதி வந்தாலும் பரவாயில்ல... குழந்தை பெத்தே ஆகணும் முடிவு பண்ணினேன். ஆனா, அதுக்கு எங்கவீட்டுக்காரர் சம்மதிக்கவே இல்ல. ஒரு நாள் நைட் அவரை கட்டாயப்படுத்தி காண்டம் இல்லாம செக்ஸ் வச்சுக்கிட்டேன். நான் கர்ப்பமானேன். அதுக்குப்பிறகு டாக்டர் ஆனந்த்தை போய் பார்த்தோம். அவரு மறுபடியும் என்னை திட்டித் தீர்த்துட்டு, 'எப்படியோ உனக்கு அந்த கிருமிகள் பரவியிருக்கும். பொறக்கப்போற குழந்தைக்காவது அது இல்லாம பார்த்துக்குவோம்'னு சொல்லி ட்ரீட்மென்ட் கொடுத்தாரு. ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லாம குழந்தை பிறந்துடுச்சு. அதுக்குப் பிறகு எனக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்தாங்க. எனக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்ல. சில பேருக்கு ஆறு மாசத்துக்கு பிறகுதான் தெரியும்னு டாக்டர் சொன்னாரு. இப்போ ரெண்டு வருஷம் ஆகப்போகுது. அதனால மறுபடியும் செக் பண்ணி பார்த்துக்கலாம்னு டாக்டர் கிட்ட போனோம். எந்த சாமி புண்ணியமோ... எனக்கு எய்ட்ஸ் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு!'' என்று கண் கலங்கினார் கீதா.
''இது எப்படி சாத்தியமாகும்..?'' என்ற கேள்வியோடு டாக்டர் ஆனந்த்தை சந்தித்தோம். ''நிஜமாகவே இது மெடிக்கல் மிராக்கிள் தான். அந்தப் பொண்ணுகிட்ட நான் பேசிய வரைக்கும் பீரியட் டைம் முடிஞ்சு சரியா பதினான்காவது நாள் ரெண்டு பேரும் செக்ஸ் வச்சுருந்திருக்காங்க. அதனால ஒரே முயற்சியில கர்ப்பமாகிட்டா. அந்த நேரத்துல அந்தப் பொண்ணோட உடலுறுப்புகள்ல புண் எதுவும் இல்லாம இருந்திருக்கணும். அதோட உடம்புல எதிர்ப்பு சக்தியும் அதிகமா இருந்திருக்கணும். அதனால தான் ஹெச்.ஐ.வி. அவங்கள பாதிக்கல.அதுக்குப் பிறகு அவங்க தொடர்ந்து காண்டம் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இனி காண்டம் இல்லாம இது மாதிரி ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு அவங்களை எச்சரிக்கை பண்ணி ருக்கேன்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்தவங்களும் இதையே ஒரு முன் உதாரணமா எடுத்துகிட்டு காண்டம் இல்லாம உடலுறவு வச்சுக்க முயற்சிக்கக்கூடாது. அப்படி வச்சுக்கிட்டா, கண்டிப்பா எய்ட்ஸ் வரும்!'' என்று எச்சரித்தார்.
நன்றி: ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment