நான் கற்றதையும் பெற்றதையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டி முற்பட்டதன் விளைவு இந்த எழுத்துக்கள்..............
Wednesday, October 7, 2009
கவசம் எப்போது பாதுகாக்கும்
தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த வீரன் ஒருவன் அக்பருக்கு இரும்புக் கவசம் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். போர்க் காலத்தின் போது பாதுகாப்பிற்காக இரும்புக் கவசத்தை அணிந்து கொள்வதற்குத் தகுந்த முறையில் வீரன் கவசத்தை உருவாக்கி இருந்தான்.இரும்புக் கவசத்தைப் பார்த்து மகிழ்ந்த மன்னர் அதனை அரண்மனையிலிருந்த சிலை ஒன்றுக்கு அணிவிக்கச் சொன்னார். படை வீரர்களைக் கூப்பிட்டு சிலையை வாள்களால் தாக்குமாறு உத்தரவிட்டார். வாள்களால் தாக்கிய பின்பு சிலை உடையாமல் உள்ளதா? என்பதைச் சோதிக்க விரும்பினார்.வீரர்களும் சிலை மீது பலம் கொண்ட மட்டும் ஆயுதங்களால் தாக்கினார்கள். சிலை சிதறி மண்ணில் விழுந்தது. வீரர்கள் சிலை உடைந்து போன விபரத்தை மன்னரிடம் கூறினார்கள். மன்னர் அதிர்ச்சியுடன் சிலையைப் பரிசளித்த வீரனைக் கூப்பிட்டு கோபமாய்ச் சத்தமிட்டார்."மூடனே, நீ கொடுத்து விட்டுப் போன கவசத்தை அணிந்து போருக்குச் சென்றால் என் நிலைமை என்ன ஆகும்?" என்று ஆவேசத்துடன் கத்தினார். அன்பளிப்பு தருவார் என எதிர்பார்த்திருந்த வீரனுக்கு அக்பரின் கோபமான வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்தியது. மன்னரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட வீரன் அடுத்த முறை நல்ல கவசத்தைச் செய்து வருவதாகக் கூறிச் சென்றான்.இதையறிந்த பீர்பால் கவசமளித்த வீரனைக் கூப்பிட்டார். அரசர் கூறியது போல் உறுதியான கவசத்தை உருவாக்கிக் கொண்டு முதலில் தன்னை வந்து பார்க்குமாறு கூறினார். சில நாட்கள் கடந்தன. இரவு பகலாய்க் கண்விழித்து புதிய இரும்புக் கவசம் ஒன்றை உருவாக்கி அதை பீர்பாலிடம் கொண்டு வந்து காண்பித்தான். பீர்பால் அவ்வீரனிடம் சில யோசனைகளைக் கூறினார். அதன்படி அவ்வீரன் அக்பரைக் காணச் சென்றான்."அரசே, இந்த முறை நான் செய்து கொண்டு வந்திருக்கும் கவசம் மிகவும் உறுதியானது. பரிசோதித்துப் பார்த்தால் அதன் உண்மை புரியும்" என்றார்.அக்பரும் தனது பணியாளைக் கூப்பிட்டு அந்தக் கவசத்தை வேறொரு சிலையில் மாட்டச் சொன்னார்."அரசே, இம்முறை இந்தக் கவசத்தை சிலைக்கு அணிவிக்க வேண்டாம். நானே மாட்டிக் கொள்கிறேன். உங்கள் வீரர்களை வாளைக் கொண்டு என்னைத் தாக்கச் சொல்லுங்கள்" என்றான்.அக்பர் அதிர்ச்சி அடைந்தார். "உன் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது?" என்றார் அக்பர்."என் உயிரை விட உங்கள் உயிர் முக்கியம். தயங்க வேண்டாம். அரசே என்னைத் தாக்கச் சொல்லுங்கள்." என்றான் அவ்வீரன். உடனே அக்பரும் வீரனைத் தாக்குவதற்கு உத்தரவிட்டார். அரண்மனை வீரர்கள் ஆயுதங்களால் தாக்கத் துவங்கினார்கள்.இரும்புக் கவசம் அணிந்திருந்த வீரன் அனைத்து போர்முறைப் பயிற்சிகளையும் கற்றிருந்தபடியால் அரண்மனை வீரர்களைத் திருப்பித் தாக்கினான். உடலில் கவசம் அணிந்திருந்ததால் அவனுக்கு அடி எதுவும் படவில்லை. அரண்மனை வீரர்களுக்குக் காயமேற்பட்டது. இதைக் கண்ட அக்பர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சண்டையை நிறுத்தும்படி கூறினார்."வீரனே, எதற்காக எமது வீரர்களிடம் சண்டையிட்டாய்?" என்றார் அக்பர்."மன்னிக்க வேண்டும் அரசரே! இந்தக் கவசத்தை அணிந்து கொண்டு தாங்கள் போருக்குப் போகும் போது எதிரிகள் உங்களைத் தாக்கினால் நீங்கள் திருப்பி சண்டையிடுவீர்கள் அல்லவா? அப்படித்தான் என்னை ஆயுதங்களால் தாக்கியவர்களை நான் தடுத்து நிறுத்தி, திரும்பத் தாக்குதலை நடத்தினேன்." என்றான்.அக்பருக்குத் தன் தவறு புரிந்தது.வீரனுக்கு இந்த யோசனையைச் சொன்னவர் பீர்பால்தான் என்று தெரிந்து கொண்டு அவரையும் பாராட்டினார்.
Labels:
சிறுகதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment